4/05/2010

சுவாமி விபுலானந்தருக்கு 100 அடி உருவச்சிலை.

img_3568

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த இடமானகாரைதீவுக்கிராமத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தபடவுள்ளதாக கிழக்குமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். அண்மையில் காரைதீவுக் கிராமத்திற்கு சென்ற முதலமைச்சர் சுவாமி விபுலானந்தரது நினைவுப்பணிமன்றத்துக்கு சென்று அங்கு விபுலானந்தர் பிறந்த வீடு அவரது பாவனைப்பொருட்கள், அவரது இளமைக்கால புகைப்படங்கள் அவரது உருவச்சிலை என்பவற்றை பார்வையிட்டதோடு எமது மண்ணுக்கு பெருமை சேர்த்த இம்மகான் பிறந்த இடத்தை எனது ஆட்சிக்குள் புனித பிரதேசமாக பிரகடனப்படுத்துவேன் என உறுதி கூறினார். நேற்று (02-04-2010) தமது தேர்தல் பிரச்சாரங்களுக்காக காரைதீவு பிரதேசத்துக்கு சென்றபோது அங்கு பெருந்திரளான மக்கள் முதலமைச்சரை வரவேற்றதோடு அங்கு ஒரு பிரச்சாரக் கூட்டமும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதில் உரையாற்றிய முதல்வர் சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்டத்தின் மான்மியத்தை எடுத்தியம்பிய சுவாமி விபுலானந்த அடிகளாருக்கு மீன்பாடும் மட்டக்களப்பு வாவியிலே 100 அடி உயரமான உருவச்சிலையினை அமைப்பதாகவும் உறுதி அளித்தார். தொடர்ந்து குறிப்பிடுகையில் எங்களது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தேர்தல் விஞ்ஞாபனத்திலே கலை, கலாசார விழுமியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதோடு சுவாமி விபுலானந்த அடிகளாரது உருவச்சிலை அமைப்பது தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. காரைதீவில் அமைந்துள்ள விபுலானந்தர் நினைவுப்பணிமன்றத்துக்கு 300 நாற்காலிகளை முதல்வர் சந்திரகாந்தன் வழங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment