4/18/2010

அடைய முடியாத இலக்குகளை அடைய முயற்சிக்கும் த.தே.கூட்டமைப்பு–கிழக்கின் முதல்வர் சந்திரகாந்தன்

காலங்காலமாக தமிழ் மக்களின் அரசியல் இருப்பின் சொந்தக்காரர்கள் என தங்களை இனங்காட்டிக் கொண்டு காலத்தை கடத்திய வரலாறு தமிழ் தேசிய கூட்டமைப்புக்குரியது. அன்றும் சரி இன்றும் சரி இக்கூட்டமைப்பினது அரசியல் பிரவேசமானது தமிழ் தேசியத்தின் உருவாக்கமாகவே அமைந்திருந்தது. ஆனால் அது எமது தமிழ் மக்களுக்கு கற்பனைக்குக் கூட எட்டாத ஒன்றாக இருக்கின்றது. அதனையே இவர்கள் அடைய முயற்சிக்கிறார்கள். போராட்ட காலங்களில் தனித் தமிழீழம் என்றார்கள், இன்று வடக்கு கிழக்கு இணைப்பு என்கின்றார்கள். இதே போன்று பல அடைய முடியாத இலட்சியங்களுக்காய் காலங் காலமாக குரல் கொடுப்பவர்கள்தான் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். நேற்று (15.04.2010) இரவு மட்டக்களப்பு வாடிவீட்டில் இடம்பெற்ற கட்சியின் உயர்மட்டக் கலந்துரையாடலிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். தமது கட்சி எதிர் கொண்ட முதலாவது நாடாளுமன்றத் தேர்தலிலே குறிப்பிட்டளவு வாக்கினை பெற்றிருப்பது எமக்கு மகிழ்ச்சியளிக்கின்றது. ஆனால் தற்போதைய இந்த ஜனநாயகச் சூழலில் நாம் கிழக்கில் பாரியளவு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்திருக்கின்றோம். அவ்வாறு இருந்தும் கூட எதுவுமே எமது மக்களின் நலன்களில் பங்கெடுக்காத கூட்டமைப்பினருக்கு எமது மக்கள் மீண்டும் ஆணை வழங்கியிருப்பது ஓரளவு வேதனையளிக்கின்றது. இவர்களால் கிழக்கு மாகாண மக்களுக்கு எதுவுமே செய்ய இயலாது. மீண்டும் அவர்கள் தனித் தேசியம், வடக்கு கிழக்கு இணைப்பு என நடைமுறைச் சாத்தியமற்ற விடயங்களையே பேசிப் பேசி காலத்தை கடத்துவார்களே தவிர, வேறு எந்த ஆக்கபூர்வமான செயற்பாடுகளையும் அவர்கள் எமது மக்களுக்குச் செய்ய மாட்டார்கள் எனவும் முதலமைச்சர் சந்திரகாந்தன் குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், நடந்து முடிந்திருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலின் ஊடாக நாம் ஓர் விடயத்தினை தெளிவாக புரிந்து கொள்ளலாம். அதாவது தற்போது கூட்டமைப்பின் பிரச்சாரப் பீரங்கிகளாகச் செயற்படுகின்ற சில தமிழ் ஊடகங்கள் வடக்கு கிழக்கு இணைப்பினை முதன்மைபடுத்தி தமது பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள். இவர்களுக்கும் கூட்டமைப்பினருக்கும் நான் ஓர் விடயத்தை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.
