5/16/2010

அரசியல் தீர்வுக்காக மக்கள் அணிதிரள வேண்டும்

தேர்தல் முறையில் மாற்றம் செய்வதென்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது. அரசியலமைப்பில் செய்யப் படவுள்ள திருத்தத்தில் இது பிரதானமானது. விகிதா சாரப் பிரதிநிதித்துவ முறைக்குப் பதிலாக விகிதாசார முறையும் தொகுதிவாரி முறையும் கலந்த தேர்தல் முறை நடைமுறைக்கு வரவிருக்கின்றது. இத் தேர்தல் முறை மாற்றத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எதிர்ப்புத் தெரிவித்த மறுதினம் தமிழ்நாட்டில் வெளிவரும் தினசரியான ‘தினமணி’ அதன் ஆசிரியர் தலையங்கத்தில் எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றதைப் பார்க்கும் போது இரண்டு எதிர்ப்புகளுக்கும் பொதுவான ஒரு பின்னணி உள்ளதா என்ற சந்தேகம் தோன்றுகின்றது.
விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையை நீக்குவது சிறுபான்மை யினருக்குப் பாதகமானது என்கிறார் சுரேஷ் பிரேமச்சந்திரன். இந்த மாற்றம் தமிழ் மக்களுக்குத் தீங்கானது என்கின்றது தினமணி. இரண்டு கருத்துகளுமே பிழையானவை.
விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை சிறுபான்மையினருக்கு நன்மை பயப்பதல்ல என்பதற்குப் பல உதாரணங்களைக் கூறலாம். சுதந்திர இலங்கையின் முதலாவது பாராளுமன்றத் தேர்தல் தொடங்கி விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை நடைமுறைக்கு வரும் வரை புத்தளம் தேர்தல் தொகுதியின் பிரதிநிதியாக முஸ்லிம் ஒருவரே தெரிவு செய்யப்பட்டார். விகிதாசாரப்பிரதி நிதித்துவ முறை நடைமுறைக்கு வந்த பின் புத்தளம் மாவட் டத்திலிருந்து ஒரு முஸ்லிமாவது தெரிவு செய்யப்படவில்லை. புத்தளம் மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை இல்லாமலாக்கிவிட்டது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் வீழ்ச்சிய டைந்ததையும் உதாரணமாகக் கூறலாம்.
தொகுதிவாரி முறை தமிழ் மக்களுக்குத் தீங்கானது என்பதும் கற்பனையே. தமிழ்ப் பிரதேசங்களிலுள்ள தொகுதிகளிலிருந்து தமிழர்களே தெரிவு செய்யப்படுவர்.
மேலும், விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை முற்றாக நீக்கப்படப் போவதில்லை என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். தொகுதிவாரி முறையும் விகிதாசார முறையும் இணைந்த கலப் புத் தேர்தல் முறையையே அரசாங்கம் சிபார்சு செய்திருக் கின்றது.
உண்மைநிலை இவ்வாறிருக்க, தேர்தல் முறை மாற்றத்துக்கு எதிரான குரல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்தும் தமிழ் நாட்டிலிருந்தும் ஒரே காலத்தில் ஒலிப்பது பற்றி ஆழமாக நோக்க வேண்டியது அவசியமாகின்றது.
அரசியலமைப்புத் திருத்தம் பற்றி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்ற அதேவேளை இனப் பிரச்சினையின் தீர்வுக் கான பேச்சுவார்த்தை பற்றியும் பேச்சுகள் அடிபடுகின்றன. தேர்தல் முறை மாற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதன் மூலம் அரசியல்தீர்வுப் பேச்சுவார்த்தையைத் திசைதிருப்புவதற்கான முயற்சி முன்னெடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுவது நியாயமானதே. விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையை மாற்று வது தமிழ் மக்களுக்குத் தீங்கானது என்ற உண்மைக்குப் புறம் பான காரணத்தை வலியுறுத்துவது இச் சந்தேகத்தை வலுப் படுத்துகின்றது.
அரசியல் தீர்வுக்கான முயற்சிகளைத் திசைதிருப்பிக் குழப்புவதில் புலிகள் எப்போதும் கண்ணுங் கருத்துமாக இருந்தார்கள். தனி நாட்டுக் கொள்கைக்கு வலு சேர்ப்பதற்காகவே அவர்கள் அவ் வாறு நடந்துகொண்டார்கள். புலிகளின் இந்த நிலைப்பாட்டுக்கு ஆதரவாகச் செயற்பட்ட வட்டாரங்களிலிருந்து விகிதாசார முறை மாற்றம் தமிழருக்குத் தீங்கானது என்ற கருத்து வருவது அரசியல் தீர்வுக்கான முயற்சியைக் குழப்பும் திட்டத்தின் ஒரு அம்சமாக ஏன் இருக்க முடியாது?
நடைமுறைச் சாத்தியமற்ற இலக்குக்காக அரசியல் தீர்வு முயற் சிகள் பல தடவைகள் திசைதிருப்பப்பட்டிருக்கின்றன. இதன் ஒட்டுமொத்த விளைவாகத் தமிழ் மக்கள் சொல்லொணாத் துன் பங்களை அனுபவித்துவிட்டார்கள். இந்த நிலை இனிமேல் ஏற் படாதிருக்க வேண்டுமானால் மக்கள் விழிப்படைந்து அரசியல் தீர்வுக்காக அணிதிரள வேண்டும்.
editor.tkn@lakehouse.lk

0 commentaires :

Post a Comment