சரத் பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் விசாரிப்பதா அல்லது சாதாரண நீதிமன்றத்தில் விசாரிப்பதா என்பது குறித்து இராணுவ சட்டப் பிரிவு சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெற்ற பின்னரே தீர்மானம் எடுக்கும் என்று இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். பொன்சேகாவிடமிருந்து பெறப்படும் வாக்குமூலத்தை இராணுவ சட்டப் பிரிவினர் பரிசீலித்து அதனை சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அனுப்பி அது பெறப்பட்ட பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார். இராணுவத்தின் சட்ட விதிமுறைகளுக்கு அமையவே சரத் பொன்சேகா இராணுவப் பொலிஸாரால் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் கைது செய்யப்பட்டார் என்று தேசிய பாதுகாப்பு விவகாரங்களு க்கான பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். எந்த ஒரு இராணுவ அதிகாரியோ அல்லது வீரரோ சேவையின் போது இராணுவ சட்டங்களை மீறினால் அவர் ஓய்வு பெற்று ஆறு மாத காலத்திற்குள் அவர் மீது இராணுவம் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இராணுவ சட்டத்தின் 57 பிரிவு தெளிவாக கூறுவதாக தெரிவித்த அமைச்சர், அந்த சட்டவிதி விதிமுறைகளுக்கு அமைவாகவே பொன்சேகா இராணுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டினார். சரத் பொன்சேகா கைது செய்யப் பட்டமை மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கை கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியா ளர் மாநாடு நேற்று பிற்பகல் நடை பெற்றது. கொழும்பிலுள்ள தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் தலைமையில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியாக இருந்தபோது இராணுவ விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரிலேயே பொன்சேகா கைதுசெய்யப்பட்டார். பாதுகாப்பு சபையானது ஒரு நாட்டின் பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதில் உச்சமட்ட சபையாகும். முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி தலைமை வகிக்கும் இந்த பாதுகாப்பு சபையில் இராணுவ தளபதியாக இருந்தபோது பொன்சேகா பாதுகாப்பு சபையின் முன்னணி அங்கத்தவராக இருந்தவர். பாதுகாப்பு சபையின் உறுப்பினராக இருந்தபோது அரசுக்கு எதிரான அரசியல் கட்சிகளுடனும் அவர் தொடர்பு வைத்ததுடன் முக்கிய இரகசிய விடயங்களை பரிமாறிக்கொண்டிருந்திருக்கலாம். பாதுகாப்பு சபை உறுப்பினர் என்ற ரீதியில் இது அவர் செய்யக் கூடாத ஒன்றாகும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட் டினார். சரத் பொன்சேகாவுக்கு வெளிநாட்டு சக்திகளுடன் தொடர்புகள் உள்ளனவா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள் விக்கு அமைச்சர் பதிலளிக்கையில் :-சரத் பொன்சேகா சேவையில் இருந்தபோது அரசியல் கட்சிகளுடன் தொடர்பு வைத்துள்ளமை தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றது. இதுதவிர மேலும் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்ப ட்டுள்ளன. அவை தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றது. அந்த விசாரணைகள் முடிவுற்ற பின்னர் அது தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். வெளிநாடுகளுடனான தொடர்புகள் தொடர்பில் விசாரணைகளுக்குப் பின்னரே எதுவும் கூறமுடியும் என்றும் குறிப்பிட்டார். சரத் பொன்சேகாவுடன் மேலும் பல இராணுவ மற்றும் சிவிலியன்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சிலர் கைது செய்யப்படவுள்ளனர். இரகசிய பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
0 commentaires :
Post a Comment