1/17/2010

ஜனாதிபதித் தேர்தல் ஆணை இட்ட அதிபர் ‘கை’, வேட்டு வைத்த ஜெனரல் ‘துப்பாக்கி’ ….. யார் வெல்வார்கள்?

(சாகரன்)

ஜனவரி 26, 2010 இலங்கையில் நடைபெற இருக்கும் ஜனாதிபதித் தேர்தல் இதுவரையும் நடைபெற்ற தேர்தல்கள் எதனையும் விட மிகவும் முக்கியமான தேர்தலாக இலங்கை மக்களாலும், சர்வ தேச மக்களாலும் பார்க்கப்படுகின்றது. இலங்கையின் சுதந்திரத்திற்கு முன்பேயிருந்து நிலவி வரும் இனங்களுக்கிடையான சமத்துவம் இன்மையான நிலைமைகளால் ஏற்பட்ட உரிமைப் போராட்டம் தமிழ் பேசும் சிறுபான்மை மக்களால் அகிம்சை வழியிலும் அதனைத் தொடர்ந்து ஆயுதப் போராட்ட வடிவிலும் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இதன் தொடர்சியாக ஆயுதப் போராட்டம் புலிகளின் ஏகபோகப் சண்டையாக பரிணமித்து பயங்கரவாதச் யுத்தம் என்ற எல்லைக்குள் தன்னை முடக்கிக் கொண்டது.

ஆரம்பத்தில் தமிழ் பேசும் மக்களின் போராட்டத்தை அனுதாபத்துடனும், ஒரு நியாயாதிக்கத்துடனும் பார்த்து வந்த சர்வதேச சமூகம் புலிகளின் ஜனநாக மறுப்பு, ஏதேச்சாகார நடைவடிக்கைகளின் தொடர்சியாக புலிகளின் போராட்டத்தை ‘பயங்கரவாதப் போராட்டமாக பார்க்கும் நிலைக்கு தன்னை மாற்றிக் கொண்டது. இதன் தொடர்சியாக இலங்கையில் நடைபெறும் யுத்தத்தில் புலிகளின் பிரச்சனை வேறு, தமிழ் பேசும் மக்களின் பிரச்சனை வேறு என்ற பார்வை சர்வதேச அரங்கிலும், இலங்கையிலும் முன்னிலைப்பட்டது. இதனால் தான் புலிகள் தமது கடைசி காலங்களில் புலிகள் வேறு, தமிழ் பேசும் மக்கள் வேறு என்ற உண்மை நிலயான சர்வதேச புரிதலை முறியடிப்பதற்காக புலம் பெயர் நாடுகளில்; காட்டுக் கத்தல் போட்டு வந்தனர்.

இக்கால கட்டத்தில்தான் இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சனை யுத்தத்தை தவிர்த்து, நிறுத்தி பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இணக்கப்பாட்டுடன் தீர்க்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு சர்வதேசத்தின் தலையீட்டு நிலைமைக்கு வந்தது. இதன் தொடர்சியாக இதற்கு தமிழர் தரப்பில் ஏகப்பிரநிதித்துவத்தை தானே வரிந்து கட்டிக் கொண்டு ‘ஆட்சி’ செய்து வந்த புலிகள் தடையாக இருக்கின்றார்கள் என்ற தீர்மானத்தின் அடிப்படையில் புலிகளை ஆயுத அணுகு முறையால் இல்லாமல் செய்ய வேண்டும் என்ற முடிவுகளுக்கு வந்தனர். ரணில் - பிரபா ஒப்பந்தத்தினால் ‘இராஜ தந்திர’ அந்தஸ்து கொடுத்த சர்வ தேசநாடுகள், சமாதானப் பேச்சுக்களிலும், போர்நிறுத்தங்களிலும் புலிகளின் செயற்பாட்டால் குறுகிய காலத்திலேயே புலிகளை பற்றிய புரிந்தலை சர்வதேசம் அறிந்து கொள்ள, புலிகளின் செயற்பாடுகளே காரணமாக இருந்தனர். இதன் தொடர்சியாக புலிகளை ஆயுத ரீதியில் ஒடுக்கிய பின்பு இலங்கை அரசு தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டத்தை முன் வைக்க வேண்டும் என்று எதிர்பார்த்தன சர்வதேசம். இதன் தொடர்ச்சியாக புலிகளை ஆயுத ரீதியில் ஒடுக்க மறைமுக, நேர்முக ஆதரவுகளையும் சர்வ தேசம் இலங்கை அரசிற்கு வழங்கி முன்வந்தன.

