4/11/2010

கொள்கை இல்லாமல், பாராளுமன்ற ஆசனங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்டதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இதுதான் தமிழ் மக்களின் சாபக்கேடு.

இனப் பிரச்சினையின் தீர்வுக்காகத் தமிழரசுக் கட்சி முதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரை நிலையான கொள்கையைப் பின்பற்றவில்லை. நிலையான கொள்கை அவர்களிடம் இருக்கவில்லை.

தேர்தல் முடிந்துவிட்டது. எதிர் பார்த்தது போலவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றி ஈட்டியது.
தேர்தல் பிரசாரத்தின் போது எதிரணிக் கட்சிகள் தாராளமாகவே வாக்குறுதிகளை அள்ளி வழங்கின. ஆட்சிக்கு வரப்போவ தில்லை என்பதை முன்கூட்டியே அறிந் ததால் எவ்வித தயக்கமும் இல்லாமல் வாக்குறுதிகளை அள்ளிக் கொட்டினார்கள்.
எதிரணிக் கட்சிகளுள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் பிரசாரம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. இவர்களின் பிரசாரத்தில் புதிதாக எதுவும் இல்லை. வழமை போல, இனப் பிரச்சினைக்குத் தீர்வு, காண்பதற்குத் தமிழ் மக்கள் அனைவரும் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதே கூட்டமைப்புப் பிர சாரத்தின் சாராம்சம். எல்லாத் தேர்தல் காலங்களிலும் போல இந்தத் தேர்தல் பிர சாரத்தின் போதும் தமிழ் மக்கள் ஒன்றுமை ப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு முக்கியத்துவம் அளித்தார்கள்.
தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றைப் போலத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பாராளுமன்ற ஆச னங்களைத் தக்கவைப்பதற்காகவே ஒற்று மைக் கோரிக்கையை முன்வைக்கின்றது. ஒரு தீர்வு திட்டத்தை முன்வைத்து அதை வென்றெடுப்பதற்காக ஒற்றுமைப்படும்படி இவர்கள் எந்தக் காலத்திலும் கேட்கவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நான்கு கட்சிகள் சேர்ந்து 2001ம் ஆண்டு ஆரம் பிக்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட் டணி, தமிழ்க் காங்கிரஸ் கட்சி, ரெலோ, ஈ. பி. ஆர். எல். எப். (சுரேஷ் அணி) ஆகியவையே அந்த நான்கு கட்சிகளும். நான்கு அம்ச உடன்படிக்கையொன்றில் நான்கு கட்சிகளும் கையொப்பமிட்டுத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆரம்பித்தன.
நான்கு கட்சிகளும் வெவ்வெறு நிலைப்பாடுகளுடன் ஒன்றுக்கொன்று எதிராகச் செயற்பட்டவை. இக்கட்சிகள் கூட்டமைப்பாக ஒன்றிணைவதற்கான உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடும் போது அதில் கொள்கை பிரதானமாக இடம்பெறும் என்றே எல்லோரும் நினைப்பார்கள். அதாவது இனப் பிரச்சினையின் தீர்வுக்கான ஒரு நிலைப்பாட்டை உடன்படிக்கையில் உள்ளடக்குவார்கள் என்று மக்கள் எதிர்பார்த்திருப்பார்கள். ஆனால் இவர்களின் உடன்படிக்கையில் இனப் பிரச்சினையின் தீர்வுக்கான கொள்கை எதுவும் இருக்கவில்லை.
பாராளுமன்ற ஆசனம்
கூட்டமைப்பின் நான்கு அம்ச உடன் படிக்கையின் முதலாவது அம்சம் பாராளு மன்ற ஆசனங்களைப் பகிர்ந்து கொள்வது பற்றியது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ் வொரு கட்சியும் எத்தனை வேட்பாளர்களை நிறுத்துவது என்பதே உடன்படிக்கையின் பிரதான அம்சம். உதாரணமாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட் டணியின் 7 வேட்பாளர்களும் அகில இலங் கைத் தமிழ்க் காங்கிரஸின் 3 வேட்பாளர்களும் ரெலோவின் 1 வேட்பாளரும் ஈ. பி. ஆர். எல். எப். சுரேஷ் அணியின் 1 வேட்பாளரும் நிறுத்தப்படுவது. இதுபோல, ஐந்து மாவட்ட ங்களுக்கும் ஒவ்வொரு கட்சியினது எத் தனை வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்பதுதான் உடன்படிக்கையின் முதலாவது அம்சம்.
இரண்டாவது அம்சம் தேசியப் பட்டியல் பிரதிநிதித்துவம் தொடர்பானது. தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ரெலோ, ஈ. பி. ஆர். எல். எப். என்ற முன்னுரிமை அடிப்படையில் தேசியப் பட்டியல் பிரதிநிதித்துவம் வழங்குவதென்பது உடன்படிக்கையின் இரண்டாவது அம்சம்.
