நடந்து முடிந்த  பாராளுமன்றத் தேர்தலின் முடிவுகள் என்பது மிகத் துயரமாகவும் வேதனையாகவும் அமைந்துவிட்டது. இதில் வேதனை, துயரம்  என்பது நாம் ஆதரவளித்த  அனைத்திலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபை யானது  தேர்தலில் தோல்வியுற்றது என்பதற்காகவல்ல. இலங்கையில் வாழும் கணிசமான தமிழர்கள் தொடர்ந்தும் இனவாதச் சிந்தனையுள் பேணிப் பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதே எமது வேதனைக்குரிய காரணமாக உள்ளது.
எமது தலித் சமூகத்திற்கு மட்டுமல்ல அனைத்துத் தமிழ் பேசும் மக்களின் எதிர்கால வளர்ச்சிக்கு   தடையாகவும், இடையூறாகவும்  தொடர்ந்து வரும் அரசியல் சக்தி என்பது  இன்றைய ரி.என்.ஏ என அழைக்கப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பேயாகும். இவர்கள் இன்றும் காவிக் கொண்டாடிக் கோண்டு அலையும் அரசியல் கோட்பாட்டு சிந்தனை என்பது மிகப் பெரிய வரலாற்றுப் பாரம் பரியம் கொண்டது. இவர்கள் இன்றைய பாராளுமன்றத் தேர்தலுக்காக முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனம் என்பது கூட எமக்கும், அனைத்து தமிழ் மக்களுக்கும் புதிதான ஒரு விடயம் அல்ல என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். இவர்களின்  அரசியல் முன்னோடிகளான , ‘தந்தை’ ( )  ‘ஜீ.ஜீ’  ( ) ‘தளபதி’ ( ) போன்றவர்கள்  மேற்கொண்ட அரசியல் ‘சாணக்கியத்தை’ தான் இவர்களும் பின்பற்றி  வருகின்றார்கள். இதில் எந்த மாற்றத்தையும் நாம் கண்டுவிட முடியாது.
அவர்களும் ஆண்ட பரம்பரை நாம் மீண்டும் ஒருமுறை ஆளுவோம்  என்றார்கள்… கொன்றார்கள்… ! இவர்களும் இன்றும் அதையே தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் நினைவூட்டி வாக்குகளைப் புடுங்கினார்கள். இவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் தொடக்கத்திலேயே அதனை நீங்கள் காணலாம்.
'இலங்கைத் தீவில் தமிழ் தேசிய இனம்' என்ற தலைப்பில் கீழ்காணும் விடயத்தை
நினைவுறுத்தினார்கள்.
“..பதினாறாம் நூற்றாண்டில் மேற்கத்தேய வல்லரசுகளின் வருகைக்கு முன்னதாக இலங்கைத் தீவிலே மூன்று இராஜதானிகள் இருந்தன. அவற்றில் ஒன்று வடக்கிலே தமிழருக்குச் சொந்தமாக இருந்தது. மத்திய மலையகத்திலே இருந்த கண்டி இராச்சியம் தான் கடைசியானதாக 1815ல் பிரித்தானியரிடம் வீழ்ச்சியடைந்தது…” என்பதோடு ஆயுதப்போராட்டத்தை தூண்டிய தமது முன்னோடிகளின் அரசியல் சாதனைகளையும் பட்டியலிட்டார்கள். அது மட்டுமல்ல இவர்கள் தமிழ் மக்கள் காதுகளில் தொடர்ந்தும் பூ சுற்றும் நடவடிக்கையையே பேணிவருகின்றார்கள்.“எமது மக்களையும், அவர்களின் நிலங்களையும் அழிப்பதற்கு அங்குலம், அங்குலமாக அரசு  முன்னேறும் வேகத்தை நிறுத்துவதற்கான முதற்படி இதுவேயாகும்” என்றும் இவர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளனர். இந்த ‘முதற்படி, கடசிப்படி என்பதெல்லாம் இவர்கள் பாராளுமன்றப் படி ஏறுவதற்காகவே என்பதை மக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.
