4/17/2010

நாவலப்பிட்டியில் சூடு பிடிக்கும் தேர்தல் பிரசாரம் _


ஆளும் கட்சி முக்கியஸ்தர்களுக்கு இடையில் நாவலப்பிட்டி தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மீண்டும் சூடு பிடித்துள்ளன.

அதேவேளை, "நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியின் வாக்குகளைச் சூனியமாக்கிய தரப்புகளுக்கு வாக்களிக்க வேண்டாம்" என்று அறிவுறுத்தும் வகையிலான சுவரொட்டிகள் நாவலப்பிட்டிப் பிரதேசத்தில் ஒட்டப்பட்டுள்ளன.

ஆளும் கட்சியின் முன்னாள் அமைச்சர்களான கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் மஹிந்தானந்த அலுத்கமகே ஆகியோருக்கு இடையிலான பிரசாரப் போட்டி மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

55,000 வாக்குகளுக்காக நாவலப்பிட்டியில் எதிர்வரும் 20ஆம் திகதி மீள் தேர்தல் நடத்தப்படவுள்ளது.

இந்த வாக்குகளில் கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்று, அதன் மூலம் கண்டி மாவட்ட விருப்பு வாக்கு பட்டியலில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவே இந்தப் பிரசாரப் போட்டி நடைபெறுவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, நாவலப்பிட்டியில் ஏனைய கட்சிகளும் பிரசாரப் பணிகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக சிறுபான்மை கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ரவூப் ஹக்கீம் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் இந்தத் தேர்தல் தொகுதியில் ஐதேக சார்பில் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் நடத்தப்படவுள்ள நாவலப்பிட்டி பிரதேசத்தில் சிங்களவருடன் தமிழ் - முஸ்லிம் மக்களும் செறிந்து வாழ்கின்றனர்.

இந்த நிலையில், நாவலப்பிட்டி நகரிலும் நகரை அண்டிய முக்கிய பகுதிகளிலும் அதிரடிப்படையினர் காவலுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் ரோந்து சேவைகளும் தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

நாவலப்பிட்டி நகரில் தேர்தல் சுவரொட்டிகள், 'கட் அவுட்'கள் முற்றாக அகற்றப்பட்டுள்ளன. தீவிர பிரசாரப் பணிகள் தொடர்கின்றன. ___

0 commentaires :

Post a Comment