1/19/2010
| 0 commentaires |
மலையக மலர்ச்சித் திட்டம் உருவாக்கப்படும் : கொட்டகலையில் ஜனாதிபதி
"வடக்கின் வசந்தம் கிழக்கின் உதயத்தினை போல், மலையகத்தை அபிவிருத்தி செய்ய மலையக மலர்ச்சி எனும் வேலைத் திட்டத்தினை உருவாக்குவேன்" என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த பிரசாரக் கூட்டம் நேற்று கொட்டகலை பொது விளையாட்டுத்திடலில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இக்கூட்டத்திற்கு இளைஞர் வலுவூட்டல் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பிரதி அமைச்சர்களான முத்துசிவலிங்கம், ஜெகதீஸ்வரன், மாகாண அமைச்சர் பெ. இராதாகிருஷ்ணன், மலையக மக்கள் முன்னணியின் தலைவி சாந்தினிதேவி சந்திரசேகரன், மாகாணசபை அமைச்சர்கள், பிரதேச சபை, நகரசபை தலைவர், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்து உரையாற்றுகையில்,
"நான் உங்களிடம் வந்து உரையாற்றக் கிடைத்தமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன். இன்று எனக்குத் தெரியும், நீங்கள் பாரிய பொருளாதார சுமைக்கு முகம்கொடுத்து வருகிறீர்கள். மே 19 திகதிக்கு முன் இந்த நாட்டில் வேறு பிரச்சினைகள் இருந்தன.
மலையக இளைஞர்கள் வேலைக்குச் செல்லமுடியாது; நிம்மதியாக இருக்க முடியாத நிலை இருந்தது. அதை இன்று நான் இல்லாது செய்துள்ளேன். அதேபோன்று, உங்கள் வாழ்க்கையையும் சுபீட்சமாக்குவேன்.
மலையக மக்கள் இந்நாட்டின் உயிர்நாடிகளாவர். அதனை எவரும் மறுக்கமுடியாது. அதுதான் யதார்த்தம். எனவே,அவர்களின் வாழ்க்கை வளம் பெறுவதற்காக இன்னும் 3,000 அரச நியமனங்களை வழங்க உள்ளேன்.
இன்று மலையக இளைஞர்கள் பொலிஸில் சேரலாம்; இராணுவத்தில் சேரலாம். எவருக்கும் ஒரே நியாயம் தான். உங்கள் பிள்ளைகள் தேயிலை கொழுந்து பறிப்பவர்களாக இருக்கக்கூடாது. கணினிக் கல்வியைக் கற்று சர்வதேச ரீதியில் தொழில் வாய்ப்புக்களை பெற வேண்டும்.
தோட்டத்தொழிலாளர்கள் லயத்தில் வாழ்ந்த வாழ்க்கைக்குப் பதிலாக அவர்களுக்குப் புதிய வீடுகளைக் கட்டிகொடுத்து லயத்து முறையினை இல்லாது செய்வேன்.
அத்தோடு அவர்களுக்கு சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களது ஏனைய அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்வேன்.
வேலையில்லாத இளைஞர்களுக்குத் தரிசுக் காணிகளை வழங்கி புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவேன். நான் ஒரு போதும் பொய் சொன்னது கிடையாது. சொல்வதை செய்வேன்; செய்வதை சொல்வேன். நான் எப்போதும் உங்களுடன்தான் இருப்பேன். இந்த நாட்டில் கிராம மக்களுக்கு தங்கத்தை கொடுத்து இரும்பையும் தகரத்தையும் உங்களுக்கு ஒருபோதும் கொடுக்க மாட்டேன்.
இன்று இலங்கையில் சிறுபான்மை என்று ஒரு சமூகம் இல்லை. எல்லோரும் இலங்கை திருநாட்டின் பிள்ளைகள். ஆகவே, நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வோம்.
எந்த நேரத்தில் உங்களது சம்பளம் உயர்த்த வேண்டுமோ அந்த நேரத்தில் நான் உங்கள் சம்பளத்தை உயர்த்துவேன். நான் தொழில் அமைச்சராக இருந்த போது உங்கள் உரிமைகள் தொடர்பாக உங்கள் தலைவர்களுடன் பல தடவைகள் பேசியுள்ளேன்.
எனவே, என்னை நம்புங்கள் நான் உங்கள் தோழன். நான் உங்களைக் காப்பேன். எனவே, வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களித்து, என்னை வெற்றிபெறச் செய்யுங்கள்" என்றார்.
0 commentaires :
Post a Comment