1/24/2010

மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்க வேண்டியது இலங்கை குடிமக்கள் ஒவ்வொருவரதும் தேசிய கடமையாகும் .*** ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி-

2010 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும். சுமார் முப்பது ஆண்டுகால உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் நடைபெறுகின்ற தேர்தல் இதுவாகும். இதுவரைகால யுத்தகெடுபிடிகளுக்குள் எமது தேசத்து மக்கள் எல்லோரும் தேர்தல்களில் சுதந்திரமாக பங்கெடுக்க முடியவில்லை. குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்களுக்கு அந்தவாய்ப்புக்கள் பகிஸ்கரிப்புக்கள் எனும் பெயரில் மறுக்கப்பட்டு வந்தது. அதிலும் புலி பயங்கரவாதிகளின் கட்டுபாட்டு பிரதேசங்களான வன்னி, வாகரை, மற்றும் படுவான்கரை மக்கள் துப்பாக்கி முனையிலேயே வாழ்ந்துவந்தனர். இத்தகைய நிலைமைகள் அனைத்தும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டபின்னர் நடைபெறவிருக்கின்ற தேர்தலாக இந்த ஜனாதிபதி தேர்தல் அமைந்திருக்கின்றது. இலங்கையின் எந்த ஒரு மூலையிலும் வாழுகின்ற மக்கள் அனைவரும் தமது ஜனநாயக உரிமையான வாக்குரிமையை பயன்படுத்தும் வாய்ப்பு பல தசாப்தங்களுக்கு பின்னர் ஏற்பட்டுள்ளது. இதுவரைகாலமும் வடக்கு, கிழக்கு மக்கள் இத்தகைய வாய்ப்பின்றி வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர். அதன் காரணமாக பலவித இழப்புகள் எமது மக்கள் எதிர்கொள்ள நேர்ந்தது. அபிவிருத்தி, வேலைவாய்ப்புகள் ...... போன்ற பலவித வசதி வாய்ப்புகளை பெற்றுகொள்ள முடியாத நிலை தொடர்ந்தது. ஆனல் இந்த ஜனாதிபதி தேர்தலினூடாக தமது “அரசியல் உரிமை” யையும் “தேர்வுச் சுதந்திர” த்தையும் உறுதிசெய்துகொள்ளும் சூழநிலை உருவாகியுள்ளது. எனவே இத்தேர்தலில் எமது நாட்டு மக்கள் அனைவருக்கும் முழுமையாக பங்கெடுக்கும் கடப்பாடு உண்டு என்பதை எமது முன்னணி வலியுத்தவிரும்புகிறது.
இத்தகைய மாற்றங்களுக்கு வழிவகுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே இந்தேர்தலின் முன்னணி வேட்பாளர்களில் ஒருவராகவுள்ளார். அவருக்கு போட்டியாக எதிரணிகள் சார்பில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா போட்டியிடுகின்றார். ஐ.தே.கட்சியே இவரை வழிநடாத்துகின்றது. இந்த ஐக்கிய தேசியக் கட்சியே இனவாத அரசியலின் பிறப்பிடமாகும். ஒரு லட்சம் மலையக மக்களின் வாக்குப் பறிப்பில் இருந்து யாழ் நூலக எரிப்பு வரையில் ஐ.தே.கட்சியினாலேயே நடத்தப்பட்டது. ஒவ்வொரு இனக்கலவரங்களும் இனப்படுகொலைகளும் ஐ.தே.கட்சி ஆட்சிக்காலத்திலேயே நடந்தேறின. தமிழ் பிரிவினைவாதமும், ஐ.தே.கட்சியின் இனவாத ஆட்சியும் ஒன்றில் ஒன்று தங்கிவாழ்ந்தவை. இதன்காரணமாகவே இன்று இந்த ஐ.தே.கட்சி முன்மொழிந்த வேட்பாளரான சரத் பொன்சேகாவை தமிழ் கூட்டமைப்பும் ஆதரிக்க முன்வந்துள்ளது. கடந்த ஐம்பது வருடகாலமாக தமிழ் பேசும் மக்களின் அரசியல் தலைவிதியை நிர்ணயித்து வந்த தமிழரசுக் கட்சியின் வாரிசுகளான கூட்டமைப்பினரே தமிழ் மக்களின் கடந்தகால துன்பங்களுக்கு காரணமானவர்களாகும். இன்னும் இன்னும் தமிழ் மக்களுக்கு வழிகாட்ட இவர்களுக்கு எந்தவித அருகதையும் கிடையாது. கூட்டமைப்பினரின் வேண்டுகோளை தமிழ் மக்கள் மிகக் கடுமையாக நிராகரிக்க வேண்டும். இன்று ஏற்பட்டுள்ள மாகாண ஆட்சிமுறை ஒன்றை வடமாகாணத்துக்கும் உருவாக்குவதற்கு ஜனாதிபதி ராஜபக்சவின் மீள்வரவு அவசியமானதொன்றாகும். எமது மக்களின் அமைதியான வாழ்வும், அபிவிருத்திகளும் தொடரவேண்டியது இன்றியமையாததாகும். சரத்பொன்சேகா ஆட்சிக்கு வந்தால் மீண்டும் இனவாத ஆட்சிமுறையும், அதற்கெதிரான தமிழ் பயங்கரவாதமும் தலைதூக்குவது நிட்சயம். இன ஐக்கியம் மீண்டும் சீர்குலைக்கப்பட்டு இலங்கையின் ஸ்திரமற்ற ஆட்சியொன்றை ஏற்படுத்துவதே ஏகாதிபத்தியங்களின் இன்றைய தேவையாக உள்ளது. அதற்காக தீPட்டப்பட்டுள்ள சர்வதேச சதி பற்றி நாம் கவனம் கொள்ளவேண்டியுள்ளது. எமது நாட்டின் ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான தேர்தலில் இன, பிராந்திய அணுமுறைகளுக்கப்பால் நாம் ஒவ்வொருவரும் இலங்கையர்கள் என்கின்ற யதார்த்ததை ஒருபோதும் புறக்கணித்துவிட முடியாது. எனவே கருத்து வேறுபாடுகள், கட்சி வேறுபாடுகள் அனைத்தையும் தாண்டி எமது தேசத்தின் நலனுக்காக ஒன்றுபட வேண்டிய தருணமாக நாம் இந்த ஜனாதிபதித் தேர்தலைக் கருதுகின்றோம். அரசியல் பாரம்பரியமற்ற ஒரு இராணுவத்தலைமையை இலங்கையின் ஐனாதிபதியாக்கி. சர்வதேச ஆயுத வியாபாரிகள் மீண்டும் இலங்கைத் தீவை ஆயுத மயமாக்கலுக்கு உட்படுத்த நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே எமது தேசத்தின் அமைதியை விரும்புகின்ற, எமது நாட்டு மக்களின் இன ஒற்றுமையை விரும்புகின்ற, இ;றைமையை காக்க விரும்புகின்ற ஒவ்வொருவரும் ஜனாதிபதி ராஜபக்கவை ஆதரித்தே ஆகவேண்டும். எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களித்து மீண்டும் அவரை ஐனாதிபதி ஆக்க வேண்டியது எமது தேசத்து குடிமக்கள் ஒவ்வொருவரினதும் தேசிய கடமையாகும் என ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணியினராகிய நாம் கருதுகின்றோம்.

ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி
23-01-2010
kilakku@hotmail.com

0 commentaires :

Post a Comment