இன்றுடன் தேர்தல் பிரச்சாரங்கள் இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கின்ற வேளையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகப்பிரமாண்டமான மக்கள் வெள்ளம் அணிதிரள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் மாபெரும் பிரச்சாரக்கூட்டம் நேற்று ஞாயிறு மாலை இடம்பெற்றது. சுமார் 8000 மக்கள் கலந்துகொண்ட இப்பொதுக்கூட்டமானது மட்டக்களப்பின் புறநகரப் பகுதியில் அமைந்துள்ள திராய்மடு சுவிஸ்கிராம திறந்தவெளி மைதானத்தில் இடம்பெற்றது. மாலை 05.00 மணியளவில் தொடங்கி இரவு 10.00 மணிவரை இடம்பெற்ற இவ் ஒன்றுகூடலில் கட்சியின் தலைப்பீட உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாநகர பிரதி மேயர் கௌரவ ஜோர்ஜ்பிள்ளை மற்றும் பிரதேசசபை தவிசாளர்கள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் என்ற அனைவரும் ஒருமித்த ஒரு நிகழ்வாக இது அமைந்திருந்தது. கட்சியின் செயலாளர் திரு கைலேஸ்வரராஜா வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து வேட்பாளர்களுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவரும் முதலமைச்சரும் ஆகிய கௌரவ சந்திரகாந்தன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்க தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் சின்னா மாஸ்டர் அவர்கள் மாலை அணிவித்து வாழ்த்தினார். அதனைத்தொடர்ந்து வேட்பாளர்கள் அனைவரும் தத்தமது சிறப்புரைகளை ஆற்றினார்கள். கௌரவ உரையாற்றிய முதலமைச்சர் கருத்து தெரிவிக்கையில் “அதிகாரம்மிக்க கிழக்கு மாகாணசபைக்கான ஆணையை வழங்கவேண்டியது கிழக்கின் பிரஜைகள் ஒவ்வொருவரதும் தேசிய கடமையாகும்” எனக்குறிப்பிட்டார். அரசியல் ஆலோசகர் சின்னா மாஸ்டர் பேசுகையில் “வெருகல் படுகொலைக்கும் வன்னிப்புலிகள் கொன்றொழித்த கிழக்கு போராளிகள் அனைவருக்கும் பதில் சொல்ல வேண்டியவர்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பினரே. கிழக்கு மக்களின் துரோகக்கூட்டமான தேசியக்கூட்டமைப்பினரை தோற்கடிக்க நாம் அனைவரும் ஒன்றுசேர வேண்டும்” எனக் குறிப்பிட்டார். வேறு எந்தக்கட்சிகளும் இதுபோன்ற ஒருகூட்டத்தை மட்டக்களப்பில் நடத்தவில்லை. இக்கூட்டத்தை சிறப்பாக நடாத்த மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் கௌரவ மாகாணசபை உறுப்பினர் பிரசாந்தன் அவர்களும் கட்சியின் உபசெயலாளர் ஜெயராஜ் அவர்களும் முன்னின்று உழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment