இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டுமென்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளதாகவும், இந்தியாவிடம் உறுதியளித்துள்ளவாறு, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் ஒரு தீர்வுத் திட்டமொன்றை ஜனாதிபதி முன்வைப்பாரென்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் முடிவுற்றதும் அனைத்துச் சிறுபான்மை கட்சிகளையும் இணைத்துக் கொண்டு இதற்கான அழுத்தத்தை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பிரயோகிக்குமென்று காங்கிரஸின் தலைவர் - பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.
ஆகவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துச் சிறுபான்மை மக்களும் ஜனாதிபதியை பெரும்பான்மைப் பலத்துடன் வெற்றி பெறச் செய்ய வேண்டும். அப்போது ஜனாதிபதி இனப் பிரச்சினைக்கான ஓர் அரசியல் தீர்வை முன்வைப்பாரென்று பிரதியமைச்சர் கூறினார்.
“வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்ப்பதை விடுத்து பெரும்பான்மை பலத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைத் தேர்ந்தெடுத்து, தீர்வுக்கான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும். அவர்கள் இதுவரை அனுபவித்த துன்பம் போதும். இந்தத் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்தவே மீண்டும் வெல்வார். புதியவரால் எதனையும் செய்ய முடியாது.
1948 ஆம் ஆண்டு மலையக மக்களுக்கு எதிராகப் பிரஜாவுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது, வடக்கு, கிழக்கின் ஒரு சில அரசியல்வாதிகள் இதற்கு ஆதரவாகச் செயற்பட்டார்கள்.
அதனால், மலையக மக்கள் 40 வருட காலம் பிரஜாஉரிமை இன்றிப் பின்தள்ளப் பட்டார்கள். காங்கிரஸிலிருந்த அசீஸ் போன்ற வர்களும் மாறாகச் செயற்பட்டார்கள். பின்னர் காங்கிரஸ் அந்தத் தவறினைத் திருத்தி மீளக் கட்டியெழுப்பி மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் மார்க்கத்தைக் கண்டது. இந் நிலையில், வடக்கு, கிழக்கு மக்கள் இந்தத் தருணத்தில் தவறிழைத்துவிடக் கூடாது. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வைப் பெறும் செயற்பாடுகளில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பின்வாங்காது” எனப் பிரதியமைச்சர் சிவலிங்கம் தெரிவித்தார்.
தேர்தலின் போது தமது சுயலாபத்திற்காக கட்சி தாவிச் செல்பவர்கள் பல கதைகளையும் கூறுவார்கள். அதனைத் தமிழ் மக்கள் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று சுட்டிக்காட்டிய அவர், “இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எப்போதுமே சரியான முடிவையே எடுக்கும். கட்சி மாறுவதற்கு காரணம் கூறுவதற்காக எவரும் எதனையும் செய்வார்கள்.
அதனை மக்கள் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை” என்றும் மேலும் குறிப்பிட்டார்
0 commentaires :
Post a Comment