தற்போதைய இலங்கையின் ஆட்சி முறையில் ஜனாதிபதியிடம் ‘வீற்ரோ’ வகையிலான அதிகாரங்கள் பெரிதும் மையப்படுத்தப்பட்ட அரசியல் அமைப்பு முறமை இருப்பதினால் ஜனாதிபதித் தேர்தல் தற்போது முக்கியமாக அவதானிக்கப்;படுகின்றது. இதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலும் இதேயளவு முக்கியம் பெற்றதாகவே அமையும். புதிய சட்ட மூலங்களை இயற்றுதல், அமுல்படுத்தல் என்ற வரையறை பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தங்கியிருப்பதினால் பாராளுமன்ற தேர்தலும் முக்கிய இடத்தை வகிக்கப்போகின்றது.

இலங்கைத் ஜனாதிபதித் தேர்தலில் என்றும் இல்லாதவாறு இம்முறை அதிக உச்ச எண்ணிக்கையில் 22 வேட்பாளர்கள் களத்தில் இறங்கியிருக்கின்றன. இதில் 4 வேட்பாளர் இத் தேர்தலில் முக்கிய பாத்திரங்களை வகிக்கின்றனர். அவர்கள் மகிந்த ராஜபக்ஷ, சரத் பொன்சேகா, சிவாஜிலிங்கம், விக்ரமபாகு கருணாரத்ன ஆகியோர் ஆவர். இதில் ஜனாதிபதியாக தெரிவு செய்யக் கூடிய வாய்ப்பு மகிந்த ராஜபக்ஷ, சரத் பொன்சேகா ஆகிய இருவரில் ஒருவருக்கே வாய்ப்புக்கள் இருந்தாலும்;, மற்றய இரு வேட்பாளர்களும், தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அதிலும் குறிப்பாக வட பகுதி தமிழ் மக்கள் மத்தியில் உள்ள வாக்குக்கள் மீது சிறிதளவு ஆதிக்கத்தை செலுத்துவார்கள் என்பதால் முக்கியம் பெறுகின்றனர். மற்றபடி வெற்றி பெறும் தேர்தல் ஓட்டத்தில் தமக்கும் பங்கில்லை என்பதை இவர்கள் இருவரும் ஏற்கனவே கூறியிருந்தாலும், (இது கூறப்படாவிட்டாலும்) அதுவே வெள்ளிடை மலையே.

இனி சரத் பொன்சேகாவிற்கும,;; மகிந்த ராஜபக்ஷவிற்கும் இடையேயான போட்டியை கருத்தில் கொண்டால் மகிந்த ராஜபக்ஷவிற்கான வெற்றி வாய்புக்களே அதிகமாக உள்ளது. அதுவும் மூன்றாம் நிலையில் வாக்குக்களைப் பெறும் வேட்பாளரின் வாக்குக்களை கருத்தில் கொள்ள வேண்டிய தேவையற்ற நிலையில் இது ஏற்படும் என்பதே எமது கணிப்பு. சரத்திற்கு கூடும் கூட்டம் வாக்குக்களை வழங்குவதற்காக கூடும் கூட்டம் என்பதைவிட என்ன சொல்கின்றார் என்பதை வேடிக்கை பார்க்கும் கூட்டம் என்பதே உண்மை நிலை. எதிர் கட்சி பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவின் ‘ஆட்சி மாற்றம் வேண்டும்’ என்ற பொதுவான கருத்தோட்டத்திற்கு மட்டும் இலங்கை மக்கள் செவிசாய்த்து வாக்களிக்க தயார் இல்லை. அதுவும் சரத் பொன்சேகா போன்ற முன்னாள் இராணுவ ஜெனரல் ஒருவரால் விடுக்கப்படும் மாற்றம் வேண்டும் என்ற வேண்டுகோளை இலங்கை பெரும்பான்மை மக்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. தேர்தலில் நிற்கும் வேடபாளர்களில் மகிந்த ராஜபக்ஷவை மாற்றீட செய்ய கூடிய தகுதியில் யாரும் அற்ற நிலையில் மகிந்த ராஜபக்ஷவே சிறந்த தெரிவு என்ற நிலைப்பாட்டில் தமிழ் பேசும் மக்கள், சிங்களம் பேசும் மக்கள் மத்தியில் உள்ள பெரும்பான்மையினரின் முடிவுகள் செய்தே இருக்கின்றனர்

