கண்டியில் நீங்கள் நடத்தியது அக்கினிப் பரீட்சை. நீங்களும் உங்கள் தம்பியும் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் போட்ட வியூகம் தோல்வி அடைந்துவிட்டது. அதனால் உங்கள் பாராளுமன்றப் பிரவேசம் தடைப்பட்டுவிட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலில் உங்களுக்கு இடம் கிடைக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்ததில் நியாயம் உண்டு. அந்தளவுக்கு நீங்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் பின்னிப் பிணைந்து செயற்பட்டீர்கள். எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளர் போல நடந்து கொண்டீர்கள். இது தான் நீங்கள் செய்த மிகப் பெரிய தவறு. ஐக்கிய தேசியக் கட்சியின் குணாம்சத்தைச் சரியாக விளங்கிக்கொள்ள உங்களால் முடியவில்லை. இப்போது உங்களுக்குத் தேசியப் பட்டியல் நியமனம் கிடைக்கவில்லை என்பதற்காக ரணிலையும் கட்சியையும் கடுமையாக விமர்சிக்கின்aர்கள்.
தேசியப் பட்டியல் நியமனம் கிடைத்திருந்தால் ரணிலின் புகழ் பாடியிருப்பீர்கள்.
ரணில் உங்களுக்கு நியமனம் வழங்காதது ஒரு வகையில் நல்லது என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் அதனால் தான் உங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரின் முகமூடிக்குப் பின்னாலுள்ள நிஜமுகத்தைப் பார்க்க முடிந்தது.
தமிழ் மக்களின் பல பிரச்சினைகள் தொடர்பாக நீங்கள் அதிகம் ஆர்வம் காட்டியவர். கூடுதலான ஆர்வம் காரணமாகத் தமிழ்க் கடுங்கோட்பாட்டாளர்களின் பக்கத்துக்கு ஓரளவு ஈர்க்கப்பட்டீர்கள். எவ்வாறாயினும் இனப் பிரச்சினைக்குத் தீர்வு வேண்டும் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கின்aர்கள். அதில் சந்தேகம் இல்லை.
இனப் பிரச்சினை தீர வேண்டும் என்பதில் எவ்வளவுதான் உறுதியாக இருந்தாலும் சரியான முடிவை எடுக்காவிட்டால் அந்த உறுதியில் அர்த்தமில்லை. நீங்கள் பிழையான முடிவையே எடுத்தீர்கள்.
ஐக்கிய தேசியக் கட்சி இனப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் என்று நீங்கள் எடுத்த முடிவு மிகவும் பிழையானது. இனப் பிரச்சினையைத் தோற்றுவித்ததே ஐக்கிய தேசியக் கட்சி. பிரச்சினை வளர்வதற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பங்களிப்பு முக்கியமானது.
இனப் பிரச்சினையின் வரலாற்றில் இரண்டு தீர்வு முயற்சிகள் குறிப்பிட்டுக் கூற வேண்டியவை. ஒன்று பண்டா - செல்வா ஒப்பந்தம். மற்றது பொதுசன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டம். இரண்டு முயற்சிகளையும் சீர்குலைத்தது ஐக்கிய தேசியக் கட்சி.
பண்டா - செல்வா ஒப்பந்தத்துக்கு எதிராக ஜே. ஆர். ஜயவர்த்தன கண்டிக்குப் பாத யாத்திரை போனார். ஒப்பந்தத்துக்கு எதிராகப் பெளத்த மத குருமாரை அணிதிரட்டிச் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தினார். இக் கட்சியின் எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக ஒப்பந்தத்தைக் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.
பொதுசன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறாமற் போனதற்கும் ஐக்கிய தேசியக் கட்சியே காரணம். தீர்வுத் திட்டத்துக்கு எதிராகப் பேசுவதற்கு எதுவுமே இல்லாததால் ஐக்கிய தேசியக் கட்சியினர் பாராளுமன்றத்தில் பேசவில்லை. ஆனால் காடைத்தனமாக நடந்து தீர்வுத்திட்டத்தை வாக்கெடுப்புக்கு எடுக்காமற் செய்தனர்.
இவற்றையெல்லாம் தெரிந்துகொண்டு தானே நீங்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டீர்கள். காலங்கடந்தாவது ஐக்கிய தேசியக் கட்சியின் உண்மைத் தோற்றத்தைக் கண்டுவிட்டீர்கள். இனிமேல் சரியான தடத்தில் உங்கள் அரசியல் பயணம் ஆரம்பிக்கும் என்று நம்புகிறேன்.
எதிர்ப்பு அரசியலால் எந்தப் பிரச் சினையையும் தீர்க்க முடியாது என்ப தைப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவ அமைப்பிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். தமிழ் மக்களின் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு இணக்க அரசியல் பாதையை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்ந்தெடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
0 commentaires :
Post a Comment