கடந்த நவம்பர் மாதம் எமது தளத்தில் வெளியான உரையாடல்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளரும், கட்சியின் செயற்குழு உறுப்பினரும், பெண்ணியவாதியுமான யூடி தேவதாஸன் அவர்களுடனான பேட்டி.
பேட்டிகண்டவர்: கு.சாமித்தம்பி-மட்டக்களப்பு
கேள்வி:
உங்களது ஆரம்பகால அரசியல் சமூக பொதுவாழ்வு பற்றிக் கூறமுடியுமா?
பதில்:
ஆம்! நான் எனது உயர்கல்வியைத் தொடர்ந்து ஒரு ஆங்கில ஆசிரியையாக எனது பொதுவாழ்வை ஆரம்பித்தேன். அது தொழிலாக இருந்தபோதிலும் அதனை ஒரு சமூகத் தொண்டாகவே கருதிச் செயற்பட்டிருந்தேன். அவ்வேளைகளில் அகோர யுத்தம் நடந்துகொண்டிருந்த வேளையில் எங்களது பிரதேசமான திருகோணமலையும் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுக்கிடந்தது. இராணுவக் கெடுபிடிகள் ஒருபுறம், புலிகளது நெருக்குவாரம் மறுபுறமுமாக பொதுமக்கள் மிகப்பெரிய துன்பங்களை எதிர்கொள்ள நேர்ந்தது. நான் ஒரு ஆசிரியையாக இருந்தமையால் எனக்கும் பொதுமக்களுக்குமான உறவுகளில் கூடிய நெருக்கம் இருந்தது. அவர்களது துயரங்களை அறிந்துகொள்ளவும், அவற்றை காதுகொடுத்துக் கேட்கவும், ஆறுதல் சொல்லவும் வாய்ப்புகள் ஏற்பட்டது. ஆனால் அவர்களது துயரங்களில் பங்கெடுப்பதற்கு அப்பால் அவற்றைத் தீர்த்துவைக்க என்னால் முடியவில்லை. இது என்னை சமூகவாழ்வுமீதான கரிசனை நோக்கித் தள்ளியது. நான் எனது ஆசிரியப் பணியுடன் “care” (கெயர்) போன்ற சர்வதேசத் தொண்டுநிறுவனங்களில் இணைந்து அல்லலுறும் மக்களுக்கு சில உதவிகளை செய்வதில் ஈடுபட்டேன். அந்த வேலைத்திட்டங்கள் எனக்கு மிக திருப்தி அளித்தன. ஆனாலும் எனது ஆசிரியப்பணியில் இருந்துகொண்டு சமூக நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவது பாரிய நேரகால சிக்கலுக்குள் என்னை மாட்டிவிட்டது.
அந்தநிலையில் 2000 ஆம் அண்டு நான் எனது ஆசிரியைத் தொழிலில் இருந்து முழுமையாக விடுபட்டு தொண்டுநிறுவனங்களின் முழுநேரச் செயற்பாட்டாளியாக மாறினேன். எனினும் அதிலும் எனக்கு நடைமுறை சார்ந்து பலதடைகளும், முட்டுக்கட்டைகளும் ஏற்படவே செய்தது. மக்களின் ஏழ்மைகளையும், போர்கால கஸ்ரங்களையும் போக்குவது என்ப தற்கப்பால் பெண்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகளையும் வன்முறைகளையும் தீர்ப்பது பற்றியம் போர்ச்சூழல் ஏற்படுத்துகின்ற வாழ்வியல் சவால்கள் மற்றும் குழந்தைப் போராளிகள் பற்றியெல்லாம் நாம் கருத்தில் கொள்ளவேண்டியிருந்தது. இவற்றிக்கு எம்மால் முழுமையான தீர்வுகளைக் காணமுடியவில்லை. அதாவது சர்வதேச தொண்டுநிறுவனங்களின் தீர்மானங்களையும் வேலைத்திட்டங்களையும் அமூல்படுத்தும் நிலையில் மட்டுமே நாம் இருந்தோம்;. நாங்கள் விரும்புகின்ற எமது மக்களுக்க தேவையான வேலைத்திட்டங்களை வகுத்துக்கொள்வதற்கும், எமது பிரதேச, சூழலுக்கேற்றவாறு தீர்மானங்களை எடுத்துச் செயற்படவும் நிறுவனங்களின் நிர்வாக, ஒழுங்க கட்டமைப்புகள் இடமளிக்கவில்லை. காரணம் சர்வதேச மட்ட கொள்கை வகுப்பாளர்களுக்கும், உள்ளுர்மட்ட பிரத்தியேக சூழலுக்குமிடையில் பாரிய இடைவெளிகள் இருந்தன. எனவே எமது நாட்டின் தேசிய, உள்ளுர் மட்டம் சார்ந்த அறிவுடனும் அனுபவங்களுடனும் ஓர் உள்@ர் தொண்டுநிறுவனத்தை உருவாக்க வேண்டியம் அவசியத்தை நாம் உணர்ந்தோம். அதன் அடிப்படையில் பெண்கள், சிறுவர்கள் பராமரிப்பு நிறுவனம் (WACCO) எனும் ஒரு அமைப்பினை 2002 இல் நாம் உருவாக்கினோம். அந்த அமைப்பின் ஊடாக நாம் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு கூடிய சேவையை ஆற்றமுடிந்தது. பெண்களுக்கெதிராக இழைக்கப்படும் வன்முறைகளையிட்டு பொதுஜன திரளின் கவனத்தை ஈர்க்க பல வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்தோம். குழந்தைகளை படையணிகளில் சேர்ப்பதற்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயற்பாடுகளிலும் எம்மால் முடிந்தவரை ஈடுபட்டோம். அதற்கு புலிகளது இராணுவவாத அணுகுமுறைகள் முட்டுக்கட்டைகள் போட்டன. அதேபோல் அப்பாவி மக்களின் கைதுகள், சித்திரவதைகளுக்க எதிரான எமது மனிதாபிமானப் பணிகள் அரச இயந்திரத்தின் பிரதிநிதிகளையும் கோபத்துக்கு உள்ளாக்கியது. திருகோணமலையில் அரச அதிபரில் இருந்து பல அரச அதிகாரிகளுக்க எமது வேலைத்திட்டங்கள் உவப்பானதாக இருக்கவில்லை. இவர்களில் அதிகமானோர் ஆண்களாகவும், பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருந்தமையும் அதற்கொரு காரணமாகும். அவர்கள் எமது நிறுவனத்தை தடைசெய்துவிட பலவிதமான சூழ்ச்சிகளில் ஈடுபட்டனர். எமது அமைப்பினை வாயாடிப் பெண்கள் கூட்டம் என்று மட்டம்தட்டி விடுகின்ற போக்கின் இறுதிவெளிப்பாடாக இச்சூழ்ச்சிகள் அமைந்திருந்தன. நிர்வாக, அரசியல் மட்டங்களில் எமக்கு ஏற்பட்ட இந்த எதிர்ப்புகளில் இருந்தும் தடைமுயற்ச்சிகளில் இருந்தும் தப்பிக்கவும் எமது வேலைத்திட்டங்களைத் தொடரவும் நாம் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்களை நாடவேண்டியிருந்தது. எமது பிரச்சனைகளை காதுகொடுத்துக் கேட்கக்கூட பல தமிழ் தலைமைகள் தயாராக இருக்கவில்லை. ஒரு தமிழ் கட்சியின் தலைவரான அமைச்சர் ஒருவர் எமது நிறுவனத்தின் மீது விதிக்கப்பட இருந்து தடையை நிறுத்தித் தருவதற்கு கைமாறாக எமது அமைப்புக்கும், எனக்கும் மக்களிடமிருந்த செல்வாக்கை தனது கட்சிக்காக விலைபேச முயன்றார்.
