2/05/2010
| 0 commentaires |
2010 பாராளுமன்றத் தேர்தலும் கிழக்கு மாகாண அரசியலும்!
சத்யம்
இலங்கை அரசியலின் இந்த வருட ஆட்டத்தின் முதலாவது இன்னிங்க்ஸ் முடிந்து இரண்டாவது இன்னிங்க்ஸ்க்கான ஆயத்த வேலைகளும் மிகவும் ஜரூராக ஆரம்பித்து விட்டன. அணி அமைப்பதிலும் ஆள் திரட்டுவதிலும் கட்சிகள் மீண்டும் முனைப்புக் காட்ட தொடங்கி விட்டன. வழக்கம் போல தமிழ்க் கட்சிகளும் தாவலுக்குத் தயாராகின்றன. புலிகளின் அரசியலையே தொடர முயலும் சம்பந்தன் தலைமையிலான த.தே.கூ. அமைப்பினரும் தமது அரசியல் ஞான சூனியத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதில் அக்கறை காட்ட ஆரம்பித்து விட்டனர். இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, கிழக்கிற்கான ஒரே தமிழ் கட்சியான த.ம.வி.பு. இந்தத் தேர்தலில் என்ன நிலைப்பாடு எடுக்கப் போகின்றனர் என்பது கிழக்கு மாகாணத் தமிழரையும் (ஒரு பகுதி) முஸ்லிம்களையும் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமான கேள்வியாகவே படுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் தற்போதுதான் முடிவடைந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை பின்னோக்கிப் பார்ப்பது த.ம.வி.பு. களின் அடுத்த கட்ட நகர்வுக்கு அவசியமானதென நினைக்கிறேன். நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் கிழக்கு மற்றும் வடக்கு மாகாண மக்கள் பெருமளவில் வாக்களிக்காவிட்டாலும் வாக்களித்தவர்களில் பெரும்பான்மையினர், தே.த.கூ. அமைப்பினரின் அரசியல் வங்குரொத்துத்தன்மைக்கு துணை போயிருப்பதைத் தெளிவாக உணரக்கூடியதாக உள்ளது. அதாவது, ஜனாதிபதி சார்பான அமைச்சர் முரளிதரனின் குரலுக்கோ, அல்லது முதலமைச்சர் சந்திரகாந்தன் தலைமையிலான த.ம.வி.பு. களின் ஜனாதிபதிக்கு சார்பான நிலைப்பாட்டுக்கோ கிழக்கு மாகாண தமிழ் மக்கள் எதிர்பார்த்தளவு தலையசைக்கவில்லை என்பது தெளிவாகிறது. இதற்கான காரணங்கள் பலவாக இருக்கலாம். அவற்றில் முக்கியமான சிலவற்றை ஊன்றிப் பார்ப்பது அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தலில் மட்டுமன்றி எதிர் காலத்திலும் அமைச்சர் முரளிதரன் மற்றும் முதலமைச்சர் சந்திரகாந்தன் ஆகியோரின் கிழக்குப் பிராந்திய அரசியல் பிரசன்னத்திற்கும் அவசியமானது. இந்த பின்னோக்கிய கண்ணோட்டத்தின் பின்னர் எதிர் வரும் பாராளுமன்றத் தேர்தலில் த.ம.வி.பு. களின் அணுகு முறை எவ்வாறு இருக்க வேண்டுமென நான் விரும்புவதைப் பற்றிப் பார்க்கலாம் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அதிபர் ராஜபக்ஷேவுடன் த.ம.வி.பு. கள் அணிசேர்ந்தது மிகவும் சரியான முடிவு என்பதில் கிழக்கு நலனில் அக்கறை கொண்ட எவருக்கும் இரு கருத்து இருக்க முடியாது. ஆனால் இந்த முடிவுக்கு சாதாரண மக்களின் அங்கீகாரம் பெருமளவில் கிடைக்காமல் போனது துரதிர்ஷ்டவாசமானது. இந்த நிலைமைக்கான காரணங்கள் சிலவற்றை முதலில் பார்ப்போம்: த.ம.வி.பு. களும் அமைச்சர் முரளிதரனின் ஆதரவாளர்களும்: த.ம.வி.பு. கள் ஜனாதிபதி அணியில் இருந்ததாக வெளிப்படையாக அறிவிக்கப்பட்டாலும் த.ம.வி.பு. களின் ஆதரவாளர்களுக்கும் அமைச்சர் முரளிதரனின் ஆதரவாளர்களுக்கும் இடையில் முறுகல் நிலையொன்று தொடர்ந்து இருந்து வந்ததை இருபாலாரும் மறுக்க மாட்டார்கள் என நம்புகிறேன். குறிப்பாக ஜனாதிபதி தேர்தல் காலத்தில் திருக்கோயில் பகுதியில் இடம்பெற்ற சம்பவம், ‘இவர்கள் என்றுமே ஒன்றாக மாட்டார்கள்’ என்ற மனவோட்டத்தையும் மனப்பிராந்தியையும் சாதாரண மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது. இந்த முறுகல் நிலை தேர்தல் வாக்குகளில் பிரதிபலித்திருக்கிறது என்பது என தாழ்மையான கருத்து. தே.த.கூ. அமைப்பும் ஐ.தே.க. யும் தமிழர் நலம் சார்ந்தவை என்ற மாயை: தமிழ் மக்களுக்கே உரித்தான ஒரு நீண்ட கால நம்பிக்கை, ‘த.தே.கூ. அமைப்பும் ஐ.தே.க. யும் தமிழர் நலம் சார்ந்தவை’ என்பது. இது எவ்வளவு தூரம் தவறானது என்பதற்கு ஆதாரங்கள் பலவுள்ளன. குறிப்பாக இன்றைய தமிழர்களின் அரசியல் அவல நிலைக்கான சூத்திரதாரி ஐ.தே.க. யை சேர்ந்த J.R. என்பதும், கடந்த காலத்தில் தமிழருக்கான நியாயமான தீர்வொன்றை மறைந்த புத்திஜீவி திருச்செல்வம் அவர்கள் சந்திரிகா அம்மையாருடன் சேர்ந்து முயன்றபோது அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தவர் ஐ.தே.க. இன் தற்போதைய தலைவர் ரணில் என்பதும், ஐ.தே.க. ஒரு போதும் தமிழர் நலன் சார்ந்த கட்சி அல்ல என்பதற்கான சான்றுகள். த.தே.கூ அமைப்பினரின் கூத்துக்களைப் பற்றிக் கூற வேண்டியதில்லை. தங்களைத் தெரிவு செய்த மக்களின் ஊர்ப் பக்கம் தலை வைத்துப் படுக்காமல் இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் இருந்து அறிக்கைகளில் மட்டுமே வாழ்ந்து கொண்டு தமிழர்களின் பிரதிநிதிகள் என்று தம்மைத் தாமே கூறிக் கொள்ளும் தே.த.கூ. அமைப்பினரின் பிரதாபம் வடக்கில் எடுபடல்லாம், ஆனால் கிழக்கிலும் எடுபட்டுவிட்டதோ என்ற கவலை வருகிறது. ஐ.தே.க. யுடன் கூட்டு வைத்ததனால் கிழக்கு வாழ் தமிழர் குழம்பி விட்டார்களோ என்னவோ. எதுவாக இருப்பினும் இந்தக் கூட்டணியின் செல்வாக்கும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஓரளவுக்கு எடுபட்டிருக்கிறது என்பதும் உண்மை. மிகவும் ஆழமாக, அதே நேரம் திறந்த மனதோடு ஆராயப்பட வேண்டிய காரணம் இது. ஒரு நீண்ட ஆயுதப் போராட்டத்தின் பின்னர், ஓரிரு வருடங்களில் ஆயுதக் கலாச்சாரம் ஒழிந்து விடும் என எதிர்பார்ப்பது அவ்வளவு புத்திசாலித்தனமானது அல்ல தான். ஆனால், அதிசயிக்கும் வண்ணம் கிழக்கு அரசியல் அரங்கில் அமைச்சர் முரளிதரனின் பிரசன்னமும் முதலமைச்சர் சந்திரகாந்தனின் த.ம.வி.பு. களின் மாகாண அரசாங்கமும் ஆயுதக் கலாச்சாரத்தை விட்டு நாங்கள் இலகுவாக வெளியே வந்து விட்டோம் என்பதையே எடுத்தியம்பின. இருப்பினும் மக்களிடையே இன்னும் பூரண நம்பிக்கையை ஏற்படுத்த இந்த இரு தரப்பினரும் தவறி விட்டனரோ என எண்ணத் தோன்றுகிறது. தேர்தல் களத்தின் போது அதிபர் ராஜபக்ஷேவின் கட-அவுட் வைக்க ஆயுத முனையில் முன்னாள் போராளிகள் கிழக்குத் தமிழர்களிடம் வந்து பணம் பறித்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த அணுகுமுறை நிச்சயமாக வாக்குகளை ஜனாதிபதிக்கு பெற்றுத் தந்திருக்காது என்பது என்னைப் போன்ற