2/07/2010

ரஷ்யாவில் ஜனாதிபதிக்கு பெரு வரவேற்பு; இருதரப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்து

ரஷ்ய நட்புறவு பல்கலைக்கழகம் கலாநிதி பட்டம் வழங்கி கெளரவம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று (06) ரஷ்யா போய்ச் சேர்ந்தார். மொஸ்கோ வினுகோஆ சர்வதேச விமான நிலையம் சென்றடைந்த ஜனாதிபதிக்கு அங்கு பெரு வரவேற்பளி க்கப்பட்டது.

ஜனாதிபதியாக இரண்டாவது தடவையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னர் முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக ரஷ்யா செல்லும் ஜனாதிபதி இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை வலுப்படுத்தும் வகையில் நாளை (08) ரஷ்ய ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இதேநேரம், 300 மில்லியன் அமெரிக்க டொலருக்கான இருதரப்புக் கடன் உடன்படிக்கையொன்றிலும் ஜனாதிபதி கைச்சாத்திடுகின்றார். இரு நாடுகளுக்கு மிடையிலான இரு தரப்பு உடன்படிக்கைகள் நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காகக் கைச்சாத்திடப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.

பல தசாப்தங்களுக்குப் பின்னர் நாடொ ன்றின் தலைவர் ரஷ்யாவுக்குச் செல்வது முதற் தடவை என்பதால், ஜனாதிபதியின் ரஷ்ய விஜயம் முக்கிய மானதாகக் கருதப்படுகிறது.

ரஷ்ய குடியரசுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று மொஸ்கோவிலுள்ள வினுகோஆ சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பூச்செண்டு கொடுத்து வரவேற்கப்படுகிறார். முதற் பெண்மணி சிரந்தி ராஜபக்ஷ, அமைச்சர்கள் ரோஹித போகொல்லாகம, ஜீ. எல். பீரிஸ், அனுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, மஹிந்தானந்த அளுத்கமகே, விமல் வீரவன்ச எம். பி. மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் காணப்படுகின்றனர். (படம்; சுதத் சில்வா)

ஜனாதிபதிக்கு ரஷ்ய மக்கள் நட்புறவு பல்கலைக்கழகத்தினால் நேற்று மாலை கெளரவ டொக்டர் பட்டம் வழங்குவதற்கு ஏற்பாடாகியிருந்தது. உலக சமாதானத்தைப் பேணி வருவதற்காகவும், பயங்கரவாதத்திற்கெதிரான வெற்றிகரமான செயற்பாட்டுக்காகவும் ஜனாதிபதிக்குக் கெளரவ டொக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி வீ. லெவ்றோவ் விடுத்திருந்த அழைப்பினை ஏற்றே ஜனாதிபதி ராஜபக்ஷ ரஷ்யா சென்றிருக்கிறார். மக்கள் நட்புறவு பல்கலைக்கழகத்தின் ஐம்பதாவது ஆண்டு விழாவில் பங்குபற்றுமாறு ஜனாதிபதி திமித்றி மெத்வதேவின் சார்பிலேயே ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

1995 ஆம் ஆண்டிலிருந்து சிறப்பு டொக்டர் பட்டங்களை வழங்கி வரும் இந்தப் பல்கலைக்கழகம் கல்வி, விஞ்ஞான துறைகளில் சிறந்த இலக்குகளை எய்தியோருக்கும் உலக சமாதானத்தைப் பேணி வரும் உலகத் தலைவர்களுக்கும் இதுவரை பட்டங்களை வழங்கியுள்ளது. இதுவரை உலகளாவிய ரீதியில் ஐந்து ஜனாதிபதிகளும் இரண்டு பிரதமர்களும் இந்தப் பட்டங்களைப் பெற்றுள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் ஐம்பதாவது ஆண்டு விழாவில் ஜனாதிபதி ராஜபக்ஷ வுக்கு சிறப்பு டொக்டர் பட்டம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பங்குபற்றவென சுமார் 100 இற்கும் அதிகமான நாடுகளிலிருந்து 6000 இற்கும் அதிகமானோர் அழைக்கப்பட்டுள்ளார்கள்.

இன்று (07) பிற்பகல் மூன்று மணிக்கு பல்கலைக்கழகத்தின் தலைவரைச் சந்திக்கும் ஜனாதிபதி ராஜபக்ஷ, மாலை 3.30 இற்கு மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் நடைபெறும் சுதந்திரதினக்

கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்வார்.

நாளை (08) பிற்பகல் 2 மணிக்கு ரஷ்ய ஜனாதிபதி திமித்றி மெத்வதேவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பார். அதேவேளை 300 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்கான உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவுள்ளது.




0 commentaires :

Post a Comment