சித்தன்__
”முட்டாள் ‘பயவ’யெல்லாம் தாண்டவக்கோனே”
வைகுந்தவாசன், அமிர்தலிங்கம், பிரபாகரன் இப்படி பலர் ஏறி சறிக்கி விழுந்த குதிரையிலே இப்போது புலம் பெயர் சக்கடத்தார்கள் சிலர் சாவாரி செய்ய முற்பட்டுள்ளார்கள்.
தமிழர்கள் தமக்கென சொந்த நிலபுலன்களை கொண்டவர்களாகவும் இலங்கையில் காகம் பூராத சந்து பொந்தெல்லாம் பூந்தும் நிமிர்ந்தவர்கள். அதிகாரிகளாகவும் , முதலாளிகளாகவும் வீற்றிருந்து விண்ணானம் பேசி கல்வியும், செல்வமும் தழைத்தோங்க உலகத்தின் முதல் இனம் தாங்கள் தான் என்ற இறுமாப்போடும் பவனிவந்த காலம்!
இவர்கள்தான் தமிழ் மக்களின் ஒரு பகுதியினரை சாதி இழிவு சொல்லி பாடசாலை, தேநீர்க்கடை ஆலயம் என இன்னும்..பல்வேறு சமூக உரிமைகளை மறுத்தும், தடுத்தும் வருவதோடு அதையே ஒரு பெருமையாக தோழை நிமிர்த்திய காலம்!
பெரும்பான்மையாக சிங்கள மக்கள் இருந்தாலும் ‘மாத்தையா’ என அழைக்க வைத்து பெருமைப்பட்டுக் கொண்ட காலம்!
மலையக மக்களை தோட்டக்காட்டான், கள்ளத்தோணி என அழகு நாமம் சூட்டி சம்பளம் அற்ற அடிமைகளாக தங்கள் வீடுகளில் வேலைக்கு அமர்த்திய காலம்!
முஸ்லிம்களை தொப்பி புரட்டி, மாடுவெட்டி எனப் பழித்து அவர்கள் மனிதில் சேறு பூசிய காலம்!
இவ்வாறாக திமிரும், கொழுப்பும், தடிப்பும் உள்ளங்காலில் இருந்து உச்சிவரை ஏறி தலை கீழ் தெரியாமல் ஆட்டம் போட்ட காலத்தில் தான் சிங்கள மக்கள் விழித்துக் கொண்டார்கள். இதன் பிறகுதான் ஆண்ட பரம்பரை கோசங்களோடு வட்டுக்கோட்டைத் தீர்மானங்களும் தமிழ் ஈழமும் அடங்காத தாகமாகி பேய் பிடித்து ஆட்டியது்
பொங்கலுக்கு தமிழ் ஈழம் கிடைக்கும்! மறுகணமே ஒட்டுமொத்த சிங்கள மக்களையும் காலிக் கடலுக்குள் தள்ளிவிட்டு தனிக்காட்டு ராஜா ஆகிவிடலாம் என்ற கனவோடு ஆரம்பித்ததுதான் இதுவரை நடந்து முடிந்த, நடந்துகொண்டிருக்கின்ற தமிழ் தேசியமும் அதன் மிச்ச சொச்சங்களும்.
தமிழா..!
உண்மையிலே உனக்கு இனமானம், மொழி மானம் இருக்குமானால் நீ சிங்கள அரசால் ஒடுக்கப்பட்டிருந்தால் உங்கள் இலட்சியத்திற்காக இறுதிவரை உறுதியுடன் போராடியிருக்க வேண்டும். ஆனால் நீ இலட்சியங்களை விட ‘இலட்சத்தின்’ மேல்தாதன் அதிக ஆர்வம் வைத்திருக்கின்றாய்.
வெடிச்சத்தத்திற்கே முகம் கொடுக்க முடியாத நீ யுத்தத்திற்கு எப்படி முகம் கொடுப்பாய் அதனால் தான் ஊரும் வேண்டாம், உறவும் வேண்டாம் ஆளை விட்டால் காணும் சாமியோ என ஓடினாய்.
ஏழைக் குழந்தைகளும், ‘எழிய’ குழந்தைகளும் ஏந்தட்டும் ஆயுதம் உன் பிள்ளை மட்டும் உயிர்வாழ்ந்தால் போதும் எனனும் உயரிய பொது நோக்கு உனக்கு மட்டும்தானே உண்டு!
ஓடினாய்….ஓடினாய்…சும்மாவா ஓடினாய் உன் சாதியையும் உன் பிற்போக்கு குணத்தையும் சுமந்து கொண்டல்லவா ஓடி ‘நாய்’. இப்போது உன்னிடம் பொருளும், செல்வமும் இருக்கிறது அதைவத்து பொழுது போக்கு போராட்டங்களை ஆரம்பிக்கிறாய்.
நீ உண்ணாமல், தின்னாமல், உறங்காமல் உழைத்த பணம் உன்னில் சிலர் திட்டமிட்டே கொள்ளையிடத்தான் இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானங்களும்…தமிழீழக் கனவுகளும் என்பதை உணராயா?
