கண்டி மாவட்டம் நாவலப்பிட்டி தேர்தல் மீள் வாக்களிப்பு இடம்பெறவுள்ள 37 வாக்களிப்பு நிலையங்களில் நாளை 20 ஆம் திகதி காலை 7.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணிவரை வாக்களிப்பு இடம் பெறுவதற்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது.
நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியிலிருந்து 50100 பேர் நாளை வாக்களிக்கத் தகுதிப்பெற்றுள்ளனர். இவர்களில் சுமார் 32 ஆயிரம் பேர் சிங்களவர் என்றும் 14 ஆயிரம் பேர் தமிழர்கள் என்றும் சுமார் 4 ஆயிரம் பேர் முஸ்லிம்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய வாக்களிப்பில் ஈடுபடுகின்ற வாக்காளர்களின் இடது கையின் நடுவிரலில் மை பூசப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற பொதுத்தேர்தலின் போது நாவலப்பிட்டியின் 37 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்ட முறைகேடுகளால் இவற்றின் வாக்குப் பதிவு ரத்துச் செய்யப்பட்டதைத் தொடர்ந்தே நாளை மீள்வாக்களிப்பு இடம்பெறுகின்றது.
வாக்களிப்பு பணிகளில் ஈடுபடுவதற்காக 900 உத்தியோகஸ்தர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று 19 ஆம் திகதி முற்பகல் வேளையில் பொலிஸ் பாதுகாப்புடன் கண்டி மாவட்டச் செயலகத்திலிருந்து குறிப்பிட்ட நிலையங்களுக்கு இவர்கள் சென்றனர். ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திலும் ஒரு பொலிஸ் அதிகாரியும் 7 பொலிஸ் உத்தியோகத்தர்களும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்களிப்பு முடிந்ததும், வாக்குப்பெட்டிகள் கண்டி தேர்தல் செயலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள 6 நிலையங்களில் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படுமென கண்டி மாவட்டச் செயலாளர் கோத்தபாய ஜெயரட்ண தெரிவித்துள்ளார்.
வாக்களிப்பு நிலையங்கள் சூழவுள்ள பகுதிகளில் இராணுவத்தினரும் ,அதிரடிப்படையினரும்,பொலிஸாரும் நிறுத்தப்பட்டுள்ளனர். பிரச்சினைகள் இடம் பெறலாமென எதிர்பார்க்கப்படுகின்ற பகுதிகளில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் கம்பளை, உலப்பனை, நாவலப்பிட்டி, கடுகஞ்சேனை, றம்புக்பிட்டிய, கலபொட, தொளஸ்பாகை போன்ற பகுதிகளில் பாதுகாப்புப் பிரிவினரின் ரோந்து சேவைகளும் இடைவிடாது இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
. கண்டி மாவட்டத்திலிருந்து 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொள்வதில் முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, கெஹலிய ரம்புக்வெல மற்றும் எஸ்.பி.திசாநாயக்க ஆகியோருக்கிடையில் கடும் போட்டி நிலவுகின்றது. _
0 commentaires :
Post a Comment