2/28/2010

முஸ்லிம் காங்கிரசுக்குள் பாரிய குழப்பம்: அதிருப்தியாளர்கள் அரசில் இணைய முடிவு

மு. காவுக்குள் தோன்றியுள்ள பாரிய உட்பூசல் அதனால் ஏற்பட்டுள்ள அதிருப்தி நிலை மீண்டுமொரு பாரிய பிளவை ஏற்படுத்தியுள்ளது.
மு. கா. சார்பான கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் பொதுத் தேர்தலில் ஐ. ம. சு. முன்னணியை ஆதரிக்க எடுத்துள்ள முடிவையடுத்தே இப்பிளவு ஏற்பட்டுள்ளது.
மேற்படி கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் இருவரும் கல்முனை மற்றும் பொத்துவில் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
மு. கா. தலைமையின் எதேச்சதிகார போக்கை கண்டிக்கும் வகையிலும், ஜனாதிபதி மற்றும் ஐ. ம. சு. மு. அரசின் அபிவிருத்தி பணிகளை மேலும் துரிதமாக முன்னெடுக்க கைகோர்க்கவுமே இவ்வாறான முடிவை மேற்படி மாகாண சபை உறுப்பினர்கள் எடுத்துள்ளதாக தெரியவருகிறது.
மு. கா. மரச் சின்னத்தில் தனித்துப் போட்டியிடுவதையே இவர்கள் விரும்பியுள்ளனர். ஆனால் மு. கா. தலைமை, தான்தோன்றித்தனமாக ஐ. தே. க.வுக்கு கட்சியை அடிமையாக்கிவிட்டது. இதன் மூலம் மு. கா. முழு ஆதரவாளர்களையும் பகிரங்கமாகவே ஏமாற்றியுள்ளது.
மு. கா. வை விட்டு விலகி அரசாங்கத்துடன் இணைவது குறித்து பேச்சு நடத்தியுள்ளதாகவும் இரண்டு பிரதான கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளதாகவும் தெரியவருகின்றது. அதன்படி இவர்களில் ஒருவருக்கு தேசியப் பட்டியல் மூலமான எம்.பி பதவி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதோடு கிழக்கு மாகாண சபையில் தற்போது ஏற்பட்டுள்ள அமைச்சு வெற்றிடம் குறித்தும் கலந்துரையாடியுள்ளதாகவும் நம்பகரமாக தெரியவருகின்றது.
இதேவேளை தேசியப் பட்டியல் விடயத்திலும் மு. கா. தலைமை அநியாயம் இழைத்துள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.
இவ்வாறான சூழ்நிலையில் மு. கா. மற்றுமொரு பாரிய பிளவுக்கு முகம் கொடுத்துள்ளது.

கிழக்கு சுகாதார அமைச்சு சுபைருக்கு?

இதேவேளை, கிழக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள சுகாதார அமைச்சு வெற்றிடத்துக்கு அ. இ. மு. கா. சார்பான கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம். எஸ். சுபைரை நியமிப்பது குறித்து அ. இ. மு. கா அரசுடன் பேச்சு நடத்தி வருவதாக கட்சிப் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
கிழக்கு சுகாதார அமைச்சராகவிருந்த எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் பொதுத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு சுகாதார அமைச்சுப் பதவியை நேற்று முன்தினம் இராஜினாமாச் செய்திருந்தார். எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்வும் அ. இ. மு. கா. சார்பானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அ. இ. மு. கா. சார்பாக கிழக்கு மாகாண சபைக்கு தெரிவான ஏறாவூரைச் சேர்ந்த எம். எஸ். சுபைர் அரசியல் அனுபவமிக்கவர். அமைச்சு பதவி வகிக்க தகுதிபெற்றவர். அ. இ. மு. கா.வின் சொத்து இவ்வமைச்சு, அதனை விரைவில் சுபைருக்கு பெற்றுக்கொடுக்க கட்சி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அப்பிரமுகர் குறிப்பிட்டார்.

மஹ்ரூப் அரசில் இணைவு

இது இவ்வாறிருக்க கிழக்கு மாகாண சபையின் ஐ. தே. க. உறுப்பினரான முஹம்மட் மஹ்ரூப் (கிண்ணியா) ஐ. தே. க.விலிருந்து விலகி அரசுடன் இணைந்து கொண்டுள்ளதாக நம்பகரமாக தெரியவருகின்றது.
கிண்ணியாவில் ஐ. தே. க., மு. கா. தலைவர்களின் கொடும்பாவிகளை இவரின் ஆதரவாளர்கள் எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment