3/07/2010

மகளிர் தினமும் மலையகப் பெண்களின் மேம்பாடும்

மலையகப் பெருந்தோட்ட பெண்களின் பின்புலத்திலும் பல்வேறு உண்மைகள் மறைந்து புதைந்து கிடக்கின்றன. ஆனால் இதனை உணர்ந்து கொள்ளாத பல சக்திகள் கட்டியுள்ள கட்டுமானங்களை அவிழ்ப்போம். அடிமைத்தனத்திலிருந்து அவர்களை விடுவிப்போம் மற்றும் விடுதலை விடிகிறது என்றெல்லாம் ஆண்டுக்கொருமுறை ஆலாபனை வார்த்தை சொல்லுவதை மாத்திரம் தாரகமாகக் கொண்டுள்ளன. இன்றைய மகளிர் தின கொண்டாட்டமும் மேற்கூறியவற்றை மெய்ப்பிக்கும் என்பதில் ஐயமில்லை.

வேண்டுவதை வேண்டாமென்று தடுக்கும் போதுதான் வேட்கை அதிகரிக்கிறது. அதுதான் ஆசைகளை அறுப்பதற்கு பதிலாக தானாகவே அவ்வாசைகள் அறுந்து விடுகின்றன. நிஜங்களைக் கண்டு அவற்றின் மதிப்பீடுகளை உணர்ந்தால் தான் உண்மை உள்ளத்தை உலுக்கும்.
மலையகப் பெண்களின் மேம்பாடு பற்றிப் பேசும் போது அந்தப் பெண்கள் எழுப்புகின்ற கேள்விகள் நினைவுக்கு வருகின்றன.
எண்ணற்ற இளம் பெண்களின் இந்த இயல்பான ஏக்கத்தை நோக்கின் பரிதாபப் பிறவிகளாக பார்க்கப்பட வேண்டியவர்கள் எல்லாருமல்லர். ஆனால் கல்வியில் பின்தங்கி காலத்தின் கட்டாயத்ததால் சமூகப் பொருளாதார சுமைகளிலிருந்து விடுபடுவதற்கு உழைப்பையே தஞ்சமாகக் கொண்டிருக்கும் பெருந்தோட்டப் பெண்களைப் பற்றித்தான் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் நிலவுகிறது.
வளர்ந்து வருகின்ற இந்தச் சமுகம் இன்னுமொரு பெண்ணின் உரிமையை கொடுக்க மறுப்பதால்தான், உழைக்கும் பெண்களின் மாண்பு உதாசீனப்படுத்தப்படு கிறது. பெருந்தோட்ட பெண்களும், இந்த வேள்விப் பட்டியலில் கேள்விப் பொருளாக மாறியுள்ளனர். நிறைந்த உழைப்பு, குறைந்த வருமானம், செறிந்த அடிமைத்தனம், இதுவரை வாழ்க்கை என்ற ஏக்கப் பிரவாகம் இவர்களின் வெளிப்படாத வேதனையாக நிறைந்து நிற்கிறது. நாட்டிலுள்ள எல்லாப் பெண்களுக்கும் ஒரே மாதிரியான சமூக நீதியே காணப்படுகின்ற போது பெருந்தோட்டப் பெண்களும் அதற்குள் தானே அடங்குகின்றார்கள் என்ற சிலரின் நியாயப்படுத்தல்கள் தொடரக்கூடும். எனினும் பெருந்தோட்டப் பெண்கள் ஆணாதிக்கம், சம உரிமையின்மை, பாரபட்சம், பாதுகாப்பின்மை, சந்தேகம், வரதட்சிணை, பாலியல் வன்புணர்ச்சி, அடக்குமுறை அதிகாரம், உலகமயதாக்கம், சட்டவிரோத மது தயாரிப்பின் பாதிப்பு போன்ற காரணங்கள் முழுவாசியை முதன்மையாகிக் கொள்வதில் முக்கிய இடம் பெறுகின்றனர் என்பதை பெருந்தோட்ட பெண்களிடையே நடத்தப்பட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
பெண்ணியம் என்னும் கருத்தியல் பிரெஞ்ச் சமூகவியலாளர் சார்லஸ் போரியர் என்பவரால் உருவாக்கப்பட்டது. அவர், தன்னையும் உருவாக்கிக்கொண்டு ஒரு மாறுபட்ட சமுதாயத்தின் உருவாக்கத்திற்க்கும் பங்களிக்கும் பெண் உருவத்தை ‘புனித பெண்மை’ என அடையாளம் காட்டினார். அப்படியானால் தேசத்தின் மாறுபட்ட பொருளாதாரத்திற்கு தன்னை அர்ப்பணமாக்கும் பெருந்தோட்டப் பெண் தொழிலாளியும் இந்த புனிதத்துக்குள் புதைந்து கொள்கிறாள் எனலாம்.
17ம் நுற்றாண்டில் இங்கிலாந்து நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட பெண்கள் இயக்கத்தின் வியாபகமே இன்றுவரை பெண்ணியம் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றது. இந்த வரிசையில் மலையகப் பெருந்தோட்ட பெண்கள் பற்றி அமைப்பு ரீதியாக தொழிற்சங்கங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், பெண்கள் அமைப்புக்கள் என்பன தவறாமல் பேசிக்கொண்டிருக்கின்றன. அதிகமான அமைப்புக்கள் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழிவியலோடு ஒன்றிப்போய் கரிசனை காட்டத் தவறினாலும், அவர்கள் பற்றிய விடயங்களை ஊடகங்களில் வெளியிட்டு உலகுக்கு தெரிவிக்க மறந்ததில்லை. எது எப்படியாயினும்,