சமாதானம் விரும்பும் சாமான்யனின் அபிப்பிராயம். ஊடகங்களின் செல்வாக்கு: ஊடகங்கள், குறிப்பாக இலங்கையில் இருந்து வெளி வரும் தமிழ் பத்திரிகைகள் ஜனாதிபதிககெதிரான கருத்துக்களை வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போன்று மிகவும் நைசாக அதே வேளை அவதானமாக கைக்கொண்டன. ஆனால் இதனைக் கவனிக்க அல்லது பெரிதாக எடுத்துக் கொள்ள மத்திய மற்றும் மாகாண அரசுகள் தவறிவிட்டன. ஓரளவு படித்த வாக்காளர்களின் வாக்குகள் ஜனாதிபதிக்கு எதிராக போயிருக்குமாயின் அதற்கு இந்த தமிழ் ஊடகங்களும் ஒரு காரணம் எனலாம். இது தவிர, இலங்கையில் இருந்து வெளி வரும் ஒரு ஆங்கில வார இதழின் கட்டுரையாளர் (இவர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர், தமிழர் என பின்னர் அறிந்து கொண்டேன்) த.ம.வி.பு. களின் ஜனாதிபதிக்கு ஆதரவு தரும் முடிவை எள்ளிநகையாடியும் விமர்சித்தும் எழுதி இருந்ததையும் கொஞ்சம் நாம் அவதானிக்க வேண்டும். இதே நேரம் ஏனைய அரசு சார்பான ஊடகங்கள் கூட த.ம.வி.பு. களின் ஜனாதிபதிக்கு ஆதரவு தரும் நிலைப்பாட்டை வெறும் செய்தியாக வெளிட்டனவே தவிர எதிரணியில் இருந்த மனோ கணேசன் போன்ற சந்தர்ப்பவாதிகள் பெற்ற முக்கியத்துவத்தை த.ம.வி.பு. களுக்கு அளிக்க தவறி இருந்தன. ஆக மொத்தத்தில், ஊடகங்களின் பங்களிப்பு கிழக்கு மாகாணத்தில் ஜனாதிபதிக்கான வாக்குகளை த.ம.வி.பு. மற்றும் அமைச்சர் முரளிதரன் சார்பாக அவ்வளவாக பெற்றுக் கொடுக்கவில்லை என்பது தெளிவாகிறது. ரி, நடந்தது நடந்து விட்டது. இனி, நடக்கப் போவதை நல்லதாக அமைத்துக் கொள்ளும் வாய்ப்புகள் ஒன்றும் தவறிப் போய் விடவில்லை. This is not the end of the road! நடந்தவற்றில் இருந்து மேலும் புதிதாக அறிந்து கொள்வது தான் அறிவுடைமை. என்ன மாதிரியான அணுகு முறை கிழக்கு மாகாண தமிழர்களின் பிரதிநிதிகளை பாராளுமன்றத்திகு தெரிவு செய்யும் என்பதைப் பற்றி ஒரு சாமான்யனின் என்ன ஓட்டங்கள். அமைச்சர் முரளிதரனின் ஆதரவாளர்களும் த.ம.வி.பு. உறுப்பினர்களும் பழையதை மறந்து கிழக்கு மாகாண மக்களின் நலன் கருதி ஒரே குடும்பத்தினராய்ச் செயல்பட வேண்டும். இதனை வெளிப்படுத்தும் முகமாக மக்களுக்கான சேவைத் திட்டங்களை ஒன்றிணைந்து செயல்ப்படுத்த வேண்டும். அதாவது மக்கள் மனதில் ‘நாங்கள் ஒன்றேதான்’ என்பதை ஆணித்திரமாக பதிய வைக்க வேண்டும். வாக்காளர்களில் ஒரு சிலரை பயமுறுத்திப் பணியவைக்கலாம், ஆனால் எல்லோரையும் பணிய வைக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சுருக்கமாக சொன்னால், ‘மக்களின் மனங்களை வெல்ல வேண்டும்’. .தே.கூ.. அமைப்பினரின் பச்சோந்தித்தனத்தை துகிலுரித்துக் காட்டி அவர்கள் கிழக்கு மாகாண மக்களின் பிரதிநிதிகள் அல்ல என்பதை தெளிவாக மக்கள் மனதில் பதியும்படி எடுத்துரைக்க வேண்டும். அத்தோடு ஐ.தே.