எங்களிடம்  யானைப் படை, குதிரைப்படை, வான்படை, கடல்படை, எல்லாளன்படை எல்லாம் இருக்கின்றது  எமது தமிழீழ மண்ணின் ஒரு அங்குலத்தையேனும் சிங்கள இனவாத அரசால்  பறித்துவிட  முடியாது நாம் உள்ளுக்க வரவிட்டு அடிப்போம் , நொருக்குவோம் என்ற புலிகளையே இன்று நாட்டிலையும் காணோம், காட்டிலையும் காணோம். ஆனால் இவர்கள் தாம்  பாராளுன்றப் படி ஏறி தமிழ் மக்கள் தொடர்ந்து கொல்லப்படுவதையும், தமிழ் மக்களின் நிலங்கள் அங்குலம் அங்குலமாக பறிபோவதையும் தடுக்கப் போகிறார்களாம். அது எவ்வாறு சாத்தியம் என்பதை இவர்களுக்கு வாக்களித்தவர்கள் தான் கூறவேண்டும்.
இவ்வாறான பலத்துடன் இருந்த புலிகளையே  இலங்கை அரசு  அழித்தொழித்துவிட்ட நிலையில்  தொடர்ந்தும் இனவாதத்தை காரணம் காட்டி இவர்களால் எப்படி தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கமுடியும்?. மேலும் இவர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் “…ஆனால் எவரும் இதுவரை இதனைத் தடுத்து நிறுத்தவில்லை. பல ஆண்டுகளாக இந்தியாவும், சர்வதேச சமூகமும் இது தொடர்பாக எழுப்பிய கரிசனைகளை இலங்கை அரசாங்கம் ஏனைய நாடுகள் எவையும் தமக்கு அறிவுரை கூறவோ, வழிகாட்டவோ முடியாதென நாகரீகமடைந்த தேசங்களைக் கொண்ட சர்வதேச சமூகத்திற்கு பகிரங்கமாகவே பிரகடனம் செய்கிறது. இப்போக்கு தொடருமானால் திட்டமிட்டபடி அரசின் இன ஒழிப்பு வெற்றி பெறும். இத் தீவில் இருந்து தமிழர் என்ற மக்கள் இல்லாதொழிக்கப்படுவார்கள்…” என்று வேறு உசுப்பேத்தியிருந்தனர்.. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பாராளுமன்றத்தில் குந்தவைப்பதன் ஊடாக புலிகளையும் ஒழித்து, இந்தியாவையும், சர்வதேசத்தையும் அலட்சியப்படுத்திய   இலங்கை அரசின் தமிழ் இன ஒழிப்பை தடுக்கலாம் என்றா தமிழ் மக்கள் இவர்களுக்கு வாக்களித்துள்ளனர்? இவ்வாறான பிரிவினைப் பேச்சுக்களைப் பேசிப் பேசித்தானே புலிகள் பல்லாயிரம் உயிர்களையும் உடைமைகளையும் நாசமாக்கினார்கள். அந்தநிலை தொடரவேண்டும் என்றா இவர்களுக்க வாக்களித்துள்ளனர்?
மறுபடியும் பிள்ளைகளை கொல்லக் கொடுப்பதற்கு தயாராகுங்கள் என பெற்றோர்களுக்கு மீண்டும் இவர்கள் அறிவுறுத்துகின்றனர் என்பதுதான் உண்மை. அன்றைய மேட்டுக்குடி அப்புக்காத்து அரசியல் வாதிகளின்  இனவாத தூண்டுதலும் பிரித்தாழும் உபாயங்களும் தான்  இன்றைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் அரசியல் அதிகாரத்துக்கான  தந்திரோபாயமாகவும் உள்ளது.
இவர்களின் இவ்வாறான பாராம்பரிய  அரசியல் செயல்பாடானது  இலங்கையில் வாழும் சிங்கள மக்களும் தமிழ் பேசும்மக்களும் இணைந்தும், கலந்தும் வாழும் சூழலுக்கு எதிராகவே அமையும். இதுவே இவர்களது முன்னோடிகளாலும் பேணிப்பாதுகாக்கப்பட்டு வந்த  அரசியல் அதிகாரத்திற்கான தந்திரோபாயமாகும்.