என்று நீங்குமோ எங்களின் கொடுமைகள்?
எப்போது மலருமோ விடுதலைப் பூக்கள் என்ற கேள்வியோடு வாழும் தோட்டப் பெண்கள் மாறுபட்ட சூழலில் வாழுகின்ற தன்மையினை கவனத்திற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
இலங்கையைப் பொறுத்தளவில் சார்க் வலய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இலங்கைப் பெண்களின் வாழ்வியல் பின்னணி சற்று திருப்திகரமாகவே இருக்கின்றது. என்றாலும் பெருந்தோட்டப் பெண்கள் இன்னும் பிற்படுத்தப்பட்டவர்களாகவும் புறக்கணிக்கப்பட்டவர்களாகவுமே உள்ளனர். அநீதிகளுக்கு ஆளாகி வரும் இவர்கள் நாட்டின் அபிவிருத்திக்காக அளித்து வருகின்ற பங்களிப்பு கண்டுகொள்ளப்படாததாக இருந்து வருகின்றது.
இன்றைய சமூக பொருளாதார காரணிகளாலும் பெருந்தோட்டங்களில் இருந்து ஆண் தொழிலாளர்கள் படிப்படியாக வெளியேறி வருவதனாலும் ஆண் தொழிலாளர்கள் மேற்கொண்ட பல்வேறு கடமைகளை தாமே மேற்கொள்பவர்களாக மாத்திரமின்றி பெருந்தோட்டத்தில் எஞ்சியவர்களாகவும் பெண்களே விளங்குகின்றனர் எனலாம். இதனால் அவர்கள் குடும்பத்தில் பிரதான வருவாய் ஈட்டுபவர்களாகவும் ஓய்வுபெற்ற தமது குடும்ப அங்கத்தவர்களை பராமரிக்கக் கூடியவர்களாகவும் தனது குழந்தைகளை பராமரிக்க வேண்டியவர்களாகவும், எல்லாவற்றுக்கும் மேலாக நேரத்தோடு போராடுபவர்களாகவும், விறகு சேர்த்தல் முதல் வீட்டிற்கு பொருட்கள் கொள்வனவு செய்வது வரை கவனிக்க வேண்டிய கடமைகளை கொண்டவர்களாகவும் விளங்க வேண்டியுள்ளது. ஓய்வில்லாமல் உழைக்கும் பெருந்தோட்ட பெண்ணைச் சுற்றியிருக்கிற வலைப்பின்னல்கள் வறுமைப் பின்னல்களாகவும், வெறுமைப் பின்னல்களாகவும் விளங்குகின்றன.
அடிப்படைக் கல்வியில் அபிவிருத்தி பெறாத இவர்கள் ஒடுக்குமுறைக்கு உட்பட்டிருப்பதால் அரசியல், தொழிற்சங்கம், ஆலயம், சமூகப் பிரதிநிதித்துவம் என்பவற்றிலும் பின்தங்கியவர்களாகவே இருக்கின்றனர்.
மேலும் இவர்களுக்கு குறைவான போதிய சத்துணவின்மை, குடும்பத்தவர்களில் ஆண்களின் மதுப் பாவனை, பொருளாதார தாக்கம் போன்ற பல்வேறு காரணிகள் சுமைகளாகி வருகின்றன. பொதுவாக தொழில் பாதுகாப்பு, தமக்கான சீருடை, வேலைத்தளத்தில் எந்தவொரு அடிப்படை வசதிகள் இல்லாமையாலும், பெண்களை நிருவகிக்கும் பெண் நிருவாகிகள் இல்லாமலும் ஓரங்கட்டப்பட்டதொரு ஒடுக்குமுறைச் சின்னமாகவும் விளங்குகின்றனர். ஏனைய துறையினரோடும், சமூகங்களோடும் தொழில் ரீதியாகவும் ஒப்பிடும் போது எல்லா வகையிலும் பால்நிலை சமத்துவமற்ற நிலையில் பரிதாபத்துக்குரியவர்களாகவே விளங்குகின்றனர்.
ஆகவே பெருந்தோட்ட சமுதாயப் பெண்கள் மாண்புற்று வாழ்வதற்கு இவ்வருட மார்ச் 08ம் திகதி பெண்கள் தினமாவது ஒரு புரட்சிகரமான முன்னுருவாக்கத்தை உருவாக்குமேயானால் அதுவே அவர்களை ஒதுக்கலிலிருந்தும், ஓரங்கட்டலிலிருந்தும் மீட்டு சிந்தனை உசுப்பலுக்கு வித்திடும் என்பதில் ஐயமில்லை.
ஓ தோட்டப் பெண்ணே!
ஆடிவரும் தென்றலும்
பாடி வரும் பறவையும்
ஓடிவரும் அருவியும்
உலகத்தில்
சுதந்திரமாக சுவடு பதித்ததைப் பார்!
நீ! இயற்கையின் சிகரமல்லவா!
உன் அறியாமைச் சிறையை விட்டு
வெளியே வா!
கட்டுக்களை உடைத்தெறி - ஏன்
உடைத்து எரி!
அப்போது விடுதலை தேடும் உனக்கு
வானம் கூட
தொடு தூரத்தில் எரியும் என்பது போல்
மலையக பெருந்தோட்ட பெண்கள் அறியாமையை கட்டவிழ்த்து உணர்வுகளில், எண்ணங்களில் சொற்களில், செயல்களில், வாழ்க்கையில் நம்பிக்கையோடு விடுதலை தேடும் நாள் உதயமாக சர்வதேச மகளிர் தினம் அடிகோலட்டுமாக!
பசறையூர்
க. வேலாயுதம்



நன்றி - தினகரன்

0 commentaires :

Post a Comment