இலங்கை வரலாற்றில் ஐக்கிய தேசியக்கட்சி ஒரு ஜனாதிபதி பொதுத் தேர்தலில் தனது வேட்பாளர் ஒருவரை நிறுத்தாமல் இருப்பது இதுதான் முதல் தடவை. ஐக்கிய தேசியக்கட்சியின் அழிவுப்பாதையின் அடிக்கல்லாக இதை பார்க்க முடியுமா? எம் பார்வையில் ஆம் என்பதே பதில். தற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு நியமனப்பத்திரங்கள் தாக்கல் செய்யும் வரை ஏதாவது திருகுதாளம் செய்து ரணில் விக்கிரமசிங்கா இத்தேர்தலில் போட்டியிடுவதை உறுதிப்படுத்திக் கொள்வார் என்றே எதிர் பார்க்கப்பட்டது. இதற்காக நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளை சரத் பொன்சேகா மீது திணித்து தனது சித்து விளையாட்டைக் காண்பிப்பார் என்றே எதிர் பார்க்ப்பட்டது. ஆனால் அதனை நிறைவேற்ற ரணில் விக்கிரமசிங்காவால் முடியவில்லை. ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரால் முடியவில்லை. இதன் அடிப்படையில்தான் சொல்லுகின்றோம் இது ஐக்கிய தேசியக்கட்சியின் அழிவுப்பாதையை எதிர்வு கூறும் ஒரு நிகழ்வாக அமைகின்றது என்று.

இதற்கான அடிக்கல்லு ரணில் விக்ரமசிங்கா ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையை ஏற்ற நாளிலேயே போடப்பட்டாலும் இதன் வீச்சான நிகழ்வுப் போக்கு மகிந்தாவின் ஜனாதிபதி காலத்தில் இருந்து வேகம் பெற்று வருகின்றது. ரணில் விக்கிரமசிங்கா தனது தலைமைத்துவ காலத்தில் தனது இருப்பை உறுதிப்படுத்த முடியாமல் போனது அவரையும் ஐக்கிய தேசியக்கட்சியையும் இலங்கை அரசியலில் இருந்து அப்புறப்படுத்தும் செயற்பாட்டில் இன்று கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றது. இது இலங்கை அரசு ஏகாதிபத்திய எதிர்பு நிலையில் உறுதியாக வெற்றிகரமாக செயற்பட்டு சுய பொருளாதாரத்தில் தங்கியிருக்கும் ஒரு சுதேசிய அரசை இலங்கையில் கட்டியெழுப்ப உதவப் போகின்றது. இது எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக்கட்சி பிரதிநிதித்துவப்படுத்திய ஏகாதிபத்திய சார்பு நிலை சார்ந்த நிலைப்பாட்டையுடைய ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களை (இவர்களின் எண்ணிக்கை கால ஓட்டத்தில் குறைந்து கொண்டே வருகின்றது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியொன்றாகும்) இடம்மாற்றி வேறு ஒரு கட்சியை தேடும் நிலைக்கு தள்ளிச் சென்றுள்ளது.

சாராம்சம்தில் இது இலங்கையின் எதிர்காலத்திற்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் நன்மை பயக்கும் நிகழ்வாக அமையப் போகின்றது என்று பார்க்கப்படுகின்றது. இதனை ஐனாதிபதித் தேர்தலில்; ஐக்கிய பொதுமக்கள் முன்னணியின் பொது வேட்பாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மகிந்த ராஜபக்ஷவின் வெற்றியால்தான் தற்போது உறுதிப்படுத்த முடியும். மகிந்த ராஜபக்ஷ வெற்றி முழு இலங்கையின் எகாதிபத்திய எதிர்ப்பு நிலைப்பாட்டிற்கு கிடைத்த வெற்றியாக அமையுமிடத்து இலங்கையின் அமைதிக்கும், வளர்ச்சிப்பாதைக்கும், சமாதானத்திற்கும் இது திறவு கோலாக அமையலாம்.

குpழக்கின் தமிழ் பேசும் (தமிழ் , முஸ்லீம்) மக்களும், வடக்கு முஸ்லீம் மக்களும் மிகப் பெரும்பான்மையளவில் மகிந்தாவிந்கு தமது விருப்பு வாக்குக்களை செலுத்த எப்பவோ தயாராகிவிட்டனர். வடக்கில் வாழும் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தேர்தலில் அவ்வளவு ஆர்வம் காட்டாத போதும் வாக்களிக்க போகும் மக்களில் பெரும்பான்மையினர் ஜெனரல் சரத் பொன்சேகாவை தமது தெரிவாக கொள்ளமாட்டார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவிற்கு நேரடியாக ஆதரவு தெரிவிக்கும் நிலைமை ஏற்பட்டாலும் இம் முடிவில் மாற்றம் ஏதும் இருக்கப் போவதில்லை. (தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக முடிவெடுத்திருக்கின்றார்கள்)

