இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு வருகைதந்திருக்கும் இந்திய வெளிஉறவுச் செயலர் திருமதி நிருபமராவ் அவர்களுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களுக்குமிடையிலான உயர்மட்டச் சந்திப்பொன்று இன்று(08.03.2010.) கொழும்பு தாச் சமுத்திரா கோட்டலில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின்போது நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு தொடர்பாகவும், அதிகாரமிக்க மாகாண சபையினை அமைப்பதற்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது முன்னெடுக்கின்ற அரசியல் நகர்வுகள் குறித்தும், அதற்காக வேண்டி இந்தியா தனது தார்மீக ஆதரவை வழங்க வேண்டும் எனவும் சந்திரகாந்தன் விளக்கிக் கூறினார். அத்துடன் 1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பபநதத்தின் ஊடாக மாகாணசபை முறைமை ஏற்படுத்தப்பட்ட போது அதனை நடைமுறைப் படுத்தும்படி அன்றைய தமிழ் தலைவர்களை இந்தியா வலியுறுத்தியது. ஆனால் அதனை ஏற்பதற்கு அன்று யாரும் முன்வரவில்லை.. ஆனால் இன்றைய காலத்தில் தமிழ் மக்களுக்கு இருக்கின்ற அடிப்படை உரிமையான மாகாண சபை முறைமையை காப்பாற்றி அதனை அதிகாரமிக்கதாக மாற்றுவதற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி முன்வந்திருக்கின்றது. ஆனால் அதனை ஊக்குவிப்பதற்கு எந்த அரசியல் தலைமைகளும் பக்கபலமாக இல்லை என்பதனை மிகவும் தெளிவாக சந்திரகாந்தன் எடுத்து விளக்கினார்.
நிலைமையினை ஆழமாக கேட்டறிந்த இந்திய வெளி உறவுச் செயலர் திருமதி நிருபமராவ் அவர்கள், இந்தியா தொடர்ந்தும் கிழக்கு மாகாண சபைக்கு ஆதரவு வழங்கும் என்பதுடன், கிழக்கு மாகாண சபையைப் பலப்படுத்த அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளும் என உறுதி கூறினார். அத்துடன் முதலமைச்சரின் விசேட கோரிக்கையான சம்பூர் பிரச்சினை, கணவனையிழந்த பெண்களுக்கான வாழ்வாதார மேம்பாடு, கிழக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தி போன்றவற்றில் விசேட கவனம் செலுத்தி அவற்றிற்கு உதவி வழங்குவதாகவும் தெரிவித்தார். இவ் உயர்மட்டச் சந்திப்பில் இந்திய உயர் ஸ்த்தானிகர் அகோக் கே காந்தா, முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஊடகப் போச்சாளருமான ஆஸாத் மௌலானா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
0 commentaires :
Post a Comment