இலங்கைத் திருநாட்டின் 2010ம் ஆண்டிற்கான பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் நாடு பூராகவும் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. கடந்த காலங்களில் நடந்த தேர்தல்கள் போலல்லாது மிகவும் போட்டியானதும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததுமான ஓர் தேர்தலாகவே இது அமையப் போகின்றது. மூன்றில் இரண்டு அதிகப் பெரும்பான்மை எடுத்து அரசியலமைப்பினை மாற்றியமைப்போம் என ஆளுந்தரப்பினரும், நாங்கள் மீண்டும் மக்களுக்கு ஓர் சந்தர்ப்பத்தை வழங்கி அதனூடாக புதியதோர் மாற்றத்தினை எற்படுத்தி ஆட்சியையே மாற்றி அமைப்போம் என எதிர்த் தரப்பும், மீண்டும் தமிழ்த் தேசியம் மாற்று உருவத்தில் ஒஸ்லோ பிரகடணம் எனத் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், மாகாண சபைக்கான முழு அதிகாரங்களும் வழங்கப்படவேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் மேலும் பல தமிழ் கட்சிகளும் சிறுபான்மை அரசியல் தலைவர்களும் ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளுடனும் கூட்டுச் சேர்ந்தும் பலப் பரீட்சையில் இறங்கியுள்ளார்கள்.
இதில் சிறபான்மை மக்களாகிய தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் அரசியல் தலைமைகளின் தீர்க்க தரிசனமான முடிவுகள் இங்கு மிகவும் முக்கியத்துவமானது. அதனடிப்படையில் குறிப்பாக கிழக்கு, வடக்கில் தமிழ் கட்சிகள் என எடுத்துப்பார்ப்போமானால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அவ்விரண்டுக்குமே ஆசனங்களைப் பெறும் வாய்ப்பு அதிகம் காணப்படுகின்றது. இரு கட்சிகளுக்குமான பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை விட கிழக்கில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கே அதிகப்படியான ஆசனங்களைப் பெறும் வாய்ப்புக்கள் தென்படுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
திருகோணமலை மாவட்டத்தினைப் பொறுத்தவரையில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரச்சாரம் மிகவும் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே வேளை அக் கட்சிக்கான ஆதரவும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. கடந்த மூன்று நாட்களாக திருகோணமலையின் மூதூர், சம்பூர், ஈச்சிலம்பற்று, வெருகல், இலங்கைத்துறை முகத்துவாரம், சேனையூர், கட்டைபறிச்சான், பட்டித்திடல், திரியாய், புல்மோட்டை, நிலாவெளி, சலப்பையாறு, கோபாலபுரம், இறால்குழி, சூரச்சேனை, கந்தளாய், தம்பலகாமம், அது போன்ற பல இடங்களுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேதுரை சந்திரகாந்தன் நேரில் சென்று அப் பிரதேச மக்களின் குறைகளைக் கேட்டறிந்து சில உடனடித் தீர்வுகளை வழங்குவதோடு தனது கட்சியின் நிலைப்பாடு குறித்;தும் விளக்கமளித்து கட்சிக்கான ஆதரவினைத் தேடி வருகின்றார். நிச்சயமாக மட்டக்களப்பு , அம்பாரை மாவட்டங்களில் த. ம. வி. பு .கட்சிக்கு இருக்கின்ற ஆதரவினைப் போல் திருகோணமலையிலும் அதிக ஆதரவு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கே இருப்பது திட்;டவட்டமான உண்மையாகும்.
0 commentaires :
Post a Comment