க. சந்தர்ப்பவாத கட்சி என்பதை ஆதாரங்களோடு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஆயுதங்கள் பிரத்தியேக பாதுகாப்புக்கு மட்டுமேயன்றி எவரையும் பயமுறுத்தவோ அல்லது பதம் பார்க்கவோ அல்ல என்பதை இதய சுத்தியுடன் தெரிவிக்க வேண்டும் – அது போல் நடந்தும் காட்ட வேண்டும். ஊடகங்களை சார்பாக இல்லா விட்டாலும் எதிராக செயல்பட முடியாதவாறு சட்ட அணுகுமுறையை இறுக்கமாக கையாள வேண்டும். எப்போதுமே விசுவாசமான சட்ட வல்லுனர்களை உடன் வைத்திருக்க வேண்டும். முடியுமானால் கிழக்குகென அது சார்பான பத்திரிகை மற்றும் வானொலி சேவையை உடனடியாக தொடங்க வேண்டும் அதிபர் ராஜபக்ஷே மூலம் நல்ல திட்டங்களை உடனடியாக கிழக்கில் அமுல்படுத்த வேண்டும். தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்னரே இந்த திட்டங்கள் குறித்த அறிவிப்பு வர வேண்டும். இல்லையானால், தேர்தல் ஆணையாளர் இது போன்ற திட்ட அறிவிப்புகளை செல்லுபடியற்றதாக்கி விடுவார். முஸ்லிம் மக்களுடன் ஆரோக்கியமான நல்லுறவுகளை ஏற்படுத்த வேண்டும். தமிழ்-முஸ்லிம் கலாச்சார நிகழ்வுகளை ஒரே மேடையில் (பல்வேறு இடங்களில்) நிகழ்த்துவது நல்ல பலனைத் தரும். த.ம.வி.பு. அமைப்பு தனித்துப் போட்டியிடுவதா அல்லது வேறு பிரதான கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவதா – எது பயனுள்ளது? சந்தேகம் வேண்டாம்! த.ம.வி.பு. தனித்தேதான் போட்டியிட வேண்டும்! ஆனால் ஜனாதிபதி ராஜபக்ஷேவுடனான கூட்டணியுடன் நட்புள்ள கட்சியாக போட்டியிட வேண்டும். அதாவது, த.ம.வி.பு. கள் மற்றும் அமைச்சர் முரளிதரன் சார்ந்துள்ள சுதந்திரக் கட்சியின் கூட்டணி என்பன தொகுதிப் பங்கீட்டு அடிப்படையில் தொகுதிகளை பிரித்துக் கொண்டு கிழக்கில் மட்டுமல்லாது வடக்கிலும் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும், இந்தத் தேர்தலிலும் அதிபர் ராஜபக்ஷேவின் கட்சி வெற்றி பெறும் வாய்ப்புகள் வலுவாக இருப்பதை மறுக்க முடியாது. இதனை மனதில் கொண்டு, த.ம.வி.பு. செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. அதே வேளை, தனித்துப் போட்டியிடுவதன் மூலம் பின்வரும் விடயங்களை த.ம.வி.பு. அமைப்பினர் உறுதியாக உலகுக்கு உணர்த்தவும் இயலும்: கிழக்கு மாகாண தமிழர்களுக்கென ஒரு குரல் அரசியல் ரீதியாக தேவை என்பதை நியாயப்படுத்துவது தே.த.கூ. அமைப்பு என்பது ஓர் கண்துடைப்பு என்பதை வெளிப்படுத்துவது மத்தியில் அரசியல் மாற்றங்கள் நிகழும் போது கிழக்கும் அந்த அலைகளில் அடிபட்டுப் போகாமல் இருப்பதை உறுதி செய்வது கிழக்கு மக்களிற்கான தேவைகளை நிர்பந்தித்துப் பெறும் வலுவை மத்திய அரசுக்கு உணர்த்துவது கிழக்கு மாகாண அபிவிருத்தித் திட்டங்களை பாகுபாடின்றி முன்னெடுத்துச் செல்வது மேற் கூறியவை தவிர்த்து மேலும் சில, முக்கியத்துவம் குறைந்த காரணங்களையும் சொல்ல முடியும். ஆனால் இந்த கட்டுரையின் நீளம் கருதி அவற்றைப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம். ஆக மொத்தத்தில் எதிர் வரும் பாராளுமன்றத் தேர்தல் கிழக்கின் த.ம.வி.பு. கட்சி மற்றும் அரசியல்வாதிகளின் இருப்பையும் செல்வாக்கையும் தனித்து சோதித்துப் பார்க்கும் ஒன்றகவே அமையப் போகிறது. இந்தச் சோதனையில் வெற்றி பெறுவதற்கான ஆயத்தங்களில் கிழக்கின் தமிழ் அரசியல்வாதிகள் உடனடியாக ஈடுபட வேண்டிய கட்டாயமும் இவர்களது தோள்களில் ஏற்கனவே ஏற்றப்பட்டு விட்டன என்றே கொள்ள வேண்டும். இருந்து பார்க்கலாம்.
thanks thenee
0 commentaires :
Post a Comment