1/24/2010

அரசியல் தீர்வுக்கான கொள்கை கூட்டமைப்பிடம் இல்லை


தமிழ் மக்கள் தங்கள் எதிர்காலம் தொடர்பாகத் தீர்க்கமான ஒரு முடிவுக்கு வரவேண்டிய கட்டம் இப்போது ஏற்பட்டிருக்கின்றது. காலங்கலமாகத் தலைமை வகித்தவர்களின் தவறான செயற்பாடுகள் காரணமாகத் தமிழ் மக்கள் தொடர்ச்சியாகப் பல இன்னல்களை அனுபவித்து வந்தார்கள். புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின் போது ஏற்பட்ட இழப்புகளும் அதற்குப் பிந்திய அகதி வாழ்க்கையும் தமிழ் மக்கள் அனுபவித்த இன்னல்களின் உச்ச கட்டம் எனலாம் இந்த உச்சகட்டப் பாதிப்புக்கு உள்ளான மக்கள் இப்போது இயல்பு வாழ்க்கைக்கு மாறிக்கொண்டிருக்கின்றார்கள். அரசாங்கம் அளித்துவரும் பல்வேறு உதவிகளால் பழைய வாழ்க்கைக்கு அவர்கள் திரும்புகின்றார்கள். மக்கள் உச்ச கட்ட இன்னல்களை அனுபவித்த காலத்தில் இந்தியாவிலும் வேறு நாடுகளிலும் தங்கியிருந்து ‘வாய்ப்பேச்சுப் போராட்டம்’ நடத்தியவர்கள் இப்போது இலங்கை திரும்பி வந்து தாங்களே தமிழ் மக்களின் தலைவர்கள் என்று மீண்டும் உரிமை கோருகின்றார்கள். தமிழ்த் தேசியக் கட்டமைப்பு 2001 பொதுத் தேர்தலுக்காக உருவாக்கம் பெற்றதெனினும் அதைப் புதிய அரசியல் கட்சியாகக் கருத முடியாது. இது புதிய பானையில் பழையபானம். தமிழ்க் காங்கிரஸ் கட்சி, தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்பனவற்றின் தொடர்ச்சியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் தமிழரசுக் கட்சியின் சின்னத்திலேயே தேர்தல்களில் போட்டியிட்டதை இங்கு குறிப்பாகக் கூறலாம். எனவே கூட்டமைப்புத் தலைவர்களுக்கு அறுபது வருட அரசியல் பாரம்பரியம் உண்டு. இந்தத் தலைமையே அறுபது வருட காலமாகத் தமிழ் மக்கள் சார்பில் இனப் பிரச்சினையைக் கையாண்டிருக்கின்றது. அறுபது வருட காலமாக இவர்கள் நடத்திய ‘போராட்டங்கள்’ இனப் பிரச்சினையை நாளுக்கு நாள் வளர்த்திருக்கின்றனவேயொழியத் தீர்க்கவில்லை. தீர்வை விடுவோம். பிரச்சினையின் பரிமாணத்தையாவது குறைக்க முடியவில்லை. இத்தனைக்கும் இக்காலப் பகுதியில் இராணி அப்புக்காத்துகளும் மெத்தப் படித்தவர்களுமே தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்கினார்கள். எனவே பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாமைக்கு இவர்களின் வல்லமைக் குறைவு காரணம் எனக் கூற முடியாது. எத்தனையோ சிக்கலான வழக்குகளில் இத் தலைவர்கள் தங்கள் திறமையைக் காட்டியிருக்கின்றார்கள். இவர்கள் சரியான கொள்கையைக் கொண்டிராததும் பிழையான அணுகுமுறையைப் பின்பற்றியதுமே பிரச்சினையைத் தீர்க்க முடியாததற்கான காரணம். தமிழ்த் தலைவர்கள் நிலையான ஒரு கொள்கையைப் பின்பற்றவில்லை. காலத்துக்குக் காலம் கொள்கையை மாற்றினார்கள். இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தக்கொள்கையும் இல்லாமல் வந்து நிற்கின்றது. தமிழ் மக்களுக்குத் தலைமை வகிப்பதாக உரிமை கோரும் கட்சியிடம் இனப் பிரச்சினையின் தீர்வுக்கு எந்தக் கொள்கையும் இல்லாதிருப்பதை என்னவென்று சொல்வது? அரசியல் தீர்வை அடைவதற்குத் தென்னிலங்கை மக்களின் ஆதரவைப் பெறும் விதத்திலும் இத் தலைவர்கள் நடந்துகொள்ளவில்லை. தமிழ் மக்களின் நலன்களுக்கு விரோதமாகச் செயற்படுகின்ற ஐக்கிய தேசியக் கட்சியுடன் சமரசம் செய்த காலங்களைத் தவிர மற்றைய காலங்களில் சிங்கள மக்களுக்கு எதிரான உணர்வலையைத் தமிழ் மக்களிடம் வளர்ப்பதிலேயே இவர்கள் கவனம் செலுத்தினார்கள். இனப் பிரச்சினையின் தீர்வு சிக்கலாகியதற்கு இதுவும் ஒரு காரணம். இவர்களின் இப்போதைய நிலைப்பாடும் ஐக்கிய தேசியக் கட்சியுடனான வர்க்க சமரசமேயொழிய, தமிழ் மக்களின் நலன் சார்ந்ததல்ல

0 commentaires :

Post a Comment