வேட்பாளர் நியமனப்பத்திரங்களைத் தயாரிக்கும் பரபரப்புக்கு மத்தியிலும், தேர்தலில் போட்டியிடும் சின்னத்தைத் தெரிவு செய்வதில் சிறு அரசியல் கட்சிகள் இன்னமும் முடிவெடுக்க முடியாத நிலையில் இறுதி நேர பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளன.
பெரிய அரசியல் கட்சிகள் வேட்பாளர் நியமனப் பத்திரங்களைத் தயாரிக்கும் இறுதிக்கட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. அதேநேரம் சிறிய கட்சிகளுக்கு ஆசனங்களை ஒதுக்கிக் கொடுப்பதில் முனைப்புக் காட்டியுள்ளன.
இந்த நிலையில் பெரிய கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்திருக்கும் சில அரசியல் கட்சிகள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா அல்லது இணைந்தே போட்டியிடுவதா என்பதில் இன்னமும் தெளிவான முடிவை எடுக்க முடியாத நிலையில் உள்ளன.
யாழ்ப்பாணத்தில் தனித்துப் போட்டியிடுவதெனவும் அதேநேரம் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் நட்புறவுடன் செயற்படுவதெனவும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) தீர்மானித்திருக்கிறது. எனினும், அரச தரப்புடன் நேற்றைய தினமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் கட்சியின் பேச்சாளரொருவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.
அரசாங்க ஆதரவு கட்சியாகத் தேர்தலில் களமிறங்குவதுடன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து போட்டியிடுவதனை விடவும், தனித்து வீணைச் சின்னத்தில் போட்டியிடுவது சாதகமானது என ஈ.பி.டி.பி. நம்புகிறது.
இதேபோன்று ஆளுந்தரப்பில் உள்ள மலையக மக்கள் முன்னணி நுவரெலியா, பதுளை மாவட்டங்களில் தனித்து கட்சியின் மண்வெட்டிச் சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன. அமரர் பெ. சந்திரசேகரனின் பாரியார் சாந்தினி சந்திரசேகரனின் தலைமையில் நுவரெலியா மாவட்டத்திலும், மாகாண சபை உறுப்பினர் எஸ். அரவிந்த்குமார் தலைமையில் பதுளை மாவட்டத்திலும் மலையக மக்கள் முன்னணி களமிறங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இறுதிக் கட்டத்திலும் அரச தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேற்றும் கூடி ஆராய்ந்துள்ளது. இம்முறை கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் பலருக்குப் போட்டியிட வாய்ப்பளிக்காதிருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக எம்.கே. சிவாஜிலிங்கம், என்.ஸ்ரீகாந்தா ஆகியோருக்கு வாய்ப்பளிக்கக் கூடாதெனக் கூட்டமைப்பின் பெரும்பாலானோர் கூறியுள்ளனர்.
இந்நிலையில், சிவாஜிலிங்கமும், ஸ்ரீகாந்தாவும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தலைமையிலான புதிய இடதுசாரி விடுதலை முன்னணி கட்சியில் போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
0 commentaires :
Post a Comment