ஆனால் மகிந்த ராஜபக்ஷ, சரத் பொன்சேகா இருவரையும் ஏற்கமுடியாத மனநிலையில் உள்ள வடபகுதி மக்கள் சிறப்பாக யுத்தத்தின் இறுதிக்காலகட்டத்தில் முள்ளிவாயகாலில் மாட்டுப்பட்ட வன்னி மக்கள் தமது வாக்குகளை தவிர்க்க முடியாமல் சிவாஜிலிங்கத்திற்கு வழங்குவர். மற்றபடி தென்பகுதியில் உள்ள சிங்களம் பேசும் மக்களைப் பொறுத்தவரையில் சரத்தின் ஆட்சி மாற்றக் கோஷத்தைவிட மகிந்த சகோதரரின் ஆட்சியை விரும்புகின்றனர். இதற்கான முக்கிய காரணம் புலிகளை இல்லாது செய்ததற்கான அரசியல் தலைமை கொடுத்தது, இலங்கையின் அபிவிருத்தி, இலங்கையில் வெளிநாட்டுக் கொள்கை என்பனவற்றை சிறப்பாக கூறலாம். சரத் பொன்சேகாவை தாங்கிப்படிக்கும் இரு ‘கைத்தடி’ களும் ஓரு அளவில் இல்லை, இரு வேறு வேறு கோணலான ‘சொத்தி’ தடிகள். அவரின் அரசியல் புது முக தோற்றமும் வெளிநாட்டுக் கொள்கையும் அமெரிக்காவின் சொற்படி தேர்தலில் நிற்கின்றார் என்ற எண்ணமும் சிங்கள மக்களை சரத் பொன்சேகாவிடம் இருந்து சற்றே தள்ளியே நிற்கச் செய்யும், செய்கின்றன. ஜேவிபியின் வாக்கு வங்கி ரொம்பவே சரிந்துள்ள நிலையில் அது பெயரளவில் சரத்திற்கு உதவப் போவதில்லை. ஆனால் ஐக்கிய தேசியக்கட்சியின் வாக்கு வங்கி கணிசமான அளவில் சரத்திற்குத்தான் போகப் போகின்றது. ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளர்களுக்க வேறு வழியும் இல்லை.

கொழும்பு வாழ் முதலாளிமார்கள், அவர்களைச் சார்ந்தவர்களின் வாக்குக்கள் கடந்த காலங்களைப் போலல்லாது தற்போது அரைக்கரைவாசி மகிந்தாவிற்கும், சரத்திற்கும் பிரிந்து செல்லக் கூடிய வாய்ப்புக்களே இருக்கின்றனர். கடந்த காலங்களில் இவர்கள் தமது வாக்குக்களை ஏகாதிபத்தியம் சார்ந்து நிற்கும் கட்சியிற்கு பெரும்பான்மையாக வழங்கி வந்தது உண்மை. தற்போது உலகில் ஏற்பட்டுவரும் ஏகாதிபத்தியங்களின் பொருளாதார சரிவு நிலையும் சீனா, இந்தியா போன்ற நாடுகளில் ஏற்பட்டுவரும் பொருளாதார வளர்ச்சி நிலையும் இவர்களுடன் நட்பில் இருக்கும் மகிந்தாவை ஆதரிக்கவே செய்யும் என்பது தான் உண்மை.

இன்னொரு வகையிலும் இவ் ஜனாதிபதித் தேர்தல் முக்கியம் பெறுகின்றது. இது ஜேவிபி இற்கும் மரணசாசனம் எழுதும் நிகழ்வாக அமையப் போகின்றது. சரத் பொன்சேகாவை ஜேவிபி ஆதரிப்பதற்கான காரணம் எதுவையும் அவர்களால் முன்வைக்க முடியாத அரசியல் வங்குரோத்துதனத்தை அடைந்துள்ளதையும் இலங்கை மக்களுக்கு தம்மை தாமே வெளிச்சம் போட்டுக் காட்டி நிற்கின்றனர்.

மகிந்தாவின் வெற்றி ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட வெற்றியாக எதிர்பார்க்கப்பட்டாலும் அது இலகு வெற்றியாக அமைய மாட்டாது என்ற செய்திகள் வந்த கொண்டே இருக்கின்றன. இதற்காக ஊடகங்கள் கூறும் காரணங்கள் மகிந்த சகோதரர்களின் சில ‘நடவடிக்கைகள்’ பற்றிய சிங்கள மக்களின் சில நியாயமான குற்றச்சாட்டுக்களும், ஆட்சி மாற்றம் வேண்டி நிற்கும் இலங்கை மக்களும் என் செய்திகளை வெளியிடுகின்றன.

மகிந்தாவின் ஆட்சி அமைந்த பின்பு மகிந்த சகோதரர்களின் சொத்துக்கள் பெருகிக்கொண்டன என்ற செய்தி ஒன்று. இரண்டாவது பத்திரிகைகளின் கருத்துச் சுதந்திரத்தை அரசு கையாளும் விதம் பற்றியது. மாறாக மகிந்தவின் வெற்றிக்கு காரணமாக அமையப் போவது தமிழீழ விடுதலைப் புலிகளை வெற்றி கொண்டது இதனைத் தொடர்ந்து வரும் சமாதான நோக்கத்தை கட்டியம் காட்டும் அமைதி நிலமைகள், இயல்பு வாழ்க்கை நிலமைகள். நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றகரமாக எடுத்துத் செல்லும் அபிவிருத்தி திட்டச் செயற்பாடுகள். வெளிநாட்டுக் கொள்கையில் ஏகாதிபத்திய எதிர்ப்புடன் கூடிய ஜனநாய சோசலிச நாடுகளுடன் உறவு என்பனவாகும்.

