2/27/2010

பொதுத்தேர்தல் 2010

25 கட்சிகள், 312 சுயேச்சைகள் போட்டி: 196 ஆசனங்களுக்கு 7625 பேர் களத்தில்

கட்சிகளின் 46 மனுக்களும் 35 சுயேச்சைகளும் நிராகரிப்பு


பாராளுமன்றத்திற்கு வாக்கெடுப்பின் மூலம் 196 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 7,625 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இருபத்து நான்கு அரசியல் கட்சிகளிலும் 312 சுயேச்சைக் குழுக்களிலும் இவர்கள் களமிறங்கியுள்ளார்கள். 22 தேர்தல் மாவட்டங்களுக்கும் அரசியல் கட்சிகளினூ டாக 3859 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களில் 3691 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் பணிகள் நேற்று நண்பகலுடன் நிறை வடைந்தன. ஆட்சேபம் தெரிவிப்பதற்காக பிற்பகல் 1.30 மணிவரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் முறையாகப் பூர்த்திசெய்யப்படாததால், கட்சிகள் தாக்கல் செய்த 46 வேட்பு மனுக்களும் 35 சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டன.
பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவான விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி வன்னி மாவட்டத்திற்குத் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. அந்தக் கட்சியில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு வேட்பாளரின் பெயர் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் பட்டியலிலும் இடம்பெற் றிருந்ததால் அந்த இரண்டு கட்சிகளின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.
பொதுத் தேர்தலொன்றில் கூடுதலான வேட்பாளர்கள் களமிறங்குவது இதுவே முதற் தடவையாகும். இதில் கொழும்பு மாவட்டத்திலேயே அரசியல் கட்சிகள் மூலம் கூடுதலான வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். 19 உறுப்பினர்கள் தெரிவாகவுள்ள இந்த மாவட்டத்தில் 22 அரசியல் கட்சிகளில் 484 பேரும் 16 சுயேச்சைக் குழுக்களில் 352 பேருமாக 836 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் கூடுதலான சுயேச்சைக் குழுக்கள் களமிறங்கியுள்ளன. 07 உறுப்பினர்களைத் தெரிவு செய்யவுள்ள இந்த மாவட்டத்தில் 49 சுயேச்சைக் குழுக்களில் 490 பேரும் 17 அரசியல் கட்சிகளில் 170 பேருமாக 660 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அடுத்ததாக திருகோணமலை, மட்டக்கள ப்பு, மொனறாகலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் கூடுதலான அரசியல் கட்சிகள் களமிறங்குகின்றன. இந்த மாவட்டங்களில் தலா 17 கட்சிகள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்து அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தத் தடவையே கூடுதலான கட்சிகளினதும் சுயேச்சைக் குழுக்களினதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
பதவி முத்திரை பதிக்கப்படாமலும் முறையாகப் பூர்த்தி செய்யப்படாமலும் அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த 46 வேட்புமனுக்களும் சுயேச்சைக் குழுக்கள் தாக்கல் செய்த 35 நியமனப் பத்திரங்களும் நிராகரிக்கப்பட்டன.
கண்டி மாவட்டத்தில் 12 பேரைத் தெரிவுசெய்வதற்காக 14 அரசியல் கட்சிகளில் 210 பேரும் 17 சுயேச்சைக் குழுக்களில் 225 பேருமாக 435 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 07 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ள நுவரெலியா மாவட்டத்தில் 14 அரசியல் கட்சிகளில் 140 பேரும் 16 சுயேச்சைக் குழுக்களில் 160 பேருமாக 300 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 09 பேர் தெரிவு செய்யப்படவுள்ள யாழ். மாவட்டத்தில் 14 அரசியல் கட்சிகளில் 168 பேரும் 8 சுயேச்சைக் குழுக்களில் 96 பேருமாக 264 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
 

0 commentaires :

Post a Comment