4/22/2010

20வது பிரதமராக தி.மு பதவிப் பிரமாணம்

இலங்கையின் 20வது பிரதமராக தி. மு. ஜயரட்ன நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இது தொடர்பான உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று மாலை 6.30 மணியளவில் அலரிமாளிகையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள், இராஜதந்திரிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டதோடு புதிய பிரதமருக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
இதேவேளை, பிரதமர் தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவிப்பிரமாணம் செய்து கொள்ளுமென உத்தியோகபூர்வ வட்டாரங்கள் கூறின.
40 பேரைக் கொண்ட இந்த அமைச்சரவை ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலம் வரை இருக்குமென சு.க. செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இதற்கிடையில், இலங்கையின் ஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 8.45க்கு ஆரம்பமாகிறது.
இலங்கையின் 20வது பிரதமராக பதவியேற்றுக்கொண்ட டி. எம். ஜயரட்ன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்ட 225 உறுப்பினர்களும் இன்று புதிய பாராளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொள்வர். அதற்கு முன்னதாக சபாநாயகர் தெரிவு இடம்பெறும். சபாநாயகராக தெரிவு செய்யப்படும் உறுப்பினர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வார். அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு இடம்பெறும்.
குழுக்களின் பிரதித் தலைவர், ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு பிரதம கொரடா, அவைத் தலைவர் போன்றோரின் தெரிவுகளும் அதனைத் தொடர்ந்து இடம்பெறும். நடந்து முடிந்த பொதுத் தேர்தல்மூலம் ஏழாவது பாராளுமன்றத்துக்கு தெரிவான 196 உறுப்பினர்களும், தேசியப் பட்டியல் மூலம் தெரிவான 29 உறுப்பினர்களுமாக 225 பேரும் இன்று பாராளுமன்றத்துக்கு வருகை தரவுள்ளனர்.
குறிப்பாக ஐ.ம.சு.மு., ஐ.தே.க., ஐ.தே.கூ., இ. தமிழரசுக் கட்சி ஆகியவற்றில் புது முகங்களாக சுமார் 70 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை 8.45க்கு நடைபெறும் பாராளுமன்ற அமர்வுகளின் பின்னர் சபை எதிர்வரும் மே 4ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படவுள்ளது.

 

0 commentaires :

Post a Comment