மறுபுறத்தில் சரத் பொன்சேகாவிற்கு கிடைக்கும் வாக்குக்கள் ‘எங்களில் ஒருவர் ஜெனரல்’ என்ற கோதாவில் இராணுவத்தனர் மட்டத்தில் இருந்தே கூடுதலாக கிடைக்கப் போகின்றது. அடுத்ததாக இலங்கையில் வாழும் ஏகாதிபத்திய ஆதரவு முதலாளிகளின் வாக்குகள். இவ்விரு தரப்பினரிடமும் தமிழ் மக்களுக்கான உரிமை மறுப்பு என்ற கருத்துருவம் மேலாதிக்கம் மேலோங்கி இருக்கக் காணப்படும். இவ் நிலைப்பாட்டை சிங்கள மக்கள் மத்தியில் உறுதி செய்ய சரத்தின் சகாக்களான ஜேவிபி, ஐக்கிய தேசிய கட்சிகளின் இனப்பிரச்சனையை தீர்ப்;பதற்கான ஒத்துழையாமை என்ற செயற்பாடு நிறையவே உதவி செய்யும். இவற்றிற்கு அடுத்த படியாகத்தான் ஜேவிபி வாக்கு வங்கியும், இதன் தொடர்சியாக ஐக்கிய தேசிய கட்சியினது வாக்குக்கு வங்கிகியும் அமையப் போகின்றன. இவ்விரு வாக்கு வங்கிகளும் கடந்த 15 வருடங்களாக குறைந்து கொண்டே வருகின்றன என்பதே உண்மை நிலையாகும்.

(வடக்கு) தமிழ் பேசும் மக்களின் வோட்டு இத்தேர்தலில் வெற்றியைத் தீர்மானிக்கும் வாக்குகளாக அமையுமா? என்றால் இல்லை என்பதே பதில். கிழக்கு மாகாண மக்களில் பெரும்பான்மையினர் மகிந்தாவிற்கு ஆதரவாக வாக்களிக்கும் அதே நேரம், வடக்கு மக்கள் (இதிலும் சிறப்பாக வன்னி மக்கள்) பெரும்பான்மையினர் தேர்தலில் அக்கறை இன்மையுடன் செயற்படப் போகின்றனர். வாக்களிக்கப்படும்; வடக்கு மக்களின் வாக்குக்களின் பெரும் பகுதி மகிந்தாவிற்கே ஆதரவாக இருக்கப் போகின்றது. ஒரு வேளை சரத் பொன்சேகாவிற்கு பதிலாக ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிட்டிருந்தால் வடபகுதி மக்களின் வாக்குகளில் பெரும்; பகுதி தமிழர்களின் ‘நண்பன்’ ரணிலுக்குத்தான் கிடைக்கக் கூடிய வாய்பிருந்திருக்கும்;. வடபகுதி மக்களை பொறுத்தவரையில் ஜனாதிபதியா? (முன்னாள்)இராணுவத்தளபதியா? என்றால் அது ஜனாதிபதியே எமது தெரிவு என்ற நிலமையே நிலவுகின்றது.

கடந்த 5 ஜனாதிபதித் தேர்தலிலும் வடபகுதி மக்கள் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையில் அமைந்த இடதுசாரிக் கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளருக்கே பெரும்பான்மை வாக்குக்கள் கிடைத்ததை புள்ளி விபரங்கள் காட்டி நிற்கின்றன. காரணம் சமாதானத்தை கிழக்கு மக்கள் மட்டும் அல்ல வடக்கு மக்களும் வேண்டி நின்றதே காரணம். இதன் உச்சக்கட்டத்தை நாம் சந்திரிகா அம்மையாருக்கு தமிழ் மக்கள் வாரி வழங்கிய அமிர்தமான ஆதரவில் கண்டு நின்றோம். மலையக மக்கள், முஸ்லீம் மக்களைப் பொறுத்தவரையில் இம்முறை தமது பெரும்பான்மை வாக்குகளை மகிந்த ராஜபக்ஷவிற்கு வழங்குவார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான வேலைகளை முஸ்லீம் கட்சிகளும், மலையக கட்சிகளும் கிழக்கில் கருணா, பிள்ளையான் போன்றவர்கள் செய்வதைப் போலவே செவ்வன செய்தே முடிப்பர். இதிலும் சிறப்பாக மலையக தமிழ் பேசும் மக்களின் வாக்கு இம்முறை தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தியாக அமையப் போகின்றது. மலையக கட்சிகள், தொழிற் சங்கங்களில் மகிந்த ராஜபக்ஷவிற்கு அதிகளவு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் சரத் பொன்சேகா தலையில் துண்டை போடும் நிலையே மலையகத்தில் உள்ளது.