மகிந்த அரசை அடிபணிய வைப்பதற்கு மேற்குலக நாடுகள் போடும் திட்டம்தான் உங்களை வைத்து இப்போது நடத்தும் போராட்டம் என்பதை நீ அறிய வில்லையா?
யுத்த விசாரணை செய்து குற்றவாளிக் கூண்டில் ஏற்றும்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் கொடி பிடிக்கிறீர்களே, கூச்சல் இடுகிறீர்களே இது வெறும் முட்டாள்தனம் எனத் தெரியவில்லையா?
உலகத்தில் இருக்கின்ற மூலை முடுக்குகளில் எல்லாம் தமது சண்டித்தனத்தைக்காட்டி ஒட்டச் சுரண்டி அம்மக்களை ஒட்டாண்டியாக்கி தங்கள் நாடுகளை வளப்படுத்திய ஐரோப்பியர்களும், அமெரிக்காவும் யாரை விசாரணை செய்ய முடியும்?
இப்படி விசாரனை செய்வதனால் முதலில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டிய நாடு அமெரிக்கா அல்லவா?
அன்று செவ்விந்தியர்களை அழித்ததில் இருந்து இன்று ஈராக்கினை அழித்துக்கொண்டிருப்பதற்காக அத்தனை அமெரிக்க தலைவர்களையும் ஆயிரம் தடவைகள் தூக்கிலிடவேண்டும் அல்லவா?
ஐரோப்பியர்களும் சளைத்தவர்களல்லவே! ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் சமாதான பிரியர்களாக, சமூக சேவகர்களாக, அரச சார்பற்ற நிறுவனங்களாக உள்ளே புகுந்து கொண்டிருக்கின்றார்களே எதற்காக. யுத்தங்களை தூண்டுவதும் தங்கள் கால்களில் அம்மக்களை விழ வைத்து அம்மக்கள் கோவணத்துக்குக் கூட தங்கள் கால்களைத்தான் நக்க வேண்டுமென செயல்படும் ஐரோப்பியக் கயவர்களை எந்தக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவது?
யாரிடம் கேட்கின்றீர்கள் நீதி?
வெட்கம், மானம், ரோசம் இவைகள் மனிதனுக்கு இருக்கவேண்டுமல்லவா?
ஆட்டுவிக்கிறான் மேற்குலகத்தான் ஆடுகிறீர்கள் நீங்கள்.
ஒரு சிலர் தங்கள் நலன் கருதி பணம் பண்ண எடுக்கும் நடவடிக்கைகளை ஏன் எதற்கு எனக் கேட்காமல் செம்மறி ஆட்டுக்கூட்டம் போல் தலையாட்டி, தலைகுனிந்து பின்னே செல்கிறீர்களே இதுதானா நீங்கள் பெற்ற கல்விப்பாரம்பரியத்தினால் கிடைத்த உன்னத நிலை! இதுதானா உங்கள் மானம்! இதுதானா உங்கள் அறிவு!
அட அதுகள்தான் போகட்டும் என்று பார்த்தால் பழனியிலே இருக்கும் கடவுளுக்கு பாரிசிலே பால் ஊற்றுகிறீர்களே! இந்தியாவில் உள்ள கள்ளச்சாமியார்களை இங்கே அழைத்து பேயாட்டி சூனியம் எல்லாம் ‘விழுத்துறீங்களே’! எதையும் பகுத்தறிய மாட்டீங்களா? ஆயிரம் பெரியார் வந்து திட்டினாலும் நாம் திருந்தமாட்டோம் என நெஞ்சை நிமிர்த்தி நடைபோடுகிறீர்கள். உங்கள் காட்டுமிராண்டி போக்கைப் பார்த்து சர்வதேச சமூகமே எள்ளி நகையாடுவது உங்கள் கண்களுக்குத் தெரிவதில்லையா?
நீங்கள் நம்பும் நாடுகளால் ‘மேயப்பட்டவர்கள்’ போராடப் புறப்பட்டால் இந்த உலகம் தாங்குமா?
உலக வல்லரசுகளிற்கு எதிராக மக்கள் போராடும்போது நீ எந்தப் பக்கம் நிற்கப்போகிறாய்? அட நீ ஆறுமுகநாவலர், இராமநாதன் போன்றோர் வழிவந்த பரம்பரையல்லவா?
உங்கள் மூடத்தனங்களை முதலீடாக்கும் இந்திய அரசியல் வாதிகள் சிலருக்கு நீங்கள் கோடிக்கணக்காக நோட்டுக்களை அள்ளி வீசுகிறீர்களே! உங்கள் தேசத்தில் உணவுக்கே அல்லலுறும் வறிய எளிய மக்களுக்கு உதவவேண்டும் என நினைக்க மாட்டீர்களா?
ஏ..தமிழா
நீ..சுயமாக சிந்தி..
மொழியை மற.. மதத்தை துற
மனிதனாக சிந்தி
அப்போதுதான் உனக்கு விடிவு கிட்டும்.
இல்லையேல் நீயே உனக்கு ‘ஆப்பு’
சித்தன்
நன்றி . தூ .நெட்-
0 commentaires :
Post a Comment