இலங்கையின் ஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நாளை 22ஆம் திகதி நடைபெறவுள்ளது.
நாளை காலை 9.30க்கு பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகிறது. சபையின் முதலாவது நடவடிக்கையாக சபாநாயகர் தெரிவு இடம்பெறும். சபாநாயகராகத் தெரிவு செய்யப்படும் நபர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் ஏழாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட 225 உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொள்வர்.
இதனைத் தொடர்ந்து பிரதி சபாநாயகர் தெரிவு, குழுக்களின் பிரதித் தலைவர் தெரிவு, ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு பிரதம கொரடா, அவைத்தலைவர் தெரிவுகள் இடம்பெறும். நாவலப்பிட்டி மற்றும் திருகோணமலை கும்புறுப்பிட்டி பகுதிகளில் நடைபெற்ற மீள் வாக்குப் பதிவுகளின் பின்னர் இன்று வெளியிடப்படும் தேர்தல் முடிவுகளின் பின்னர் ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு, மற்றும் தேசியப் பட்டியல்கள் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள 225 உறுப்பினர்களும் நாளை பாராளுமன்றம் செல்கின்றனர்.
இவர்களுள் சுமார் 70 பேர் வரையில் புது முகங்களாக உள்ளனர்.
இதுவரை கிடைத்துள்ள தேர்தல் முடிவுகளின்படி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் இன்று தேர்தல் ஆணையாளரிடம் கையளிக்கப்படவுள்ளது.
தமக்குக் கிடைத்த வாக்குகளின் படி கிடைக்கவுள்ள தேசியப்பட்டியல் தொடர்பாக இலங்கை தமிழரசு கட்சி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாகக் கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் அறிவித்துள்ளார்.
எனினும், ஐ. தே. க. தேசியப் பட்டியல் விவகாரத்தில் இழுபறி நிலையிலேயே உள்ளது. அத்துடன் ஐ. தே. க.- ஜனநாயக தேசியக் கூட்டமைப்புக்கு இடையே எதிர்க்கட்சித் தலைமை பொறுப்பு ஏற்பது தொடர்பாக இழுபறி நிலை தொடர்கிறது.
0 commentaires :
Post a Comment