சற்றே இனவாதம் தூக்கலாக உள்ள சிங்கள மக்களின் வாக்குகள் மட்டுமே சரத் பொன் சேகாவின் வாக்கு வங்கியாக அமையப் போகின்றது. அதுவும் நகர்புறம் சார்ந்த பகுதிகளில் இது சற்று தூக்கலாக காணப்படும். இது வர்க்க நலம் சார்ந்த ஆதரவுச் செயற்பாடுகளின் வெளிப்பாடாகும்.

கடந்து வந்த 35 வருடகால ஆயுதப் போராட்டங்கள் மூலம் சிங்களம் பேசும் மக்கள் கற்று?, கண்டு வந்த பாடம் சரத் பொன்சேகாவிற்கு தேவையான இனவாத சக்திகளின் வாக்கு வங்கியை குறைத்திருக்கின்றது என்பது சந்திரிகா, மகிந்தா, மீண்டும் மகிந்தாவின் வெற்றி மூலம் மீண்டும் நிரூபிக்கப்படும்? இதன் தொடர்சியாக ஐக்கிய தேசியக் கட்சியின் இருப்பு கேள்விக்குறியாகும். தமிழர் தரப்பில் இல்லாமல் போய் கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இருப்பும் இல்லாமலே போய்விடும், போய்விட வேண்டும். தேர்தலுக்கு முன்பே கேள்விக் குறியாகிவிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்த நிலமை மகிந்தவின் வெற்றியின் மூலம் உறுதி செய்யப்படும். உறுதி செய்யப்பட வேண்டும். இதில் சில உதிரிகள் பதவிக்காக மகிந்தாவின் காலில் விழ ஏற்கனவே தயாராகி விட்டனர். இவர்கள் பாராளுமன்ற நாற்காலிக் கனவுகளை நிஜமாக்க தேசியப்பட்டியலில் இடம்பெற முயல்வர்.

தமிழ் மக்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கி வந்த தமிழ் இனவாதம் தனது 60 வருடகால வரலாற்றில் இன்று உலர்ந்து உதிர்ந்து சாவு மணி அடித்துக் கொள்ளும், தமிழ் பேசும் மக்களின் ‘புதிய’ தலைமைகள் இதற்கு ஆவன செய்ய வேண்டும். இவ் இடையிட்ட சில காலம்? தமிழ் இனவாதம் வேறு வடிவில், வேறு பெயரில் உயிர் வாழ முயற்சிக்கும். அது அனேகமாக ‘தமிழ்’ என்ற சொல்லில் ஆரம்பிக்கும் தமிழ் அரசுக் கட்சியாகவேனும் இருக்கலாம்? அல்லது வேறு ஒரு வடிவமாகவும் இருக்கலாம். நாடு கடந்த தமிழீழம் வடக்கு கிழக்கில் இனி வாழாது, புலம் பெயர் நாடுகளில் சிலகாலம் வாழும்?

சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரசன்னம் தீமைகளிலும் சில நன்மைகளை ஏற்படுத்தியே இருக்கின்றது என்பதுவும் மறுக்க முடியாததுதான். அண்மைக் காலங்களில் நடைபெற்று வரும் உயர் பதவிகளுக்கு முன்னாள் இராணுவ மேலதிகாரிகளை நியமித்தல் என்ற மகிந்தாவின் அதீத செயற்பாட்டிற்கு அது ஒரு மூக்கணாங் கயிற போட்டுள்ளது. மேலும் இலங்கையில் ஓர் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த வேண்டிய தேவைகளை மேலும் உறுதி செய்யப் போகின்றது. சர்வ தேச (சிறப்பாக மேற்குலக) நாடுகளின் ‘குற்றவாளிக் கூண்டில் மகிந்த அரசு’ என்ற மிரட்டல் மகிந்த அரசை தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரச்சனைக்கு ஒரளவேனும் ஒரு நியாயமான தீர்வுத்திட்டத்தை வழங்கி அதனை அமுல்படுத்தல் என்பதில் நழுவ விடாமல் கட்டிப்போட்டு விட பெரிதும் உதவத்தான் போகின்றது.

