2/04/2010

நளினி உள்பட 11 பேர் விடுதலை? அறிவுரைகுழு பரிந்துரை பட்டியல் அரசுக்கு அனுப்பப்பட்டது



வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவ் கொலை குற்றவாளிகள் நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் மற்றும் இதர ஆயுள் தண்டனை கைதி கள் உள்பட 11 பேரை விடுதலை செய்வது தொடர்பாக வேலூர் கலெக்டர் ராஜேந்திரன் தலைமையில் அறிவுரை குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர் கடந்த 20-ந்தேதி மாலை ஆண்கள் ஜெயிலில் உள்ள கைதிகளிடம் விசாரணை நடத்தினர். பின்னர் பெண்கள் ஜெயிலில் உள்ள நளினியிடம் 1/2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து நளினியை அவரது வக்கீல் துரைசாமி சந்தித்து பேசினார். அவர் கூறுகையில் அறிவுரை குழு நளினியிடம் 150 கேள்விகள் கேட்டுள்ளனர். அதற்கு நளினி 12 பக்க அறிக்கையாக பதில் தெரிவித்துள்ளார்.
நளினி விடுதலை செய்யபடுவார் என்ற நம்பிக்கையில் உள்ளார் என்று தெரிவித்தார். இந்த நிலையில் அறிவுரை குழுவை எதிர்த்து சுப்பிரமணியசாமி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில் தானே நேரில் ஆஜராகி வாதாட விரும்புவதாக நளினி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில் வேலூர் கலெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான அறிவுரைக் குழுவின் பரிந்துரை பட்டியல் நேற்று அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதில் நளினி விடுதலைக்கு சாதகமாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. கோவையில் நடைபெற உள்ள உலக தமிழர் மாநாட்டுக்கு முன்பு நளினி விடுதலை செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் பரிந்துரை அறிக்கையில் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது உறுதியாக தெரியவில்லை.


0 commentaires :

Post a Comment