2/15/2010

அனைவரும் பொதுத் தேர்தலுக்கு முன் மீள்குடியேற்றம்

2500 பேர் இவ்வாரத்தினுள் சொந்த இடம் அனுப்பிவைப்பு


பொதுத் தேர்தலுக்கு முன்பதாக வவுனியா நிவாரணக் கிராமங்களிலுள்ள அனைவரையும் மீளக்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் நேற்று தெரிவித்தார்.
மீளக்குடியமர்த்தப்படுவதற்காக வவுனியா நிவாரணக்கிராமங்களில் தற்போது சுமார் 70 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே இருக்கின்றனர். இவர்களை கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா வடக்கில் மீளக்குடியமர்த்துவதற்கான பணிகளை அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர்களுடன் இணைந்து துரிதகெதியில் முன்னெடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை இவ்வாரத்தினுள் மாத்திரம் 2500 பேர் மீளக் குடியமர்த்தப்பட விருப்பதாகவும் அரச அதிபர் கூறினார்.
மூன்று தினங்களுக்கு ஒரு முறை என்ற வகையில் நிவாரணக் கிராமங்களிலுள்ளவர்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் மெனிக் பாம் நிவாரணக் கிராமத்தில் தங்கியிருக்கும் 350 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரம் பேர் எதிர்வரும் 18 ஆம் திகதி நெடுங்கேணி பிரதேசத்தில் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர்.
அதேவேளை 700 பேர் பச்சிளைப்பள்ளி, பளை நகரம், தில்லிவளை கிழக்கு மற்றும் மேற்கு, முள்ளியடி ஆகிய பகுதிகளிலும் மேலும் 230 குடும்பங்களைச் சேர்ந்த 800 பேர் குமரபுரம் மற்றும் உமங்களபுரம் ஆகிய பகுதிகளிலும் இவ் வாரத்துக்குள் மீள்குடியேற்றம் செய்யப்பட விருப்பதாகவும் அரச அதிபர் சுட்டிக்காட்டி னார்.
வவுனியாவில் நிவாரணக்கிராமங்களி லிருந்து வெளியேறி உறவினர்களுடன் தங்கியிருக்கும் 2,216 பேர் கடந்த சனிக்கிழமை பெரிய பரந்தன், திருநகர் வடக்கு மற்றும் மேற்கு, கரச்சி ஆகிய பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.
வன்னியில் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகளின் இறுதிக் கட்டத்தின்போது அங்கிருந்து இடம்பெயர்ந்த 2 இலட்சத்து 35 ஆயிரம் பேர் வவுனியா நிவாரணக் கிராமங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இவ்வருடம் ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னதாக நிவாரணக் கிராமங்களிலுள்ள அனைவரையும் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு பணிப்புரை விடுத்திருத்தார்.
மீள்குடியேற்ற நடவடிக்கை கள் துரிதப்படு த்தப்பட்டமைக்கு அமைய சுமார் ஒரு இலட்சத்து 75 ஆயிரம் பேர் ஏற்கனவே வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் அவர்க ளது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப் பட்டனர்.
அதனைத் தொடர்ந்து வடக்கில் மோதல் இடம்பெற்ற பகுதிகளில் கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் தாமத மடைந்ததைத் தொடர்ந்து மீள்குடியேற்றம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. இம்மாதம் 02 ஆம் திகதி முதல் மீள்குடியேற்றப் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 

0 commentaires :

Post a Comment