இலங்கையின் வடக்கே வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய வன்னித் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல் கட்சியொன்று இன்று வவுனியா செயலகத்தில் முதலாவது வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருக்கின்றது.
ஓக்கம வசியோ, ஒக்கம ரஜவரு என்ற புதிய கட்சியே இவ்வாறு வேட்பு மனு தாக்கல் செய்திருக்கின்றது. இந்தக் கட்சியில் சிவபெருமாள் கேதீஸ்வரன் என்பவருடைய தலைமையில் 9 வேட்பாளர்களின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டிருக்கின்றன.
வன்னி தேர்தல் மாவட்டத்திற்கு 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவிருக்கின்றார்கள். இலங்கையின் விகிதாசார தேர்தல் நடைமுறையின்படி 9 வேட்பாளர்களின் பெயர்கள் பட்டியலில் இருக்க வேண்டும் என்பது நியதியாகும்.
இதுவரையில் 3 முஸ்லிம் குழுக்கள் உட்பட 5 சுயேச்சை குழுக்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்காகக் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக வவுனியா தேர்தல் திணைக்களம் தெரிவித்திருக்கின்றது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.இராஜகுகனேஸ்வரன் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேச வர்த்தக, கைத்தொழில், வேளாண் அமைப்பின் அமைப்பாளர் ஜி.வி.சகாதேவன் ஆகியோர் தலைமையிலான இரண்டு சுயேச்சை குழுக்களும் இவற்றில் அடங்கும்.
வரும் வெள்ளிக்கிழமை வரையில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டிருக்கின்றது. எனவே அடுத்தடுத்த தினங்களில் நாட்டின் முக்கிய தேசிய கட்சிகளும் தமிழ் அரசியல் கட்சிகளும் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வன்னி மாவட்டத்தில் 2 லட்சத்து, 66 ஆயிரத்து 975 வாக்காளர்கள் இந்தப் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment