5/14/2010

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தலைமையிலான உள்ளுராட்சி மன்றங்களில் எதுவித ஊழல்களும் இடம்பெறவில்லை- கிழக்கு மாகாண ஆளுனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமையிலான திருகோணமலை நகரசபையில் ஊழல்கள் இடம்பெறுவதாக அறிவிப்பு. கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் வழிநடத்துகின்ற உள்ளுராட்சி மன்றங்களில் எவ்வித ஊழல் மோசடிகளும் நடைபெறவில்லை. முறைகேடுகள் நடைபெற்றதாக நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த தவிசாளர் தலைமையிலான திருகோணமலை நகராட்சி மன்றத்தில் ஊழல்கள் மலிவடைந்திருப்பதாக கிடைக்கப்பெற்றிருக்கின்ற முறைப்பாடுகளை தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த சபையின் தலைவருக்கெதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன என கிழக்கு மாகாண ஆளுனர் அட்மிரல் மொஹான் விஜய விக்ரம தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஆங்கில வார இதழான சன்டே ரைம்ஸ்சில்(கொழும்பு பதிப்பு) வெளியான செய்தி தொடர்பான மறுப்பறிக்கையினை வெளியிடுகின்ற போது மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். தொடர்ந்து அவர் குறிப்பிடுகையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் முதலமைச்சர் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியானது தனித்து போட்டியிட்டது. அதனால் அக்கட்சியின் சில அரசியல் எதிர்ப்பாளர்கள் மாகாண சபையில் வழமையான சில நடவடிக்கைகளை ஊடகங்கள் மூலம் திரிவுபடுத்துவதன் ஊடாக முதலமைச்சருக்கும் அவரது கட்சியினருக்கும் களங்கம் ஏற்படுத்த முனைந்தார்கள். இலங்கையில் உள்ள அனைத்து மாகாண சபைகள், அமைச்சுக்கள்,திணைக்களங்கள், உள்ளுராட்சி மன்றங்களில் கணக்காய்வுகள் வருட இறுதியில் மேற்கொள்வது வழமையான விடையமாகும். இதனைக்காரணம் காட்டி முதலமைச்சருக்கோ அல்லது அவரது கட்சிக்கு எதிராகவோ பொய்யான வதந்திகளை பரப்புவதன்மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் நிர்வாகத்தில் இடம்பெறுகின்ற ஊழல் மொசடிகளை திசைதிருப்ப முனைவது வேடிக்கையான விடயம் எனவும் குறிப்பிட்டார் அதே நேரம் முதலமைச்சரின் கட்சி கடந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டதனால் அரசிற்கும் முதலமைச்சரது கட்சிக்கும் இடையில் பாரிய பிளவு ஏற்பட்டதுபோல் மாயையை தோற்றுவிக்க ஊடகங்கள் மூலம் சிலர் எத்தனிக்கின்றார்கள் எனவும் அவர் தனது மறுப்பறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

0 commentaires :

Post a Comment