3/16/2010

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி: திருமலை பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட 4 பொலிஸார் இடைநிறுத்தம்

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக திருமலை பொலிஸ் தலைமையகப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்று முதல் தமது சேவையிலிருந்து இடை நிறுத்தம் செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த நபர் ஒருவரை கைது செய்வதற்காக பொலிஸ் குழுவொன்று அவரது வீட்டுக்கு சென்றிருந்த வேளை குறித்த நபர் வீட்டுக்குள்ளிருந்த வண்ணம் பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இதனால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
தொடர்ந்தும் அந்நபர் பொலிஸார் மீது துப்பாக்கிச் சூட்டை நடாத்த முயன்றதையடுத்தே பொலிஸார் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக நடத்திய பதில் சூட்டில் குறித்த நபர் உயிரிழந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
இதேவேளை நேற்று மாலை பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரிய, திருமலையில் இடம்பெற்ற மேற்படி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக ஆராய விசேட பொலிஸ் குழுவொன்று அங்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
பொலிஸ் மாஅதிபரின் பணிப்புரைக்கமைய கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் திருமலையில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விசாரணை முடிவுகளுக்கமைய பக்கச்சார்பற்ற முறையில் தான் ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுப்பேனென்றும் இதன் போது பொலிஸ் மாஅதிபர் குறிப்பிட்டார். விசாரணையின் வசதி கருதியே சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் மேற்படி நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களும் தமது சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
 

0 commentaires :

Post a Comment