ஒரு பெண்கள் அமைப்பு எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள அதிகாரப் புள்ளிகளில் பெண்கள் இல்லாத குறையை அப்போது நாங்கள் பலமாக உணர்ந்தோம். எனினும் கடைசி முயற்சியாக நம்பிக்கையுடனும், நம்பிக்கையின்மையுடனும் ஒருவரைச் சந்தித்தேன். அவர்தான் இன்றைய எமது கௌரவ முதலமைச்சர் பிள்ளையான் அவர்கள். அப்போது அவர் அப்படித்தான் அழைக்கப்பட்டார். முதலில் எமது நிலைமைகளை பொறுமையுடன் விளங்கிக்கொண்டார். உண்மையில் அவ்வேளைகளில் அவரது பெயர் பற்றி பரப்பப்பட்டிருந்த பொய்மைகள் எமைவிட்டு அகன்று போனது. எமது அமைப்பு எதிர்கொண்ட பிரச்சனைகளை முடிந்தளவு தூரம் புரிந்துகொள்ள அவர் முயன்றார். அன்று அவருக்கு அரசியலில் அதிகாரம் இல்லாத நிலையிலும் மேலிடங்களில் அவருக்கிருந்த செல்வாக்கை பயன்படுத்தி எமது அமைப்பினை தொடர்ந்து இயங்க வழிசெய்தார். எந்தவித அரசியல், பதவி பற்றிய எதிர்பார்ப்புகளும் இல்லாத ஒரு காலகட்டத்தில் அவர் எமது சமூகத்தின் மீது காட்டிய அக்கறை அவர்மீதான அளவுகடந்த மரியாதையை எமக்கு ஏற்படுத்தியது. ரி.எம்.வி.பி. கட்சியாக காலப்போக்கில் அவர்கள் பரிணமித்தபோது எம்போன்றவர்கள் பலர் அக்கட்சியை நம்பிக்கையுடன் நெருங்கும் வாய்ப்புகள் ஏற்பட்டன. கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலின்போது நானும் பலபெண்களும் சந்திரகாந்தன் என்கின்ற அந்த பிள்ளையான் முதலமைச்சராக வேண்டும் என்று பகிரங்கமாக இறங்கி வேலைசெய்தோம்.
கேள்வி:
இவை தவிர நீங்கள் ரி.எம்.வி.பி. இல் முக்கிய செயற்பாட்டாளராக மாறுவதற்கு வேறு ஏதும் காரணங்கள் உண்டா?
பதில்:
நிச்சயமாக! முதலில் புலிகளது அட்டகாசம் கிழக்கில் ஒழித்துக்கட்டப்பட வேண்டும் என்று நாம் விரும்பினோம். எமது சமூகத்தின் ஏழ்மை நிலையை, குடிகாரத் தகப்பன்மாரின் பொறுப்பற்ற தன்மைகளை, விதவைத்தாய்மாரின் இயலாமையை பயன்படுத்தி எமது சிறுவர் சிறுமியரை கட்டாயமாக தமது படையணிகளில் இணைத்துக்கொண்டனர் புலிகள். ஆனால் இப்படியெல்லாம் யாழ்ப்பாணத்தில் அவர்களால் செய்யமுடிந்ததா? இல்லையே! இந்த நிலைமை மாறவேண்டும் என நாம் உள்@ர விரும்பினோம். அந்த மாற்றத்தை ஏற்படுத்த முயன்ற ரி.எம்.வி.பி. யை நாம் பலமாக ஆதரித்தோம்.
இதுமட்டுமல்ல இந்த இக்கட்டுகளுக்கு மத்தியில் சிறுவர்களின் பாதுகாப்புக் குறித்தும், கல்வி வளர்ச்சி குறித்தும் எமது பிரதேச ஆசிரியர்களாய் இருந்த நாம் கொண்டிருந்த அக்கறைகளை தட்டிக்கழித்த, பரிகசித்த எமது பள்ளிக்குழந்தைகளைப் பார்த்து “இதுகளெல்லாம் எங்கே தேறப்போகுதுகள்?” என்று சாபமிட்ட யாழ்ப்பாணத்து வாத்திமார்களை நான் நேரடியாக காணநேர்ந்தமையெல்லாம் பழங்கதையல்ல. திருமலையில் மட்டுமல்ல கொழும்பிலும் நான் பணியாற்றிய பாடசாலைகளில் கூட இந்த மேலாதிக்க மனோபாவத்தை நிர்வாக மட்டத்தில் நான் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இவைகளெல்லாம் கிழக்கின் தனித்துவம் குறித்த எமது உணர்வுகளை மெது மெதுவாக தூண்டிவிட்டன. இப்படி பல்வேறு காரணங்கள் எமக்கான ஒரு கட்சியின் தேவையை, தலைமையின் தேவையை, தனிவழியின் தேவையை எமக்கு உணர்த்தின. எமது எதிர்பார்ப்புகளுக்கும் உள்@ர இருந்த அரசியல் அபிலாசைகளுக்கும் ரி.எம்.வி.பி. செயல்வடிவம் கொடுக்க முனைந்தபோது நாமும் அதில் முக்கிய பங்காளர்களாக எம்மை மாற்றிக்கொண்டோம்.
கேள்வி:
உங்களின் சமூக அரசியல் ஈடுபாடு கூடியளவில் பெண்களின் பிரச்சனைகளில் இருந்து முகிழ்ந்ததாக புரிந்துகொள்ள முடிகிறது. இன்றைய நிலையில் கிழக்குமாகாணப் பெண்கள் எதிர்கொள்ளும் உடனடிப்பிரச்சனைகள் பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?
பதில்:
வீரம் விளை நிலம் கிழக்கு! என்று கூறிக் கூறியே புலிகள் எமது மாகாணத்தை விதவைகளின் விளைநிலமாக்கிவிட்டு சென்றிருக்கிறார்கள். சுமார் 46 000 (நாற்பத்தி ஆறாயிரம்) விதவைகளை தாங்கிநிற்க நிற்பந்திக்கப் பட்டிருக்கிறது எமது மண். அதில் 12 000 பேர் மூன்று குழந்தைகளைக் கொண்ட (30 வயதுக்குக் குறைந்த) இளம் விதவைகளாகும். அதுமட்டுமல்ல வன்னி முகாம்களில் இருந்து வருகின்ற எமது பிரதேச அகதிகள் மத்தியிலும் குறிப்பாக திருகோணமலை அகதிகளில் பெரும்பான்மையானோர் விதவைகளாகவே காணப்படுகின்றனர். இவர்களது வாழ்வாதாரம் பற்றிய பாரிய பிரச்சனைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய ஒன்று. இவர்களுக்கான மறுவாழ்வை மட்டுமல்ல, ஆத்ம பலத்தையும் மீளக்கட்டியெழுப்புவது என்பது எமது சமூகத்தைப் பொறுத்தவரையில் பெரும் சவாலானதொன்று. அதேபோல முன்னாள் பெண்போராளிகளின் இயல்பு வாழ்வும், சமூக இணைவும் பல சிக்கல்கள் நிறைந்தவை. இயக்கம் 2004 இல் பிளவு பட்டபோது மூன்று மாவட்டங்களிலும் இருந்த போராளிகள் சுமார் எட்டாயிரத்தி ஐநூறு (8500) எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களில் பெண் போராளிகள் சுமார் ஐயாயிரம் (5000) வரை இருக்கலாம். அவர்களில் கொல்லப்பட்டோரும் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றோருமாக 500 பேர் வரை கழித்துப் பார்த்தாலும் 4500 முன்னாள் பெண்போராளிகள் எம்மத்தியில் வாழ்கின்றனர். அவர்களது பாடசாலைப் படிப்புகள் புலிகளது அக்கிரமங்களினால் சீர்குலைக்கப்பட்டுவிட்டன. இப்படியாக பல பிரச்சனைகள் இன்று எம்மைநோக்கி வியாபித்து எழுந்து நிற்கின்றன. இவையெல்லாம் யுத்தத்தின் நேரடி விளைவுகாளக பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளாகும். இவற்றுக்கும் மேலாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் எமது சமூகத்தின் சகல பரப்பிலும் நிறைந்து காணப்படுகின்றன.
கேள்வி: இவற்றுக்கெல்லாம் என்ன தீர்வு? மாகாணசபை ஆட்சிமுறைய+டாக மேற்கொள்ளப்பட்டுவருகின்ற நடவடிக்கைகள் என்ன?
