2/16/2010

வடக்கு கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்த17 மாவட்டங்களின் ஐ.ம.சு.மு வேட்பாளர்கள் வேட்பு மனு கைச்சாத்து

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் 17 மாவட்டங்களின் வேட்பு மனுக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் நேற்று மாவட்டக் குழுத் தலைவர்களினால் கையொப்பமிடப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்த ஏனைய மாவட்ட வேட்பு மனுக்கள் பூர்த்தி செய்யப்பட்டு நேற்றுக் காலை 10.30 மணி சுப வேளையில் கையொப்பமிடப்பட்டுள்ளதுடன் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடும் சகல வேட்பாளர்களும் தமது வேட்பு மனுக்களில் நேற்று கையொப்பமிட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
எதிர்வரும் 21ம் திகதிக்குள் 22 தேர்தல் மாவட்டங்களையும் உள்ளடக்கிய வேட்பு மனுக்கள் கையொப்பமிடப்பட்டு பூர்த்தி செய்யப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் மாவட்டத் தலைவர்கள் வேட்பு மனுப்பட்டியலில் கைச்சாத்திட்டதுடன் 26ம் திகதிக்குள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏனைய வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் இது தொடர்பில் விளக்க மளித்த அமைச்சர்;
எதிர்வரும் 20ஆம் திகதிக்குப் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் சகல வேட்பாளர்களும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதுடன் அன்றைய தினம் அவர்கள் வேட்பு மனுக்களில் கைச்சாத்திடுவர் என்றும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான விசேட செய்தியாளர் மாநாடு நேற்றுக் கொழும்பு மஹாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் அமைச்சர் ஜோன் செனவிரத்ன ஆகியோரும் கலந்துகொண்ட இம்மாநாட்டில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்ததாவது;
பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சியில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளுடனும் தேர்தல் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடியுள்ளதுடன் தேர்தல் செயற்பாட்டுத் திட்டமொன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர் தெரிவுகள் இடம்பெற்றுள்ள நிலையில் இதற்குமுன் பாராளுமன்ற த்திலிருந்தவர்களுடன் புதியவர்களுக்கும் இம்முறை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இம்முறை அனைத்து தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிடவுள்ளது. கடந்த கால யுத்த சூழ்நிலைக்குப் பின்னர் முதல் தடவையாக சகல மாவட்டங்களிலும் முன்னணி போட்டியிடும் தேர்தல் இதுவாகும்.
இம்முறை தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏற்கனவே இருந்தவர்களைத் தவிர ஆயிரம் விண்ணப்பங்கள் புதிதாக கிடைத்திருந்தன.
அதற்கிணங்க நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டு சகல மாவட்டங்களிலுமுள்ள அனுபவமுள்ள அனைத்துத் துறைகளையும் சார்ந்தவர்கள் புதிய வேட்பாளர்களாகத் தேர்ந்தெடு க்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 26ம் திகதி வேட்பு மனுத்தாக்கல் நிறைவு பெறுவதால் 26ம் திகதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்வதுடன் 27ம் திகதி அநுராதபுரத்தில் இடம்பெறும் விசேட மத வைபவங்களைத் தொடர்ந்து 27ம் திகதி வேட்பாளர்கள், அனைவரும் கட்சியின் கொள்கைப் பிரகடனத்தை ஏற்றுக்கொள்ளும் வகையில் ஜனாதிபதியின் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொள்வார்கள். இந்நிகழ்வு எதிர்வரும் 27ம் திகதி பிற்பகல் 4 மணிக்கு அநுராதபுரம் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது.
பிரதான பெளத்த மத வழிபாடு அநுராதபுரம் ஸ்ரீ மஹா போதி விஹாரையில் இடம்பெறுவதுடன் பெளத்த மத வேட்பாளர்கள் அவ்வழிபாடுகளில் கலந்துகொள்வர்.
அதேவேளை ஏனைய மதங்களைச் சார்ந்தோர் அநுராதபுரத்தின் ஏனைய மத வழிபாட்டுத் தலங்களில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள மத வழிபாடுகளில் கலந்துகொள்வர்.
இதனையடுத்து 27ம் திகதி அரசாங்கத்தின் கொள்கை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொள்கை மற்றும் மஹிந்த சிந்தனை எதிர்காலத் திட்டம் தொடர்பான அரசின் கொள்கைகளை ஏற்றுக் கொள்வதாக வேட்பாளர்கள் ஜனாதிபதி முன்னிலையில் உறுதிமொழி எடுப்பார்கள்.
அமைதியானதும் நீதியானதுமான தேர்தல் இடம்பெறுவதற்குப் பூரண ஒத்துழைப்பு வழங்குவதுடன் கட்சிக் கொள்கைகளுக்கு மதிப்பளிக்கவும் வேட்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகி ன்றனர்.
கட்சிக் கொள்கைகளைமீறி தேர்தல் ஆணையாளரினதும் பொலிஸாரினதும் வழிகாட்டல்களை மீறி நடப்போர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவர்கள் வெற்றி பெற்றால் அவர்களுக்கு எவ்வித பதவியும் வழங்கப்படமாட்டாது.
மஹிந்த சிந்தனையை முன்கொண்டதாகவே பொதுத் தேர்தல் விஞ்ஞாபனமும் அமையும். உலகில் முன்னணி நாடாக இலங்கையைக் கட்டியெழுப்பும் நோக்குடன் சவால்கள், அழுத்தங்களை எதிர்கொள்ளப் பலமுள்ள 3ல் இரண்டு பலம் மிக்க அரசாங்கத்தை அமைப்போம்.
அதன் மூலம் முழுநாடும் எதிர்பார்க்கும் அரசியலமைப்பு மாற்றம் மேற்கொள்ளப்படும்.
கடந்த தேர்தலில் நாம் அமோக வெற்றிபெற்றுள்ளதைப் போன்றே இம்முறையும் நாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்ற ரீதியில் வெற்றிபெறுவோம்.
இன்றுள்ள அரசியலமைப்பில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவது சாத்தியமில்லை என்பதைப் பொய்யாக்கும் வகையில் அரசாங்கம் மாகாண சபைகளில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளை பெற்றுள்ளதை அமைச்சர் குறிப்பிட்டார்.
நேற்று நடைபெற்ற நிகழ்வில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, அநுராதபுரம், பொலனறுவை, குருநாகல், புத்தளம், பதுளை, மொனராகலை, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டக் குழுத் தலைவர்களே தத்தமது மாவட்ட வேட்பு மனுக்களில் கையொப்பமிட்டுள்ளனர். அத்துடன் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் சகல வேட்பாளர்களும் தமது வேட்பு மனுவில் கையொப்பமிட்டமை குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment