கொழும்பில் நடத்தப்படக்கூடிய IIFA விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ளும் நட்சத்திரங்களுக்கு எதிராக தென்னிந்திய திரைத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அடுத்த மாதம் கொழும்பில் நடத்தப்படுவதாகத் திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச இந்திய திரைப்பட கழகத்தின் விருது வழங்கும் விழாவை 'இரத்தக் கறை படிந்துள்ள' இலங்கையில் நடத்தக்கூடாது என்று தென்னிந்திய திரைத்துறை சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
தமது கோரிக்கையை மீறி கொழும்பில் விழா நடக்கும் பட்சத்தில், அதில் கலந்துகொள்ளும் நட்சத்திரங்களின் படங்களை திரையிடாமல் புறக்கணிக்கப்போவதாக தென்னிந்திய திரைத்துறையைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் வெள்ளியன்று சென்னையில் நடத்திய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியத் திரைப்படக் கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஊழியர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரைப்பட உரிமையாளர்கள் ஆகியோர் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக இந்தக் கூட்டத்தின் முடிவில் எடுக்கப்பட்ட தீர்மானம் கூறுகிறது.
"இந்த விருது வழங்கும் விழாவை வேறு எங்கு வேண்டுமானாலும் நடத்திக்கொள்ளுங்கள். ஆனால் இரத்தக் கறை படிந்த இலங்கையில் நடத்தப்படுவதைத்தான் தாங்கள் எதிர்ப்பதாக" அத்தீர்மானம் கூறுகிறது.
ஆனால் திட்டமிட்டபடி ஜூன் 3-5 தேதிகளில் கொழும்பில் இந்த விழா நடக்கும் என்று இதன் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
0 commentaires :
Post a Comment