3/31/2010

தேனிசை பாயும் மட்டு வாவியின் மைந்தன்: சுவாமி விபுலானந்தர் ( ஞாபகார்த்த கவிதை) எஸ்.எம்.எம்.பஷீர்



தமிழ் முஸ்லிம் இன ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்த விபுலானந்தர் மருதமுனை புலவர்மணி ஆ.கா. சரிப்புடீன் போன்றோருடன் நெருங்கிய நட்பும் கொண்டிருந்தவர். விபுலானந்தர் போன்ற சிறந்த மனிதர்களின் பண்பியல்புகளை நினைவு கூறுவது இன்றைய இன ஐக்கியம் பேணவிழையும் சமூகங்களின் பார்வைக்கும் பயிற்சிக்கும் தேவையாகவுள்ளது. இக்கவிதையினை அவரின் 118 வது பிறந்ததினத்தை (27 பங்குனி ) முன்னிட்டு அவர் பற்றி நான் எழுதிய கவிதையொன்றினை இங்கு மீள்பதிவு செய்கிறேன்.
விபுலானந்தர்
“விபுலானந்தர்”
உன் பெயரில் கூட
மரியாதை
ஒட்டியிருக்கிறது
தனி மனித
தமிழ் சங்கம் நீ
மதுரைக்குப் பின்பு
சஞ்சீவி மலையை
தூக்கிவரவில்லை நீ
உன் முதுகில்
சங்கப் பலகையே ஏறி
அமர்ந்து கொண்டது.
நீ துறவியோ!
நான் மறுப்பேன்
தமிழ் கன்னியை
காந்தர்வம் செய்தவன் நீ;
இல்லையென்றால்
முத்தமிழுக்கு உன்னையே
காணிக்கையாக்கியவன் நீ
மட்டு வாவியில்
மகரயாழை
நீ இட்டு வைத்ததனால்
பூரணை நிலவில்
தேனிசை வந்து -காதில்
இன்றும் பாய்கிறது;
மடம் கொடுத்தே
தமிழ் நாக்கில்
இடம் பிடுங்கியவன் நீ
கிழக்கில் கதிரவனுக்கு
வர்ணம் தீட்டியவன்
வயல்களையும்
வரப்புகளையும்
உடைத்துக் கொண்டே
கல்விமடை திறக்க
வைத்தவன் நீ;
உன் கல்லறை
மலர் வரிகள்-உன்
இதயக்கமலத்தின்
இறுதி மரணசாசனம்!
எஸ். எம்.எம் பஷீர் எஸ்.எம் எம் நஸீர் எழுதிய “ஆவதறிவது”(2008) எனும் கவிதை தொகுதியிலிருந்து

0 commentaires :

Post a Comment