அதாவது நடந்து முடிந்த தேர்தலை ஓர் பரீட்சாத்தமான தேர்தலாக நோக்குவோமாயின், அதாவது வடக்கு கிழக்கு இணைப்பிற்கான சர்வசன வாக்கெடுப்பு தேர்தலாக இதனை நோக்குவோமாயின் கூட மொத்தமாக கிழக்கு மாகாணத்திலே பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாக 994.612 பேர்உள்ளனர். இதில் மட்டக்களப்பில் 333.644 பேரும், திருகோணமலையில் 241.133 பேரும் அம்பாறையில் 420.835 பேரும் இருக்கின்றார்கள். இம்முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்திலே மட்டக்களப்பு மாவட்டத்திலே 66.235 வாக்குகளைப் பெற்று மூன்று ஆசனங்களையும் திருகோணமலையில் அண்ணளவாக 28.892 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும் (முழுமையான தேர்தல் முடிவு வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.) அம்பாறையில் 26.895 வாக்குகளை பெற்று ஒரு ஆசனமாக மொத்தமாக ஐந்து ஆசனங்களை பெற்றிருக்கின்றார்கள். கிழக்கு மாகாணத்திலே மொத்தமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்ற மொத்த வாக்குகள் 120.922 ஆகும். எனவே கிழக்கில் இருக்கின்ற மொத்த தமிழர்களிலே இவர்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களை வைத்து ஒப்பிடும்போது கூட தெளிவாக விளங்குகின்றது வடகிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என்பது. வடக்கு கிழக்கு இணைப்பிற்கான ஆணை இதுவென அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். ஆனால் விகிதாசார ரீதியாக ஒப்பிட்டு நோக்குகின்ற போது த.தே.கூட்டமைப்பிற்கு கிடைத்திருக்கின்ற விகிதாசாரம் 12.14ஆகும். எனவே இதனை வைத்துக் கொண்டு இவர்கள் குறிப்பிடமுடியாது. எனவே இதனை அனைத்து சமூகமும் தெளிவாக சிந்தித்து பார்க்க வேண்டும். கிழக்கு மாகாணம் வடமாகாணத்தைப் போல் தனியான தமிழ் பிராந்தியம் அல்ல. மாறாக தமிழர்கள், சிங்களவர்கள் ,முஸ்லிம்கள் என மூவினத்தவர்களும் செறிந்து வாழ்கின்ற மாகாணம் ஆகும்.
ஆகவே மொத்தமாக கிழக்கு மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்ற வாக்காளர்கள் தொகை 9.95.612 பேராகும். இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றிருக்கின்ற வாக்ககள் வெறுமனவே 1.20.922 ஆகும். எனவே இந்த விகிதாசார அடிப்படையில் பார்த்தால் கூட அவர்கள் சொல்வதனைப் போன்று வடகிழக்கு இணைப்பிற்கான ஆணை கிடைக்க வில்லை. இவர்கள் பல நெடுங்காலமாக இவ்வாறாக அடைய முடியாத இலக்குகளை அடைவதற்காக மக்களை பகடைக்காய்களாக பயன்படத்திய வரலாறுகள் எமக்கு தெரிந்தவைகளே. எனவே தற்போது முடிவடைந்திருக்கின்ற தேர்தல் முடிவினை வைத்துக் கொண்டு த.தே.கூட்டமைப்பும் அவர்களுக்கு ஊதுகுழலாகச் செயற்படுகின்ற குறிப்பிட்ட சில தமிழ் ஊடகங்களும் வடகிழக்கு இணைப்பு தொடர்பாக கதைப்பதற்கு தகுதி அற்றவர்களே என்பதனையே தெளிவாக நான் எடுத்துக் கூறுகின்றேன் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் குறிப்டுகையில், ஒன்றிணைந்த இலங்கைக்குள் தீர்வு காண வேண்டும் எனக்கூறும் இத்தேசிய கூட்டமைப்பினர், உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினையே ஏற்காதவர்களாகச் செயற்படுகின்றமை மிகவும் வேதனையளிக்கின்றது. அதாவது வடக்கு கிழக்கு நிருவாக ரீதியாக பிரிக்கப்படுகின்றது என்கின்ற தீர்ப்பினை வழங்கிய உயர் நீதிமன்ற தீர்ப்பினையே ஏற்காத இக்கூட்டமைப்பு இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் அமைப்பின் பிரகாரம் ஒன்றிணைந்த இலங்கைக்குள் தீர்வு காண்பது என்பது எவ்வளவு வேடிக்கை என்பதனை அனைத்து