மறுபுறத்தில் மேற்குலக நாடுகளின் குற்றவாளிக் கூண்டு மிரட்டலுக்கு அடிபணியாது நிற்க ஜனநாக சோஷலிச நாடுகளின் அரவணைப்பு மகிந்தாவிற்கு நிச்சயம் தேவை. இதற்கு தமிழ் மக்களின் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்ற விடயம், புதிதாக அமையப் போகும் அரசின் நிகழ்ச்சி நிரலில் முக்கிய அம்சமாக இணைக்கப்பட்டு செயற்படுத்தப்பட வேண்டும். இதில் இந்தியாவின் பங்கு நிச்சயம் கணிசமாக அமையவேண்டும் என்பது தவிர்க்க முடியாதது ஆகும். இலங்கை ஒரு நாடாக இருத்தல் என்பது இந்தியாவின் தேவையும் கூட. இலங்கை ஒரு நாடாக இருத்தல் என்பது தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரச்சனை நியாயமாகத் தீர்க்கப்படுதல் என்பதிலேயே தங்கியுள்ளது என்பதை இந்திய அரசுக்கும் தெரியும். இவையே தமிழ் பேசும் மக்களின் வெற்றியாக அமைய இன்றைய தேவையான மகிந்தாவின் ஜனாதிபதி தேர்தல் வெற்றியாக அமையப் போகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு பகுதியினர் தவிர்ந்த ஏனைய தமிழ் கட்சிகள் மகிந்தாவிற்கு நிபந்தனையற்ற ஆதரவை அளிக்க முன் வந்ததை சர்வ தேசம் சும்மா பார்த்துக் கொண்டு இருக்கும் என்று சொல்ல முடியாது. இதே போல் மலையக, முஸ்லீம் கட்சிகளின் ஏகோபித்த? ஆதரவும் பார்க்கப்படும். இவையெல்லாம் தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வில் உள்ள நியாயத்தன்மைகளை உறுதிப்படுத்த உதவும், தீர்த்து வைக்க உதவும். வரலாறு எமக்கு கற்றுத் தந்த பாடங்கள் இவை.

மாறாக சரத் பொன்சேகா தற்செயலாக ஜனாதிபதித் தேர்தலில் வென்றால், இவையெல்லாம் இல்லாமல் போய் மீண்டும் ஒரு ‘கண்டியாத்திரை’ கால கட்டமோ அல்லது ஏன் ஜேஆர் இன் ஆட்சிக்கால கட்டமோ ஏற்பட வாய்புக்கள் நிறையவே உண்டு. கூடவே புலிகளினால் வற்புறுத்தி தம்முடன் சேர்த்து வைக்கப்பட்டு தற்போது புலிகள் என இனம் காணப்பட்டு விஷேட தடுப்பு முகாங்களில் இருப்பவர்களின் உயிர்களுக்கான உத்தவாதம் கேள்விக் குறியாக்கப்படும். இது மிரட்டல் அல்ல எச்சரிக்கை, ஏன் வேண்டுகோளாக கூட கொள்ளலாம். பிரேமதாசா காலத்தில் ஜேவிபி சிங்கள இளைஞர்களுக்கு ஏற்பட்ட நிலமைகள் சிறப்பு தடுப்பு முகாமில் தடுப்புக்காவலில் உள்ள தமிழ் சிறார்களுக்கு ஏற்பட வாய்ப்புக்கள் சரத் பொன்சேகாவின் ஜனாதிபதிக் கதிரையில் நிறையவே இருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை.

இரண்டு தோணிகளில் கால் பதித்து கட்சியற்று இயங்கும் 40 நாள் அரசியல்வாதி ஜெனரல் சரத் பொன்சேகாவின்; சுத்த இராணுவக் கண்ணோடமும், ‘தமிழர்களும் முஸ்லீம்களும் இலங்கைக்கு வந்த விருந்தாளிகள் நாம் கொடுப்பதை வாங்கிக் கொண்டு சும்மா இருக்க வேண்டும்’ என்ற பேச்சுக்களும் இதனையே கட்டியம் காட்டி நிற்கின்றன. கம்போடியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மார்(பர்மா) போன்ற பல நாடுகளில் நாம் கண்ட, காணுகின்ற இராணுவ ஜெனரல்களின் ஆட்சிகளில் நாம் பாடங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் அன்றேல் மீண்டும் ஒரு செல்வநாயகம் போன்ற கிழவன் மீண்டும் சொல்லும்; ‘தமிழர்களை கடவுள்தான் காப்பாற்றவேண்டும்’ என்ற நிலைமைகளை எம்மால் தவிர்க்க முடியாமல் போய்விடும்.

