* மு.கா.இன்று முடிவு * ரி.எம்.வி.பி வடக்கு, கிழக்கில் தனித்துப் போட்டி பொதுத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியல்கள் இன்று (22) முதல் கட்சி முதன்மை வேட்பாளர்களி னால் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளதாக ஐ. ம. சு. முன்னணி பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். கம்பஹா மாவட்ட வேட்பாளர் பட்டியல் ஐ.ம.சு முன்னணி கம்பஹா மாவட்டக் குழுத் தலைவர் பசில் ராஜபக்ஷ தலைமையில் இன்று கம்பஹா மாவட்ட செயலகத்தில் கையளிக்கப்பட உள்ளது. ஏனைய மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் தினங்களில் குழுத் தலைவர்களினால் கையளிக்கப்படும் எனவும் அவர் கூறினார். கம்பஹா மாவட்ட வேட்பு மனுத்தாக்கலைத் தொடர்ந்து ஐ.ம.சு. முன்னணியின் முதலாவது கூட்டம் அமைச்சர் மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் கம்பஹா நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளது. ஐ. ம.சு. முன்னணி ஏற்கெனவே 17 மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்களை பூர்த்தி செய்துள்ளதோடு வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான பட்டியல்கள் பூர்த்தி செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அமைச்சர் அமீர் அலி தலைமையிலான குழு போட்டியிடவுள்ளதோடு ஐ.ம.சு. முன்னணி மட்டு. மாவட்ட வேட்பாளர்கள் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் வேட்பாளர் பட்டியலில் கையொப்பமிட்டனர். இப்பெயர்ப் பட்டியலில் முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வி த. தங்கேஸ்வரி, முன்னாள் பிரதி அமைச்சர் கணேசமூர்த்தி, கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ், முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. அலி ஸாஹிர் மெளலானா, ரமேஷ் கலைச்செல்வன், பலனித்தம்பி குனசேகரம், கே. சத்தியவரதன் ஆகியோர் இடம்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் அமீர்அலி தெரிவித்தார். இதேவேளை வன்னி மாவட்டத்திற்கு தனது தலைமையிலான குழு போட்டியிடவுள்ளதாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். வன்னி மாவட்ட ஐ.ம.சு. முன்னணி பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக திருகோணமலை மாவட்டத்தில் அமைச்சர் நஜீப் ஏ. மஜீத், முன்னாள் எம்.பி. திடீர் தெளபீக் ஆகியோரும், மட்டு. மாவட்டத்தில் அமைச்சர் அமீர்அலி மற்றும் மாகாண அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோரும் போட்டியிடவுள்ளதாக அவர் கூறினார். இதேநேரம் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. சிவநாதன் கிஷோரும் வன்னி மாவட்ட ஐ.ம.சு. முன்னணியில் போட்டியிட உள்ளதாக அறிய வருகிறது. அ.இ.மு.கா 6 மாவட்டங்களில் போட்டியிட உள்ளது. அம்பாறை மாவட்டத்தில் அமைச்சர்களான பேரியல் அஷ்ரப், பி.தயாரத்ன முன்னாள் எம்.பி. ஏ. எம். எம். நெளசாத் முன்னாள் சிவில் பாதுகாப்புப் பணிப்பாளர் சரத் வீரசேகர ஆகியோர் போட்டியிடவுள்ளதோடு அமைச்சர் அதாவுல்லாஹ் தலைமையிலான தேசிய காங்கிரஸ் சார்பாக எத்தனை பேர் போட்டியிடுவது என்பது குறித்து ஆராயப்படுவதாக கட்சி வட்டாரங்கள் கூறின. திருகோணமலை மற்றும் யாழ். மாவட்டங்களுக்கான வேட்பாளர் பட்டியல்களும் துரிதமாக தயாரிக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்படுகிறது. இதேவேளை பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கு இன்னும் நான்கு தினங்களேயுள்ள நிலையில், ஐ.தே.க, ஜே. வி.பி. தமிழ் தேசிய கூட்டமைப்பு அடங்கலான கட்சிகள் இன்னமும் தமது வேட்பாளர்களை தெரிவு செய்வதில் இழுபறியில் உள்ளன. எதிர்க்கட்சிகளே இந்தக் குழப்பகரமான நிலையை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரியவருகிறது. இருப்பினும் சில கட்சிகள் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் தமது வேட்பாளர்கள் தொடர்பான இறுதித் தீர்மானத்தை நேற்று வெளியிட்டிருந்தன. ரி.எம்.வி.பி. தனித்துப் போட்டி வடக்கிலும் தனித்து போட்டியிட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் நேற்று தீர்மானம் எடுத்திருப்பதாக கட்சியின் பேச்சாளர் ஆஸாத் மெளலான தினகரனுக்குத் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் ஏற்கனவே தனித்துப் போட்டியிடுவதென கட்சி தீர்மானம் எடுத்திருந்தது. அம்பாறை உட்பட கிழக்கில் மூன்று மாவட்டங்களிலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தனித்துப் போட்டியிடுகின்றன. இதற்கான வேட்பு மனு நாளை சமர்ப்பிக்கப்படவி ருப்பதாகவும் கட்சிப் பேச்சாளர் ஆஸாத் மெளலானா கூறினார். மு.கா. இன்று முடிவு இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடம் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான அனைத்து தீர்மானத்தையும் எடுக்கும் பொறுப்பை கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் ஒப்படைத்திருப்பதாக கட்சியின் முக்கிய பிரமுகரொருவர் நேற்றுக் கூறினார். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைத்து போட்டியிடுவதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா மற்றும் எந்தெந்த மாவட்டங்களில் போட்டியிடுவது என்பது குறித்து இன்றைக்குள் இறுதித் தீர்மானத்தை வெளியிடுவாரென்றும் அவர் தெரிவித்தார். அத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் நாடுபூராவும் மரச் சின்னத்தில் தனித்து போட்டியிடுமாக விருந்தால் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் கிழக்கு மாகாணத்தின் ஒரு மாவட்டத்திலும் போட்டியிடுவாரெனவும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதாகவிருந்தால் ஹக்கீம் கண்டி மாவட்டத்தில் போட்டியிடுவ தற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறின. மேலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட வேண்டியிருப்பின் அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தனது முஸ்லிம் உறுப்பினர்களையும் வேட்பாளர்களாக நிறுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டால் ஐ.தே. க. வின் தற்போதுள்ள அமைப்பாளர்களை மாத்திரமே முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளுமெனவும் கட்சியின் முக்கிய பிரமுகரொருவர் குறிப்பிட்டார். |
2/22/2010
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment