வரும் பாராளுமன்றத் தேர்தலில் சயேட்சையாக போட்டியிடும் இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் தேர்தல் விஞ்ஞாபனம்.
அன்பார்ந்த மக்களே
தமிழ் மக்கள் மத்தியில் வாழும் உரிமைகுறைந்த எமது மக் களின் சமூக சமத்துவத்துக்காகவும் ஏனைய நலன்களைப் பேணுவதற்காகவும் தீவிர அக்கறையுடன் செயற்பட்டுவந்த ஒரு தாபனம் அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபை. இந்தச் சபையின் மதிப்புக்குரிய பெருந்தலைவராக இருந்து அரும்பணியாற்றியவர் திரு. எம்.சி. சுப்பிரமணியம் அவர்கள். அன்னாரின் பாராளுமன்ற நியமன உறுப்பினர் பதவி, உரிமை குறைந்த எமது மக்களின் பிரச்சனகளை அரசு மட்டத்தில் எடுத்துச் செல்வதற்கும், அதற்கான பரிகாரத்தைக் காண்பதற்கும் வெகுவாய்ப்பாக அமைந்திருந்தது.
கடந்த 30 ஆண்டுகால அரசியல் நிலைமைகள் காரணமாக அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் கட்டமைப்புகள் யாவும் சிதைந்து மகாசபை வலுவிழந்து போயிற்று என்பது யாவரும் அறிந்த உண்மை. இன்று உருவாகியிருக்கும் புதிய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எமது மகாசபை மீண்டும் புத்துயிர் பெற்று சமூகப் பணியில் ஈடுபடுவதற்கு முன்வந்திருக்கின்றது. எங்கள் மகாசபைத் தலைவர் திரு. எம்.சி. சுப்பிரமணியம் அவர்கள் வகித்த பாராளுமன்ற உறுப்பினர் பதவி,அவர் ஆற்றி சமூகப்பணிகளுக்கு உறுதுணையாக இருந்து வந்திருக்கின்றது என்பதனைக் கவனத்தில் கொண்டு, அன்னார் காட்டிய வழியை பின்பற்றி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளோம். அத்தீர்மானத்துக்கமையவே அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் சார்பில் சுயேட்சைக் குழுவாக இப்பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றோம். ஒடுக்கப்பட்ட சமூகத்தினரான எமது மக்களும், எமது மக்கள் நலனில் அக்கறையுள்ள அனைவரும் ஆதரித்து ‘கெலிகொப்ரர்’ சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சைக் குழு (03) க்கு வாக்ககளிக்குமாறு வேண்டுகின்றோம். எமது எதிர்காலச் செயற்திட்டங்களில் முக்கியமான சிலவற்றை எமது வாக்காளப் பெருமக்கள் கவனத்திற்கு அறியத்தருகின்றோம்.
- எமது மக்களுக்கு இதுவரை சமத்துவம் அளிக்கப்படாது இருந்து வரும் கோயில்கள், தேனீர்கடைகள், பொதுக்கிணறுகள், வேலைத்தலங்கள், ஏனைய பொதுஇடங்கள் என்பவற்றில் சமத்துவம் பெறுதல்
- குடியிருப்பதற்குச் சொந்த நிலமில்லாத மக்களுக்கு நிலத்தைப் பெற்றுக் கொடுத்தல்.
- வீடு இல்லாத மக்களுக்கு வீட்டுவசதியை ஏற்படுத்துதல்.
- விவசாய நிலங்களை உரிமையாக்குதல்.
- சுரண்டலில் இருந்து விடுவித்து உழைப்புக்குரிய ஊதியத்தைப் பெறச்செய்தல்.
- அடிமை, குடிமை முறையின் மிச்சசொச்சங்களை அழித்தொழித்தல்.
- அடக்கி ஒடுக்குதலை முற்றாக நிராகரித்தல்.
- அதிகார வர்க்கத்தினரால் பாதிக்கப்படும் மக்களுக்கு நீதியை நிலைநாட்டி நிவாரணம் வழங்குதல்.
- கல்விபெற வசதியற்ற மக்களுக்கு அவ்வசதியைப் பெற்றுக்கொடுத்தல்.
- உயர்பதவிகளைப் பெறுவதற்கு தடையாக இடம்பெறும் முட்டுக்கட்டைகளைத் தகர்த்தல்.
- நவீன தொழில்நுட்பக் கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பினைத் தேடிக் கொடுத்தல்.
- வீதிகள், மின்விளக்குகள் என்பவற்றை எமது மக்கள் வாழும் பகுதிகளுக்குப் பெற்றுக்கொடுத்தல்.
- தொழில்சார் நெருக்கடிகளுக்குப் பரிகாரம் காணுதல்.
- படித்த வேலைவாய்ப்பற்றிருக்கும் இளைய தலைமுறையினருக்கு அவ்வசிதிகளைச் செய்தல்.
- தாய்மொழியின் வளர்ச்சியிலும், அதுசார்ந்த விடயங்களில் அக்கறை செலுத்துதல்.
- கலை, இலக்கியங்கள் குறிப்பாக நாட்டார் சார்ந்த கலைகளைத் தொடர்ந்து பேணுதல், வளர்த்தல்.
- எமது மக்கள சக்தியை ஒன்றுதிரட்டி பலத்துடன் மேலும் முன்னேறுதல்.
- திரு. பறனார்ந்து யோசப்அன்ரனி
- திரு.செல்லப்பா சதானந்தன்
- திரு.நடராசா தமிழ்அழகன்
- திருமதி. உருத்திராதேவி சண்முகநாதன்
- திரு.கந்தன் இராசரத்தினம்
- திரு.காத்தி அதிகாரம்
- திரு. மாணிக்கம் பொன்னுத்துரை
- திரு.தம்பியான் கந்தையா
- திரு. வயிரவன் மோகநாதன்
- திரு. பிலிப் ஜோண்கபாஸ்
- திரு. குணசிங்கம் கோபிநாத்
- திரு. சுப்பிரமணியம் மகேந்திரராஜா
← Χ
நீங்கள் தான் நாங்கள்எங்கள் வெற்றிதான் உங்கள் வெற்றி
உங்கள் வாக்குகளை எங்களுக்கு அளியுங்கள்
சுயேட்சைக் குழு 03
அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபை
பலாலி வீதி யாழ்ப்பாணம்.
0 commentaires :
Post a Comment