எதிர்வரும் பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போட்டியிடுவது ஜனநாயக நடைமுறையின் மீது மக்கள் வைத்துள்ள ஆர்வத்தை காட்டுவதாக உள்ளது. சமாதானம் மீண்டும் உருவாக்கப்பட்டதையடுத்தே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. தான் சென்ற இடங்களில் எல்லாம் மிகுந்த நம்பிக்கையு டனும் எதிர்பார்ப்புடனும் கூடிய நிலையை காண முடிந்தது என்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமாராவ் கூறியுள்ளார். இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமாராவ் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து உரையாடினார். அச்சமயமே அவர் மேற்கண்டவாறு கூறினார். ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது அவர் மேலும் கூறியதாவது, இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்தும் விடயத்தில் இலங்கை குறிப்பிடத்தக்க வெற்றியை கண்டுள்ளது. 70 ஆயிரத்துக்கு குறைவான இடம்பெயர்ந்தவ ர்களே தற்போது நிவாரணக் கிராமங்களில் உள்ள நிலையில் இந்த விடயம் சர்வதேச சமூகத்தின் அவதானத்திலிருந்து விடுபட்டுள்ளதாக குறிப்பிட்ட இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்தும் விடயத்தில் இந்தியா தொடர்ந்து உதவுவதற்கு ஆர்வமாக இருப்பதாகவும் கூறினார். அத்துடன் வடக்குக்கான ரயில் பாதையை மீண்டும் முற்றாக மீளமைக்க இந்தியா உதவ விரும்புவதாகவும் அவர் மேலும் கூறினார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் அமோக வெற்றி யீட்டியதையிட்டு வாழ்ந்து தெரிவித்த நிருபமாராவ், தான் இந்திய தூதுவராக இங்கிருந்து திரும்பிச் சென்ற பின்னர் இலங்கைக்கு நன்மை பயக்கும் பல விடயங்கள் இங்கு நடந்துள்ளதாக குறிப்பிட்டார். ஜனாதிபதியின் தேர்தல் வெற்றியானது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் நம்பிக்கையை தோற்றுவித்துள்ளதாகவும் ஜனாதிபதி ராஜபக்ஷவின் துரித இந்திய விஜயத்தை இந்திய பிரதமர் எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டார். எதிர்வரும் பொதுத் தேர்தல் பற்றி இந்திய வெளியுறவு செயலாளரிடம் கருத்து வெளியிட்ட இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொதுத் தேர்லில் வாக்களிக்க மக்கள் பெரும் ஆர்வத்துடன் இருப்பதாக குறிப்பிட்டார். சமாதானம் ஏற்படுத்தப்பட்ட பின்னர் இடம்பெறும் முதலாவது நாடளாவிய தேர்தல் இதுவென்று கூறிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இத்தேர்தலில் பல புதியவர்கள் குறிப்பாக வடக்கு கிழக்கில் தெரிவு செய்யப்படுவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர்களுடன் செயலாற்றுவதற்கு தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டார். அண்மையில் கச்ச தீவில் நடைபெற்ற புனித அந்தோனியார் உற்சவத்தில் பெருமளவு இந்தியர்கள் கலந்துகொண்டமை இலங்கை- இந்திய மக்களுக்கிடையே நல்லெண்ணம் நிலவுவதை மேலும் சுட்டிக்காட்டுவதாக உள்ளதாகவும் நிருபமாராவ் குறிப்பிட்டார். இரு நாடுகளினதும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், திருகோணமலையில் அமைக்கப்படவுள்ள அனல் மின் நிலையம் மற்றும் சூழல் பாதுகாப்பு தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையிலும் புரிந்துணர்வுக்கான தேவை ஆகிய இரு தரப்புக்கும் அக்கறையான விடயங்கள் பற்றி இச்சந்திப்பின்போது பேசப்பட்டன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்திய வெளியுறவு செயலாளருக்கு ஜனாதிபதி மாளிகையில் பகல் போசன விருந்தளித்தார். இந்திய வெளியுறவு செயலாளருடன் இந்திய தூதுவர் அசோக் கே. காந்தாவும் விருந்தில் கலந்துகொண்டார். |
3/08/2010
வடக்கு கிழக்கில் மட்டும் 1000பேர் போட்டி ; மக்களின் ஜனநாயக ஆர்வத்தைக் காட்டுகிறது
ஜனாதிபதியைச் சந்தித்த இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் கருத்து
0 commentaires :
Post a Comment