2/18/2010

பாராளுமன்றத் தேர்தலை எமது தலைமைகள் எப்படி எதிர்கொள்ளவேண்டும்?

உயர் கல்வி மாணவர் ஒன்றியம்  விடுத்துள்ள வேண்டுகோள்.

மிக விரைவில் இடம்பெறப்போகின்ற பாராளுமன்றத் தேர்தலானது எமது மக்களின் வாழ்வில் மிக முக்கியமானதொன்றாகும். 1977 ஆம் ஆண்டுத் தேர்தலுக்குப் பின்னர் வன்முறைகளற்ற ஒரு சூழலில் இடம்பெறப்போகின்ற முதலாவது பாராளுமன்றத் தேர்தல் இதுவாகும். எமது மக்கள் சுதந்திரமாகச் சிந்திப்பதற்கும், செயற்படுவதற்கும் உகந்த ஒரு அரசியல் சூழல் மிக நீண்டகாலத்திற்குப் பின்னர் வாய்த்துள்ளது.
    கடந்த காலங்களில் பல்கலைக்கழக மாணவர்களோ, கல்விமான்களோ, சமூகப் பெரியவர்களோ யாருமே தமது அரசியல் விருப்பு வெறுப்புகளை பகிரங்கமாகத் தெரிவிக்கும் வாய்ப்புகள் இருக்கவில்லை. ஆனால் தற்பொழுது அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. எனவே எமது மாகாணமக்களின் நலனில் அக்கறைகொண்டவர்கள் எனும் வகையில் எமது அரசியல் தலைவர்களுக்கு எமது விருப்புகளைத் தெரிவிக்கும் உரிமை உண்டெனக் கருதுகின்றோம். எமக்கான அரசியல் வழிகாட்டிகள் எப்படி செயற்படவேண்டும் என்பதை தெரிவிக்க வேண்டிய தருணம் இதுவெனக் எண்ணுகின்றோம். எமது மக்களின் நிம்மதியான வாழ்வும் அரசியல் பலமும் ஒருமித்து கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதே உயர்கல்வி மாணவர் ஒன்றியத்தினராகிய எமது விருப்பமாகும். அதற்கொப்ப எதிர்வரும் தேர்தலை எமது எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை பற்றி எமது கருத்துக்களைத் தெரிவிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.
    கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் எமது தலைமைகள் விட்ட தவறை நாம் மீண்டும் விடக்கூடாது என்பதே எமது விரும்பமாகும்.  ஒரு பலமான சக்தியாக தனித்து நின்று எமது மாகாணசபையை ஆளும் வாய்ப்பை நாம் தவறவிட்டுள்ளோம். தேசியக் கட்சிகளில் இணைந்திருந்து போட்டியிட்ட காரணத்தால் கிழக்கு மாகாணசபையை அதிகாரம் மிக்கதொன்றாகக் கட்டியெழுப்பும் வாய்ப்பின்றி எமது தலைமைகள் நிற்பதை நாம் காணுகின்றோம். எனவே இன்று எதிர்கொள்ளுகின்ற பாராளுமன்றத் தேர்தலை நாம் கவனமாகக் கையாளவேண்டியுள்ளது. பாராளுமன்றத்திலாவது தனித்த பலத்துடன் எமது மக்களுக்கான பேரம் பேசும் சக்தியாக எமது தலைமைகள் தலைநிமிரவேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.
    கிழக்கு மாகாணத்தின் குரலை பாராளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்க கிழக்கு வாழ் தமிழ் மக்களின் அரசியல் முகவரியான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் தயாராக வேண்டும். எனவே எந்தவித நெருக்கடிகள் வந்தாலும் அனைத்துக்கும் முகம்கொடுத்து தனித்துப் போட்டியிடுமாறு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளை வேண்டிக்கொள்கிறோம்.
    தனித்துநின்று போட்டியிடும் பட்சத்தில் எமது ப+ரண ஆதரவினை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு வழங்க உயர்கல்வி மாணவர் ஒன்றியத்தினராகிய நாம் தயாராக உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்ளவிரும்புகின்றோம்.
  
உயர்கல்வி மாணவர் ஒன்றியம்
மட்டக்களப்பு

0 commentaires :

Post a Comment