அரசியல் ஆர்வலர்களும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மை மக்களுக்காக கிடைத்திருக்கின்ற குறைந்த பட்ச தீர்வு என்றால் அது மாகாண சபை முறைமைதான். மாகாண சபை முறைமை கிழக்கில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. இதே போல் வடக்கிலும் ஏற்படுத்தப்படுமாயின் ஓர் தமிழர் முதலமைச்சராக வரமுடியும். எனவே அரசியல் ரீதியில் தமிழர்களின் பலம் ஓங்க இவை வழிவகுக்கும். இதனை எல்லாம் லிடடு விட்டு வடக்கு கிழக்கு இணைப்புத்தான் இன்று எமது தமிழ் மக்களுக்கான தீர்வு என இக்கூட்டமைப்பினர் கூறுவது ஒருபுறம் வேதனையளித்தாலும், அது இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் நடக்க முடியாத ஒன்றாகும். நான் ஏற்கனவே கூறியது போல கிழக்கில் சர்வசன வாக்கெடுப்பு நடந்தால் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்ற வாக்குகளின் பிரகாரம் பார்க்கின்ற போது அது நடக்கமுடியாத ஒன்றாகும். இவர்களது இவ்வாறான பேச்சுக்கள் மூலம் ஒன்று மட்டும் புலனாகின்றது அதாவது தாங்கள் இலங்கைத் தமிழ் மக்களின் குறிப்பாக கிழக்கு மற்றும் வடக்கு மக்களின் அரசியல் ஏகப்பிரதிநிதிகள் அவர்களே காலங் காலமாக இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களினது எண்ணப்பாடாகும். கிழக்கில் நிலையான அரசியல் தலைமை உருவாவதனை அவர்கள் விரும்பவில்லை என்பது எனது எண்ணப்பாடாகும். இதனூடாக நான் பிரதேசவாதம் பேசவில்லை. காலங்காலமாக எமது மக்களை இவ்வாறாகத்தான் இந்த த.தே.கூட்டமைப்பினரும் அதன் அரசியல் தலைமைகளை வழிநடத்தியிருக்கின்றார்கள். இதனை எல்லாம் இனிவரும் காலங்களிலாவது குறிப்பாக எமது கிழக்கு மக்கள் நன்கு உணர்ந்து கொள்வார்கள் என்கின்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
இலங்கையில் செயற்படுகின்ற தமிழ் ஊடகங்களை நினைத்தால்கூட மிகவும் கவலையளிக்கின்றது. அதாவது எந்த ஒரு நடுநிலைத் தன்மையும் பேணாது உண்மைத் தன்மையினை உறுதிப்படுத்தாது குறிப்பிட்ட ஒரு சில தமிழ் ஊடகங்களில் இத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஏவலாளிகள் போல் செயற்பட்டு தங்களது செய்திகளை திரிவுபடுத்தி வெளியிடுகின்ற போது மக்கள் குழப்பமடைகின்றார்கள். எனவே இது போன்ற செயற்பாடுகளை இனிவருகின்ற காலங்களிலாவது நிறுத்தி பத்திரிகை தர்மத்தினை பேணி நம்பகத் தன்மையானதும் யதார்த்தபூர்வமான உண்மைகளையும் கட்சி பேதங்களுக்கு அப்பால் வெளியிட்டு எமது மக்களையும் சமூகத்தையும் நல்வழிப்படுத்த இவ் ஊடகங்கள் செயற்பட வேண்டும் என நான் விரும்புகின்றேன். விசேடமாகச் சொல்லப்போனால் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு உள்ள ஒரு வாரத்திற்குள் வெளிவந்த குறிப்பிட்ட சில பத்திரிகைச் செய்திகளை எடுத்துப்பார்த்தால் நான் ஏலவே குறிப்பிட்ட விடயங்கள் புலனாகும். தலைப்பு செய்திகள் கூட விதிவிலக்கல்ல.
எனவே இத் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் வாதிகளுக்கும் அவ் அரசியல் தலைமைகளுக்கும் நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். இவ்வளவு காலமும் எமது தமிழ் மக்கள் பட்ட அவலங்கள் போதும் இனிவரும் காலங்களிலாவது அவர்கள் நிம்மதியாக வாழ வழி சமைத்துக் கொடுங்கள். ஏலவே 22 பாரர்ளுமன்ற உறுப்பினர்களை வைத்து எதையுமே சாதிக்கவில்லை தற்போது 14 பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்து ஏதாவது செய்ய முயற்சியுங்கள் எனவும் அவரது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

0 commentaires :

Post a Comment