3/04/2010

ஊடகவியலாளர் பி. முத்தையா காலமானார்

மலையகத்தின் வட்டவளையில் 1948ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் திகதி பிறந்த முத்தையா, ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் பழைய மாணவராவார்.





லேக் ஹவுஸ், டெயிலி நியூஸ் பத்திரிகையின் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தவரும் நாற்பது ஆண்டுகாலம் ஊடகத்துறை அனுபவத்தைக்கொண்ட வருமான பி. முத்தையா நேற்று (03) காலமானார்.
நேற்ற முன்தினம் இரவு திடீர் சுகவீனமுற்ற அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த நிலையில் நேற்று அதிகாலை உயிரிழந்தார். இறக்கும்போது அவருக்கு வயது 62.
பத்திரிகை, வானொலி, தொலைக் காட்சி, மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் 42 ஆண்டுகளாகப் பணிபுரிந்த அவர், 1967ஆம் ஆண்டு “செய்தி” பத்திரிகை வாயிலாக ஊடகத்துறை வாழ்வை ஆரம்பித்தார். 1975ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள சோவியத் யூனியன் தூதரகத்தின் தகவல் பிரிவில் மொழி பெயர்ப்பாளராகச் சேர் ந்து பதினான்கு ஆண் டுகள் பணியாற்றினார்.
பின் னர் ரூபவா ஹினியின் (ஏசியா விஷன்) பிரிவில் ஆங்கிலப் பிரதி எழுதுநராகப் பணியாற்றியதுடன் செய்திப் பிரிவிலும் கடமையாற்றினார். 1989ஆம் ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் உதவி ஆசிரியராகச் சேர்ந்து பின்னர் செய்தி ஆசிரியரானார். செய்தித்துறையின் உதவிப் பணிப்பாள ராகவும் வானொலி மஞ்சரி ஆசிரியராகவும் கூட்டுத்தாபனப் பணிப்பாளர் நாயகத்தின் பிரத்தியேகச் செயலாளராகவும் ஒரே சமயத்தில் பணியாற்றினார்.
தினகரன், வீரகேசரி பத்திரிகைகளில் 1967ஆம் ஆண்டு முதல் எழுதிவந்த முத்தையா, வெளிநாட்டுச் செய்தி விமர்சனக் கட்டுரைகளையும் மரணிக்கும் வரை எழுதிவந்தார். ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலிருந்து ஓய்வு பெற்றபின்னர் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் சண்டே ஒப்சேவர் ஆங்கில வார இதழின் பிரதி செய்தி ஆசிரியராகப் பணியாற்றியதுடன் இறக்கும்வரை டெயிலி நியூஸ் பத்திரிகையின் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.
சர்வதேச ரீதியில் நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டிகளில் ஆங்கில மொழியில் எழுதி முதற்பரிசைப் பெற்றிருக்கிறார். இவரின் வானொலி பங்களிப்புக்காக அகில இலங்கை சபரிமலை ஸ்ரீ சாஸ்தாபீடம் கலைமணி விருது வழங்கி கெளரவித்தது. தவிரவும், மத்திய, ஊவா சாகித்திய விழாக்களில் பாராட்டப்பட்ட முத்தையா, கடந்த வருடம் நடந்த மேல் மாகாண தமிழ் சாகித்திய விழாவில் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
அமரர் முத்தையாவின் பூதவுடல் பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 3.30 இற்கு இறுதிக் கிரியைகள் நடைபெற்று பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். (ரு-து)




 

0 commentaires :

Post a Comment