1/09/2010

எதிர்க்கட்சி வேட்பாளரின் விஞ்ஞாபனத்தில் தமிழ்க் கூட்டமைப்பினர் ஏமாற்றம் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் விசேட குறிப்பு எதுவும் விஞ்ஞாபனத்தில் இல்லை



எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத் தினால், தமிழ்த் தேவிய கூட்டமைப்பு உள்ளிட்ட சில சிறுபான்மைக் கட்சிகள் ஏமாற்றமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விசேட குறிப்பு எதுவும் விஞ்ஞாபனத்தின் குறிப்பிடப்படாததே இந்த ஏமாற்றத்துக்குக் காரணமெனத் தெரிவிக்கப்படுகிறது. எதிரணி வேட்பாளர் வெளியிட்டுள்ள விஞ்ஞாபனத்தில் பொரளாதார விவகாரங்கள் அடங்கிய அத்தியாயமே விரிவான முறையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இத னால், சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவை அவசரப்பட்டு எடுத்துவிட்டதாக எதிரணியில் உள்ள சில தமிழ்க் கட்சிகள் விசனமடைந்துள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தமிழ் மக்கள் மத்தியில் பிரசாரம் செய்வதில் ஒரு தர்மசங்கடமான நிலையைக் தமிழ்க் கட்சிகள் எதிர்கொண்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். சரத் பொன்சேகாவினால், தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு எதுவும் கிடைக்கப்போவதில்லையென எதிரணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வெளிப்படையாகவே குறிப்பிட்டிருந்தார். இதன் காரணமாகவே, விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வில் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுக்கு உரை நிகழ்த்த வாய்ப்பளிக்கவில்லையென்றும் தகவல்கள் கூறுகின்றன. இதேவேளை, இன நெருக்கடியில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வை நோக்கிய அணுகுமுறை பற்றிய எந்தவொரு விசேடமான குறிப்பும் எதிரணி ஜனாதிபதி வேட்பாளரின் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்படவில்லையெனத் தேசிய பத்திரிகைகள் சுட்டிக்காட்டியுள்ளன. எதிரணி வேட்பாளரின் பிரசார முகாமையாளர்கள் சர்ச்சைக்குரிய சகல விடயங்களையும் தவிர்த்திருக்கிறார்கள். அரசியல் தீர்வு விடயத்தில் எதிரும் புதிருமான நிலைப்பாட்டை ஐ. தே. கட்சியும், ஜே. வி. பி. யும் கொண்டுள்ளதால் சர்ச்சைக்குரிய விடயங்களைத் தவிர்த்திருப்பதாகத் தெரிய வருகிறது. இதனால், தமிழ்க் கட்சிகளைச் சமாளிப்பதற்கு ஐ. தே. க.யினர் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.

0 commentaires :

Post a Comment