4/24/2010
| 0 commentaires |
புதிய அமைச்சரவை நேற்று பதவியேற்பு 37 அமைச்சர்கள்: 39 பிரதியமைச்சர்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் புதிய அமைச்சரவை நேற்றுப் பதவியேற்றுக் கொண்டது.
புதிய அமைச்சரவையில் 37 பேர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்க ளாகவும் 39 பேர் பிரதியமைச்சர்களாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
இது தொடர்பான உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதற்குத் தலைமை தாங்கினார்.
நண்பகல், சுபவேளையான 1.30 க்கு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் ஆரம்பமான இந்த நிகழ்வில், புதிய பொறுப்புக்களைப் பெற்றுக் கொண்ட அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களும் அவர்களது குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
முதலில் அமைச்சர்கள் 37 பேரும் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு ஜனாதிபதி முன் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டனர். அதன் பின்னர் 39 பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையில் தனித்தனியாக பதவியேற்பு பிரமாணங்களைச் செய்து கொண்டனர்.
ஆனாலும், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பதவிப் பிரமாணத்திற்கு அழைக்கப்பட்ட போதும் அவர்களுக்குரிய பொறுப்புக்கள் கூறி அழைக்கப்பட வில்லை.
இந்தப் புதிய அமைச்சரவையில் தமிழ், முஸ்லிம்களும் இடம்பெறுகின்றனர். டக்ளஸ் தேவானந்தா, ஏ. எச். எம். பெளஸி, ரிசாட் பதியுதீன், ஏ. எல். எம். அதாஉல்லா ஆகியோர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர்.
அதேநேரம், முத்து சிவலிங்கம், எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ், விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் பிரதியமைச்சர்களாகவும் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த அமைச்சரவையில் பல புதுமுகங்களும் இடம்பெறுகின்றன.
தமிழ், முஸ்லிம் அமைச்சர்களில் பாரம்பரிய கைத்தொழில், சிறு தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சராக டக்ளஸ் தேவானந்தாவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக ஏ. எச். எம். பெளஸியும் மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சராக ஏ. எல். எம். அதாஉல்லாவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் அமைச்சராக ரிசாட் பதியுதீனும் பதவியேற்றுள்ளனர்.
பிரதியமைச்சர்களில் முத்து சிவலிங்கம் பொருளாதார அபிவிருத்தி பிரதிய மைச்சராகவும் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சராகவும், விநாயகமூர்த்தி முரளிதரன் மீள்குடியேற்ற பிரதியமைச் சராகவும் பதவியேற்றுக் கொண்டனர்.
சத்தியப்பிரமாண நிகழ்வின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய அமைச்சர்கள், பிரதியமைச்சர்களுக்குத் தம் வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பணியில் புதிய அமைச்சர்கள் அர்ப்பணிப் புடனும் பொறுப்புடனும் சேவையாற்ற வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் முப்படைத் தளபதிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். கண்டி மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வர்களுக்கான அமைச்சுப் பொறுப்புக்கள் நேற்றைய தினம் வழங்கப்படவில்லை யென்பதும் குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment