4/27/2010

தமிழர் எதிர்ப்பு-அமிதாப் பரிசீலனை

சர்வதேச இந்திய திரைப்பட அக்கடமியின் விருது வழங்கும் விழா இலங்கையில் நடத்தப்படவுள்ளமை குறித்து தமிழர் அமைப்புக்களால் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அடுத்து அதன் ஏற்பாட்டுக்குழு உடனடியாகக் கூடி விவாதிக்கவுள்ளதாக அந்தக் குழுவின் விளம்பரத் தூதுவரான நடிகர் அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார்.
இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா ஜூலையில் இலங்கையில் நடக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழர்கள் அரசாங்கப் படைகளால் அநியாயமாக கொல்லப்பட்டதாக குற்றஞ்சாட்டுகின்ற இந்திய தமிழர் அமைப்புக்கள் இந்த விழாவை இந்திய திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.
அத்துடன் இந்த விழாவின் ஏற்பாட்டில் முக்கியஸ்தராக திகழுகின்ற சர்வதேச இந்திய திரைப்பட அமைப்பின் விளம்பர தூதுவரான நடிகர் அமிதாப் பச்சனும் இந்த விழாவைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறிவருகிறார்கள்.
அதன்படி ''நாம் தமிழர் இயக்கத்தினர்'' அவரது வீட்டை முற்றுகையிடும் போராட்டம் ஒன்றையும் மும்பையில் ஞாயிறன்று நடத்தினார்கள்.
அக்கடமியின் உறுப்பினர்கள் சிலர்
அக்கடமியின் உறுப்பினர்கள் சிலர்
அதனையடுத்து கருத்து வெளியிட்டிருக்கின்ற நடிகர் அமிதாப் பச்சன் அவர்கள், அனைவரின் உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக இணையத்தில் கருத்து வெளியிட்டிருக்கின்ற அமிதாப்பச்சன் அவர்கள், அந்த ஏற்பாட்டுக் குழுவினர் போராட்டம் நடத்தியவர்களை சந்தித்துப் பேசியதாகவும், ஆர்ப்பாட்டக்காரர்களால் சமர்ப்பிக்கப்பட்ட மகஜர் ஒன்றையும் அவர்கள் பெற்றுக் கொண்டதாகவும் கூறினார்.
அத்துடன் இந்த விடயம் குறித்து ஆராய்வதற்காக அந்தக் குழுவினர் உடனடியாக கூடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த விவகாரம் குறித்து ஒரு இறுதி வழியையும், தீர்வையும் காண அவர்கள் முயற்சிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 commentaires :

Post a Comment