4/11/2010

சட்டீஸ்கர் சம்பவம் : சிதம்பரம் ராஜினாமா அறிவிப்பு; பிரதமர் ஏற்க மறுப்பு _

 
 
  சட்டீஸ்கரில் மத்திய படை பொலிசார் 76 பேர் உயிரிழந்த சம்பவத்திற்குத் தார்மீக பொறுப்பேற்று, தனது பதவியை ராஜினாமா செய்வதாக மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் , பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தை பிரதமர் ஏற்றுக்கொள்ளவில்லை என பிரதமர் அலுவலகம் வட்டாரம் தெரிவிக்கிறது.

இந்தச் சம்பவத்திற்குத் தான் முழுப் பொறுப்பேற்பதாகவும், தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்ய தன்னை அனுமதிக்குமாறும் சிதம்பரம் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் முதலில் உறுதி செய்யப்படாத அதிகாரப்பூர்வமற்ற செய்தி வெளியானது.

சட்டீஸ்கரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நக்சலைட்களின் வெறியாட்டத்தில் மத்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த பொலிசார் 76 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 3 வீரர்களும் அடங்குவர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

பிரதமர் மன்மோகன்சிங் பெரும் கவலை தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று டில்லியில் சி.ஆர்.பி.எப்., சார்பில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ப.சிதம்பரம்,

"இந்த சம்பவத்திற்கு யார் பொறுப்பு என்று பலரும் பலவிதமாக என்னிடம் நேரிடையாகவும், மறைமுகமாகவும் கேட்கிறார்கள். இவ்வாறு கேள்விகள் எழுப்பப்படுவதைப் பார்த்தால் நான்தான் பொறுப்பு என்று அனைவரும் கருதும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இந்தச் சம்பவத்திற்கு நானே முழுப்பொறுப்பு ஏற்கிறேன் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்" என்றார்.

இவரது பேச்சு கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது. பொறுப்பேற்றால் பதவியில் இருந்து விலகுவதுதான் இது வரை வாடிக்கையாக இருந்து வந்திருக்கிறது. எனவே இவரது பேச்சு ராஜினாமாவின் அறிகுறியா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இது குறித்து காங்., தலைவர் சோனியாவுக்கும் அவர் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். ஆனால் இவரது ராஜினாமாவுக்கு காங்., தரப்பில் இருந்து எவ்வித அனுமதியும் கிடைக்கவில்லை. இவரது ராஜினாமாவை பிரதமர் வட்டாரம் ஏற்க மறுத்து விட்டதாகவும் தெரிகிறது. __

0 commentaires :

Post a Comment