ஐக்கிய தேசிய முன்னணியின் தேசியப் பட்டியலில் தமக்கு இடம் வழங்கப்படாததால் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஐ. தே. க. தலைமைத்துவத்தின் மீது கொதிப்படைந்துள்ளார். இதனால் மனோ கணேசனுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையிலான ஒன்பது வருடகால உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. கண்டி மாவட்டத்தில் தோல்வியடைந்தால் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்குச் செல்லலாம் என மனோ கணேசன் எண்ணியிருந்தார். ஆனால், ஐ. தே. க. தலைமைப்பீடம் காலைவாரிவிட்டதாக ஜனநாயக மக்கள் முன்னணியினர் கொதிப்படைந்துள்ளனர். ஐ. தே. க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டதாக மனோ கணேசன் காரசாரமாக விமர்சித்துள்ளார். இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் சிரேஷ்ட உப தலைவர் வேலணை வேணியன் விடுத்துள்ள அறிக்கையில் :- கடந்த ஒன்பது வருடங்களுக்கு மேலாக எமது தலைவரும் நாங்களும் நேற்றுவரை ஐ. தே. கட்சியின் தலைவரை நம்பியிருந்தோம். எமது தலைவருக்கு ஐ. தே. கட்சி மனிதாபிமான அடிப்படையில் தேசியப் பட்டியலில் ஒரு கூட்டுக் கட்சியின் தலைவர் என்ற வகையில் பாராளுமன்றத்தில் ஓர் இடம் கொடுத்திருக்க வேண்டும். இன்று அக்கட்சி தமிழ் மக்களின் காலையே வாரி விட்டது போலவே கருதுகிறோம். இன்று முதல் ஐ. தே. கட்சிக்கும் எமக்கும் இடையே இருந்த கூட்டணி முறிவடைந்துவிட்டது. ஐக்கிய தேசியக் கட்சி ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரை மட்டுமல்ல எமது கட்சி சார்ந்த பல இலட்சக் கணக்கான வாக்காளர்களான தமிழ் மக்களுக்கே துரோகம் செய்து விட்டதாகவே கருதுகிறோம். |
4/22/2010
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment