மிகவும் அந்நியோன்னியமாக அவர்களோடு அலவளாவிய முதலமைச்சர் சந்திரகாந்தன் அவர்களது எதிர்கால வாழ்வு குறித்தும் தாம் அதிக அக்கறை கொண்டு செயற்படுவதாகவும் குறிப்பிட்டார். அவர்கள் மத்தியில் தொடர்ந்து பேசிய முதலமைச்சர், நாம் எல்லோரும் ஒரு காலத்தில் அடைய முடியாத ஓர் மாயைக்காக எமது வாழ்நாட்களை வீணடித்து விட்டோம். அதை எல்லாம் நாம் இனி சிறிதளவேனும் சிந்திக்க தேவையில்லை. எங்களது எதிர்காலம், எமது குடும்ப வாழ்வு, எமது எதிர்கால திட்டங்கள் என்பன தொடர்பாகவே நாம் சிந்திக்க வேண்டும். அதனை விடுத்து, மீண்டும் நாங்கள் ஏமாளிகளாக மாறி எமது வாழ்நாட்களை வீணடிக்கக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.
மிகவும் சிநேகபூர்வமாக கலந்துரையாடிய முதல்வரிடம் தங்களது மனக்கிடக்கைகளை பகிர்ந்து கொண்ட போராளிகள். முன்னாள் போராளியான பேரின்பராஜா யோகநாதன் (இசைமணி வயது – 33) என்பவர் கருத்து தெரிவிக்கையில். நாங்கள் உண்மையில் எமது இனத்தின் விடுதலைக்காகவே போராட்டத்தில் இணைந்தோம், ஆனால் அது பின்னர் திசைமாறிய போராட்டமாகியது. பின்னர்தான் நான் உணர்ந்தேன் உண்மையில் இது எமது வாழ்நாளில் வீணான நாட்கள் என்று தற்பொது ஓரளவு பெருமையாக இருக்கின்றது. இலங்கை இராணுவத்திற்கு எதிராக ஆயுதமேந்திய எங்களுக்கு இலங்கை இராணுவமே புனர்வாழ்வழித்திருக்கின்றது. இதை நினைத்தால் மகிழ்ச்சியாய் இருக்கின்றது எனக் குறிப்பிட்டார்.
முன்னாள் போராளி முத்துப்பிள்ளை நவரெட்ணம் (கவியரசன்-வயது36) குறிப்பிடுகையில், எமது போராட்டம் எதற்காக தொடங்கப்பட்டதோ அதனை இன்று நாம் அடையவில்லை. இருந்தாலும் வடக்கு கிழக்கு இணைந்துதான் அப்போது போராடினோம். ஆனால் அப்போராட்டத்தின் எச்சம் வடக்கில் எதுவுமில்லை. ஆனால் இன்று அரசியல் ரீதியாக எமது மக்களின் பிரச்சினைகளைப் பேசுவதற்கு கிழக்கில் பிள்ளையான் அண்ணன்; இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது. அதாவது எமது கிழக்கு போராளிகளின் தியாகம் வீண் போகவில்லை எனவும் குறிப்பிட்டார்.
கிளிநொச்சியைச் சேர்ந்த முகிலன் என்றழைக்கப்படும் விஸ்வநாதன் சக்திவேல் (29) குறிப்பிடுகையில், வெளியில் இருப்பவர்களுக்கு எமது போராட்டத்தின் வலி புரியாது. நீங்களும் ஒரு காலத்தில் போராளியாக இருந்தவர் என்ற அடிப்படையில் எங்களது முகாமிற்கு முதன் முதலாக வருகை தந்ததற்கு எங்கள் அனைவரினதும் சார்பில் நான் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன். அரசியல்வாதிகள் குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுவது போல் எங்களுக்கு எதுவும் தேவையில்லை. அவர்களுக்கு எங்களது போராட்டத்தின் வலி இழப்புக்கள் தெரியாது. அவர்கள் இப்போராட்டத்தில் தங்களது பிள்ளைகள் உறவினர்கள் யாரையுமே அப்போராட்டத்தில் இணைத்ததில்லை. வெளியிலிருந்து ஏதாவது பேசுவதற்கு மாத்திரம்தான் முடியும். எனவே எங்களை வெகுவிரைவில் விடுதலை செய்ய நீங்கள் உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் முதலமைச்சரிடம் கேட்டுக்கொண்டார்.
இப்புணர்வாழ்வு முகாமில் சுமார் 500 மேற்பட்ட முன்னாள் போராளிகள் தங்களுக்கான தொழில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இவர்களுக்கான தொழில் பயிற்சி உபகரணங்களையும் முதலமைச்சர் சந்திரகாந்தன் வழங்கியிருந்தார். இவர்கள் ஓரிரு மாதங்களுக்குள் விடுதலை செய்கின்ற போது அவர்களுக்கான அதாவது அதாழில் பயிற்சியினை பெற்று வெளியேறுகின்ற அனைவருக்கும் தாம் சுயதொழில் வேலைவாய்ப்புக்களை பெற்றுத் தருவதாகவும் குறிப்பிட்டார்.
மேற்படி புனர்வாழ்வு முகாமில் தச்சு, மேசன், கணணி, வயறிங், பிளமிங், போன்ற பல தொழில் பயிற்சி நெறிகள் போதிக்கப்பட்டு வருகின்றன. இவர்களுக்கு தேவையான தொழில் பயிற்சி உபகரணங்கள் தொடர்பாகவும் அவர்களுக்கான குறிப்பிட்ட சில உடனடித் தேவைகள் குறித்தும் மகஜர் ஒன்றும் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. இன்றைய நாள் முழுவதையுமே அவ் முன்னாள் போராளிகளுடன் செலவு செய்த முதலமைச்சர் சந்திரகாந்தன் விடைபெறும்போது பலர் அன்பாக கட்டித்தழுவி வழியனுப்பிவைத்தார்கள். அப்போது வெகுவிரைவாக இவர்கள் அனைவரையும் விடுதலை செய்வது தொடர்பாக தாம் அது தொடர்பான அதிகாரிகளுடன் உடனடியாக பேசி உரிய நடவடிக்கையினையும் மேற்கொள்வேன் எனவும் உறுதியளித்தார்.
0 commentaires :
Post a Comment