2/03/2010

பூநகரியில் 1000 பேர் நேற்று மீள்குடியேற்றம்

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்தில் ஆயிரம் பேர் தமது சொந்த இடங்களில் நேற்று மீள்குடியேற்றப்பட்டதாக மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயலாளர் யூ. எல். எம். ஹால்தீன் தெரிவித்தார்.

இவர்கள் பஸ்களில் ஏற்றப்பட்டு நேற்று பிற்பகல் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்றும் பணிகள் நேற்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. எதிர்வரும் ஐந்தாம் திகதி மற்றுமொரு பகுதியினர் மாந்தை கிழக்கு பகுதியில் மீளக்குடியேற்றத் திட்டமிட்டுள்ளதாக கூறிய அவர், மீள்குடியேற்றப்படவுள்ள குடும்பங்கள் அடையாளங் காணப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

எதிர்வரும் ஏழாம் திகதி முல்லைத்தீவுப் பகுதியில் மீள்குடியேற்ற பணிகளை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கண்ணி வெடிகள் அகற்றும் பணிகளில் ஏற்பட்ட தாமதம், ஜனாதிபதித் தேர்தல் ஆகியவற்றினால் மீள்குடியேற்றச் செயற்பாடுகள் சில வாரங்கள் தாமதமாகின. ஜனவரி 31 ஆம் திகதியுடன் மீள்குடியேற்றப் பணிகளைப் பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

மீள்குடியேற்றப்படும் மக்களுக்கு 6 மாதத்துக்குத் தேவையான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதோடு விவசாயம், மீன்பிடித்துறை என்பவற்றை முன்னெடுக்க உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. வடக்கில் மீள்குடியேற்றம் நடைபெறும் பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளும் துரிதமாக இடம்பெற்று வருகின்றன.


0 commentaires :

Post a Comment