இதே இராணுவ ஆட்சி அனுபவங்களை தவிர்க்க, தடுத்த நிறுத்த ஜேவிபி யின் ‘இடதுசாரி’ சந்தர்பவாதம் நிச்சயமாக போராடப் போவதில்லை. ஜேவிபி இன் அரசியல் தூய்மைவாதமும், தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக தாக்குதல் எதனையும் செய்யவில்லை என்ற இரண்டையும் மட்டும் வைத்துக் கொண்டு வெறுங்கையால் முழம் போட முடியாது என்பதை தமிழ் மக்கள் மத்தியில் மட்டும் அல்ல, சிங்களம் பேசும் மக்கள் மத்தியில் ஜேவிபி யை தோலுரித்துக் காட்டிவிட்டது. இதுவே அவர்களின் சரிவிற்கும், பிரிவிற்கும் முக்கிய காரணமாகும். விமல் வீரவன்ச போன்றவர்களின்; வேறு வழிசென்ற உடைவு, ஜேவிபி இனரின் பிரிக்க முடியாத கொள்கை பிடிப்புள்ளவர்கள் என்ற இமேஜை உம் இல்லாமல் செய்து விட்டது. தமிழ் பேசும் மக்களுக்கென்று பிரத்தியேகமான பிரச்சனை இல்லை என்ற நிலைப்பாடு தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இருந்த ஜேவிபி சம்மந்தமான ‘இடதுசாரிகள்’ என்ற பார்வையும் இல்லாமல் செய்துவிட்டது. அது மட்டும் அல்லாமல் வடக்கு கிழக்கு பிரிப்பிற்கான நீதிமன்றம் சென்று வழக்காடி இணைந்திருந்ததை பிரித்ததில் காட்டிய வேகம் எதனையும் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வுத் திட்டம் வரைதலில் காட்டவில்லை என்பதினால் இவர்களை சாதாரண இனவாதிகள் பட்டியலில் சேர்க்க ஏதுவாக அமைந்து விட்டது. இவை எல்லாவற்றையும் உறுதி செய்யும் நிகழ்வாக ஜேவிபி யின் பொது வேட்பாளராக அமெரிக்கா ஆசீர்வதித்த சரத் பொன்சேகாவை ஜனாதிபதி வேட்பாளராக ஏற்று செயற்படும் நிலமைகள் ஏற்படுத்தியிருக்கின்றன.

முதலாவதாக ஜனாதிபதித் தேர்தலில் அரசுத் தலைவரா? இராணுவத் தலைவரா? என்ற பார்வையே தமிழ், சிங்களம் பேசும் மக்கள் மத்தியில் முதன்மை பெறப் போகின்றது. இராணுவ ஜெனரலை எச்சரிக்கையுடன் பார்க்கும் நிலைமைகளே மேலோங்கி நிற்கின்றது. ஆசிய நாடுகளில் இராணுவ ஜெனரல்களின் ஆட்சி பற்றி படிப்பனைகள் இலங்கை மக்களுக்கும் இருக்கின்றது.

இரண்டாவதாக புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றி, தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு என்ற இரு பெரும் விடயங்கள் ஜனாதிபதித் தேர்தல் வெற்றியை தீர்மானிக் போகின்றது. யுத்தத்தின் வெற்றியின் வடுக்கள், தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வில் ‘நியாயத் தன்மை’ கள் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் யாருக்கு வாக்களித்தல் என்ற தீர்மானம் எடுக்கும் விடயங்களாக அமையும். மறுபுறத்தில் யுதத்த்தில் புலிகள் தோற்கடிக்கப்பட்டது, தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டம் நாட்டை பிளவுபட அடிகோலக்கூடாத அளவிற்கு ‘கஞ்சத்தனம்’ ஆக அமைதல் சிங்களம் பேசும் மக்கள் மத்தியில் யாருக்கு வாக்களித்தல் என்ற தீர்மானம் எடுக்கும் விடயங்களாக அமையும்.

மூன்றாவதாக இலங்கையின் அபிவிருத்தி திட்டங்கள் (தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரையில் வடக்கு கிழக்கின் அபிவிருத்தி திட்டம்), வெளிநாட்டுக் கொள்கையில் ஏகாதிபத்திய சார்பு, எதிர்பு என்பன யாருக்கு வாக்களித்தல் என்ற தீர்மானம் எடுக்கும் விடயங்களாக தமிழ், சிங்களம் பேசும் மக்கள் மத்தியில் அமையும்.

இவ் மூன்று விடயங்களிலும் மகிந்த ராஜபக்ஷ தனக்கான அதிக ஆதரவுத்தளத்தை தமிழ், சிங்களம் பேசும் மக்கள் மத்தியில் பலமாக கொண்டுள்ளார் என்பதே எமது ஆய்வு. எனவே 2010 ஜனாதிபதித் தேர்தல் மகிந்த ராஜபக்ஷவின் இன்னும் ஒரு ஆட்சிக்காலத்திற்கான வாய்புக்களையே வழங்கப் போகின்றது. இது தமிழ் பேசும் மக்களுக்கும் ஏன் சிங்களம் பேசும் மக்களுக்கும் ஒப்பீட்டளவில் நன்மை பயக்கும் விடயமாகத்தான் அமையப் போகின்றது.

(சாகரன்) (தை 16, 2010)


0 commentaires :

Post a Comment