ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ |
இலங்கையில் 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான மோதல் காலப்பகுதியில் இடம்பெற்ற நிகழ்வுகள் குறித்து ஆராய்வதற்கான ''போர்க்கால படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு''வுக்கான உறுப்பினர்களை இலங்கை ஜனாதிபதி நியமித்துள்ளார்.
எட்டு உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஆணைக்குழு 2010 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி முதல் 6 மாதங்களுக்குள் தனது பரிந்துரைகளை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்குமாறு பணிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆணைக்குழுவின் தலைவராக சித்தரஞ்சன் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன், டாக்டர். அம்ரிதா றோகான் பெரேரா, பேராசிரியர். முகமட் தாஹிர் முகமட் ஜிஃப்ரி, பேராசிரியர். கருணாரட்ண ஹங்கவத்த, சந்திரபால் சண்முகம், ஹேவா மாதர கமகே சிறிபால பலிககார, திருமதி. மனோகரி இராமநாதன், மாக்ஸ்வெல் பராக்ரம பரணகம ஆகியோரும் இந்த ஆணைக்குழுவில் இடம்பெறுவர்.
போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது குறித்தும் ஆணைக்குழு பரிந்துரைக்கும் |
எதிர்காலத்தில் இவ்வாறான நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும், எதிர்காலத்தில் அனைத்து சமூகங்கள் மத்தியில் நல்லிணக்கத்தையும், மேலும் தேசிய ஒருமைப்பாட்டையும் உருவாக்க தேவையான விடயங்கள் குறித்தும் இந்தக் குழு தனது பரிந்துரைகளை வழங்கும்.
போர்க் காலகட்டங்களில் நடந்தவை குறித்து ஆராயவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் ஒரு உள்ளூர் மட்டத்திலான ஏற்பாட்டை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது என்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கான சந்திப்பு ஒன்றில் இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி கூறியதை ஜனாதிபதி அங்கீகரிப்பதாகவும் அமைச்சரவை கூறியுள்ளது.
போர் நிறுத்தம் மீறப்பட்டமைக்கு இட்டுச் சென்ற காரணங்கள் குறித்தும் அதனை அடுத்து தொடராக நடந்த நிகழ்வுகள் குறித்தும் அவற்றுக்கு காரணமானவர்கள் குறித்தும் ஆராய்ந்து இந்த ஆணைக்குழு பரிந்துரைகளை செய்யும் என்று ஜனாதிபதின் உத்தரவு கூறியுள்ளது.
அத்துடன் இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்தும் இந்த ஆணைக்குழு பரிந்துரைக்கும்.
இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் நடவா வண்ணம் தடுக்கும் வகையிலான நிறுவனமயப்படுத்தப்பட்ட மற்றும் சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் குறித்தும் ஆணைக்குழு தனது பரிந்துரைகளை செய்யும்.
தென்னாபிரிக்க அனுபவங்கள் மற்றும் இராக் குறித்த பிரிட்டனின் விசாரணைகளின் அனுபவங்கள் ஆகியவையும் இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் ஒரு பகுதி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜனாதிபதி அமைச்சரவைக்கு கூறியுள்ளார்.
0 commentaires :
Post a Comment