பதில்:
பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வாதாரங்களை உயர்த்த சுயதொழில் வாய்ப்புகளுக்குரிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பயிற்சிகளின் முடிவில் அவர்களது துறைசார்ந்து தொழில்கள் தொடங்குவதற்குரிய உதவிகள் செய்யப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை சர்வதேச தொண்டு நிறுவனங்களாலும், ஒரு சில மாகாண சபையினாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
என்னைப் பொறுத்தவரை இத்தகைய முயற்சிகள் போதுமானவை இல்லை என்றே கருதுகின்றேன். கோழிவளர்ப்பு, ஆடுமாடு வளர்ப்பு, தையல் மெசின் என்று வழமையான பாணியிலேயே இவைகள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் ஊடான பலாபலன்கள் எதிர்பார்ப்பது போல் அமைவதும் இல்லை. இத்தகைய முயற்சிகளுக்கு அப்பால் எமது கிழக்கு மாகாணசபை பல புதிய திட்டங்களை முன்னெடுக்க முயன்றாலும் அவற்றை அமூல்படுத்துவதற்கு அதிகாரம் பற்றிய எல்லைகள் குறுக்கே நிற்கின்றன.
எனவேதான் இந்த உடனடி அல்லது தற்காலிக வேலைத்திட்டங்களைத் தாண்டி நாம் எதிர்காலம் குறித்து கடுமையாக சிந்திக்கவேண்டியுள்ளது. பெண்களின் கூடியளவிலான அரசியல் ஈடுபாடும், அதிகார மையங்களை முடிந்தவரை பெண்கள் கைப்பற்றுதலுமே இவற்றுக்கெல்லாம் தீர்வு என்பது எனது கருத்தாகும். அதனூடாகவே சட்டவாக்கத்துறையிலும், கொள்கை வகுப்புத்துறையிலும் பெண்கள் தமது செல்வாக்கைச் செலுத்த முடியும்.
கேள்வி:
நீங்கள் சொல்லுவது சரியாக இருக்கலாம். ஆனால் இவற்றுக்கெல்லாம் பெண்கள் முன்வரவேண்டுமே! இன்றைய கிழக்குமாகாண சூழலில் அதற்கான வாய்ப்புகள் எவ்வாறு உள்ளன?
பதில்:
பெண்கள் முன்வருகின்றார்களா என்று கேள்வி எழுப்பிக்கொண்டிருப்பதை விட விடயங்களை சாதகமாகவும், நம்பிக்கையுடனும் அணுகுவதே சாலச் சிறந்தது என நான் கருதுகின்றேன். இன்று கிழக்கில் ஏற்பட்டுள்ள அமைதிநிலை பயப்பீதிகொண்ட நீண்டகால சூழலை மாற்றி அமைத்திருக்கின்றது. இன்று ஏற்பட்டிருக்கின்ற அமைதிநிலை காரணமாக படித்த இளம் பெண்களிடத்தில் அரசியலில் தாமும் பங்கெடுக்கவேண்டும் என்கின்ற வாஞ்சை அதிகம் தென்படுகின்றது. இவர்களை அணிதிரட்டுவதும், அரசியல் அறிவ+ட்டுவதும் அவசியமானது. நாம் படித்த இளம்பெண்களை நமது கட்சி நோக்கி பாரியளவில் அணிதிரட்டி வருகின்றோம். எமது கட்சி உறுப்புரிமைகளை பெற்றுக்கொள்வதிலும் எமது அரசியல் பாசறைகளில் பங்கு கொள்வதிலும் ஆண்களுக்கு சம அளவில் சில வேளைகளில் அதிகமாகவும் பெண்களே காணப்படுகின்றனர். இந்த விடயங்களில் எமது கட்சியானது கூடிய கவனம் செலுத்துகின்றது. அரசியல் தலைமைத்துவம் நோக்கி கூடியளவு பெண்களை வளர்த்தெடுக்க நாம் முயன்று வருகின்றோம்.
0 commentaires :
Post a Comment