இக்கட்சிகள் பகிரங்கமாக ஒன்றையொன்று தாக்கவோ விமர்சிக்கவோ கூடாதென்பது மூன்றாவது அம்சம்.
இக்கட்சிகளுக்கிடையே உள்முரண்பாடு இடம்பெறும் பட்சத்தில் மத்தியஸ்தர்கள் மூலம் அதைத் தீர்ப்பது தொடர்பானது நாலாவது அம்சம். சுருக்கமாகக் கூறுவதானால் கொள்கை இல்லாமல், பாராளுமன்ற ஆசனங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்டதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இதுதான் தமிழ் மக்களின் சாபக்கேடு.
இனப் பிரச்சினையின் தீர்வுக்காகத் தமிழரசுக் கட்சி முதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரை நிலையான கொள்கையைப் பின்பற்றவில்லை. நிலையான கொள்கை அவர்களிடம் இருக்கவில்லை. ஆரம்பத்தில் சமஷ்டி. பின்னர் வட்டுக்கோட்டையில் தனிநாட்டுத் தீர்மானம். அதன் பின் ஜே. ஆர். ஜயவர்த்தனவின் மாவட்ட சபையை ஏற்றார்கள். அதற்குப் பின் அதிகாரப் பகிர்வு. பின்னர் புலிகளின் தனிநாட்டு நிகழ்ச்சி நிரல். இப்போது கொள்கை இல்லாத கூட்டு.
யதார்த்த பூர்வமான ஒரு கோரிக்கையை நிரந்தரமாக முன்வைத்து ஆக்கபூர்வமான முறையில் செயற்பட்டிருந்தால் இதுவரையில் கணிசமான தீர்வை அடைய முடிந்திருக்கும்.
இப்போதும் ஒன்றும் குடிமுழுகிப் போகவில்லை. நீண்ட கால மற்றும் குறு கியகாலத் திட்டங்களை வகுத்துச் சரியான முறையில் செயற்பட்டால் தீர்வை அணுகிச் செல்ல முடியும்.
இப்பத்தியில் அடிக்கடி கூறுவதைப் போல, முழுமையான தீர்வை ஒரே நேரத்தில் அடைய வேண்டும் எனக் கூறுவது தீர் வுக்குத் தடையான நிலைப்பாடு. தமிழ்த் தலைவர்கள் பிரச்சினையைத் தவறாகக் கையாண்டதன் விளைவாக உருவாகியுள்ள சூழ்நிலை முழுமையான அரசியல் தீர்வை வலியுறுத்துவதற்குச் சாதகமானதாக இல்லை. எனவே, இப்போது எது சாதக மானதோ அதைப் பயன்படுத்த வேண்டும்.
மாகாண சபை
மாகாண சபை இப்போது சாதகமானது. அதை ஏற்றுக் கொள்வதால் தமிழ் மக்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறலாம். அதே நேரம் சில அதிகாரங்கள் புதிதாகக் கிடைக்கின்றன. மாகாண சபையை ஏற்பதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிடிவாதம் பிடிப்பதற்கான காரணம் விளங்கவில்லை. மாகாண சபையை ஏற்றுக் கொண்டு அதைச் சரியாகச் செயற்படுத்தும் சிரமத்துக்குப் பயப்படுகின்றார்களோ தெரியவில்லை.
தமிழ்ப் பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நடக்கின்றன என்று தமிழ்த் தலைவர்கள் அடிக்கடி கூறுவது வழக்கம். முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் தொடங்கி எல்லாத் தேர்தல்களிலும் தமிழ்த் தலைவர்கள் இதைப் பிரதான தேர்தல் கோஷமாக முன்வைத்து வருகின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் இந்தத் தேர்தலிலும் இதைப் பிரதானமாக முன்வைத்துப் பிரசாரம் செய்தார்கள். தமிழ் மக்களின் உணர்வுகளோடு சம்பந்தப்பட்ட பிரச்சினையைத் தேர்தல் கோஷமாக முன்வைத்து வாக்குப் பெறுவதொன்றும் கஷ்டமான காரியமல்ல. எதைப் பாதிப்பு என்று கூறுகின்றோமோ அதைத் தவிர்ப்பதற்கான முயற்சியை மேற்கொள்வதே கஷ்டமானது.
கஷ்டம் இல்லாத காரியத்தைச் செய்வதும் கஷ்டமான காரியத்தைத் தவிர்ப்பதும் தமிழரசுக் கட்சி முதல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வரை தலைவர்களின் பாரம்பரியமாக இருக்கின்றது.
இவர்கள் பிரச்சினைகளை மேடையில் நின்று பேசுவார்கள். பெரிதுபடுத்தியும் பேசுவார்கள். ஆனால் பிரச்சினையின் தீர்வுக்காக எதுவும் செய்வதில்லை.
இவற்றைப் பற்றித் தமிழ் மக்கள் எப்போது சிந்திக்கத் தொடங்குகின்றார்களோ அப்போது தான் அவர்களுடைய விமோசனத்தின் ஆரம்பம்.
தலைவர்கள் பிரச்சினைகள் பற்றிப் பேசும் போது ‘இவற்றின் தீர்வுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்’ என்று மக்கள் அவர்களைக் கேட்க வேண்டும்.

0 commentaires :

Post a Comment