இருந்த போதிலும் எதிர்காலத்தில் எமது சமூகம் ஒரு சிந்தனை பூர்வமாக செயல்படுவதற்கான அறிகுறிகளையும் இததேர்தல் பெறுபேறுகள் எமக்கு உணர்த்துகின்றது. விகிதாசாரத் தேர்தல் முறையே  தமிழ்த்தேசிய கூட்டணியிலிருந்து  அதிகமான பிரதநிதிகள் தெரிவு செய்வதற்கு வாய்பளித்திருக்கின்றது. எண்ணிக்கையில் மிக அதிகமான தமிழர்கள் அவர்களை நிராகரித்துள்ளார்கள் என்பதுதான் உண்மை. அத்துடன் இவர்கள் பேசும் தமிழ்த் தேசியத்தையும் பெரும்பான்மை மக்கள் அங்கீகரிக்கவில்லை. மேலும் யாழ்மாவட்டத்தில் போட்டியிட்ட சிங்களக் கட்சிகளுக்கும் அதிகமான தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர் என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமே.
எதிர்காலத்தில் எமது சமூகமானது சுயசிந்தனையுள்ள சமூகமாக வளர்ச்சிபெறவேண்டியிருக்கின்றது.  ஒரு ஆளுமைமிக்க சமூகம் உருவாவதற்கு அச்சமூகத்திலிருந்து வெளிவரும் இலக்கியப் படைப்புகள், தினசரிப் பத்திரிகைகள் என்பன பெரும்பங்களிப்புகளை செய்யவேண்டும்.
அந்த வகையில் அரசியல் செய்திகளைத் தாங்கி வரும் தமிழ்ப்  பத்திரிகைகளின் சமூகப்பொறுப்பு மிக காத்திரமானதாக இருக்கவேண்டும். ஆனால் துரதிருஷ்ட நிலை எமது சமூகத்தில் இருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகைகளானது  மிக பிற்போக்கான கருத்துகளையே விதைத்து வருகின்றது.
அப்பத்திரிகைகள் யாழ்மேலாதிக்க சமூகத்தின் பாதுகவலர்களாகவும், அவர்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றும் வெறும் சுயநலக் கருவிகளாகவே செயல்பட்டு வருகின்றது.
அதே நேரத்தில் முப்பது வருடங்களுக்கும் மேலாக ஆயுத அடக்குமுறைக்குள்ளும் பேச்சு, எழுத்துச் சுதந்திரம் அற்ற அடக்குமுறைக்கும் பழக்கப்பட்டு வாழ்ந்தவர்கள்  வட-கிழக்கு மக்கள். இத்தேர்தலானது அம்மக்கள் சிந்தித்துச் செயல்படுவதற்கான அவகாசத்தையும்  அவர்களுக்கு அழிக்கவில்லை.
இதில் எமது தலித் சமூகம் சார்ந்து போட்டியிட்டவர்களின் நிலை மிகச் சிக்கலாகவே இருந்தது. அவர்களுக்கு பத்திரிகைகளின் ஆதரவில்லை. பணபலம் இல்லை. வாக்களிக்கும் முறைகூட அவர்களுக்கு சிக்கலாகவே இருந்தது. அதுவே யாழ்மாவட்டத்தில் 17 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் செல்லுபடியற்றதாக  போனதற்கு காரணமாகும். இருந்தாலும் இன்றும் நம்பிக்கையுடனும் மிக உற்சாகமாகவும் சி.பா.த. மகாசபை உறுப்பினர்கள் எம்முடன் உரையாடுகின்றார்கள். “நாம் தேர்தலுக்கு இரண்டு மாதத்திற்கு முன்புதான்  தீர்மானித்து தேர்தலில் போட்டியிட்டோம். ஆனால் பலவருடங்களாக அரசியல் கட்சியாக செயல்பட்டவர்கள் எடுத்துள்ள வாக்குகளையும், எமக்கு கிடைத்த வாக்குகளையும் ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது நாம் எதிர்காலத்தில் மிக உற்சாகமாக மக்கள் மத்தியில் வேலை செய்யாலாம்“ என்றும் கூறுகின்றார்கள்.
எனவே ஏப்ரல் 8ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தலில் சி.பா.த. மகாசபைக்கு வாக்களித்த மக்களுக்கும் புகலிடத்தில் சி.பா.த. மகாசபை வேட்பாளர்களுக்கு பொருளாதார உதவிசெய்த நண்பர்களுக்கும் சி.பா.த.மகாசபை சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.