1/18/2010

இலங்கைப் பயணம்: நேர்காணல்



பிரான்சிலுள்ள இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னனியின் தலைவர் தேவதாசன் அவர்கள் அண்மையில் இலங்கை சென்று வந்தார். அச்செய்தியறிந்து ‘மற்றது’ சஞ்சிகையின் ஆசிரியர் கற்சுறா அவர்கள் கேட்டுத் தெரிந்து கொண்டவை.

கற்சுறா:- தங்களது இலங்கைப் பயணத்திற்கான அடிப்படை நோக்கம் என்னவாக இருந்தது? எவ்வளவு காலம் அங்கிருந்ததீதீர்கள்?thevathasan

தேவதாசன்: மே பதினெட்டு 2009க்கு பின்பான இலங்கை அரசியல் சூழல் எவ்வாறு உள்ளது என்பதை அவதானிக்கவும். முப்பது வருட ஆயுதப் போராட்டத்தின் முடிவிற்குப்பின்னாலான தமிழ் மக்களின் மனோ நிலையை தெரிந்து கொள்ளவும், குறிப்பாக தலித் சமூக மக்களின் வாழ்வியல் சூழல், அவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சமூக அழுத்தங்களை அறிவதே எனது பிரயாணத்தின் முதன்மை நோக்கமாக இருந்தது. ஒரு மாத கால குறுகிய அவகாசமாகவே எனது பிரயாணம் அமைந்தது. மேலும் கணிசமான பணிகளை மேற்கொள்வதற்கு குறைந்தது மூன்று மாதங்களாவது தங்கியிருக்க வேண்டும்.

கற்சுறா: வன்னி மக்களை இலங்கை அரசு அகதி முகாம்களில் தடுத்து வைத்திருப்பது குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்கள் ஊடகங்களாலும், ஜனநாயக முற்போக்கு சக்திகள் என தங்களை அடையாளப் படுத்துபவர்களாலும் முன்வைக்கப்படும் அரச எதிர்ப்பு பிரச்சாரம் குறித்து என்ன கூறுகிறீர்கள்? உங்கள் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி அந்த அகதி மக்களுக்கு உதவும் திட்டம் ஏதும் கொண்டிருந்ததா?

saintsarlseதேவதாசன்: நீங்கள் குறிப்பிடும் ஜனநாயக முற்போக்கு சக்திகள் பற்றியோ, அரச எதிர்ப்பு பிரச்சார ஊடகங்கள் பற்றியோ அபிப்பிராயம் கூறுவது எனக்கு அவசியமாகப் படவில்லை. முப்பது வருட காலமாக யுத்தம், கொலை, மிரட்டல், அச்சம் போன்ற சூழலில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட மக்கள் என்பது இவாகளுக்கு மே 18 2009 இற்கு பிறகு மறந்துபோன நிகழ்வாகத்தான் இருக்கிறது. அந்த மக்களின் இன்றைய அவசியமான தேவைகளின் கருணையில் இருந்து பிறக்க வேண்டும் கேள்விகள் என்று நான் நினைக்கின்றேன். நான் அங்குபோன பிற்பாடும், அங்குள்ள மக்களுடன் உரையாடியதன் பிற்பாடும் தான் புரிகிறது. எம்மத்தியில் அதிகமாக நடைபெறுவது ‘திண்ணைப் பேச்சு’ என்பதாக.

saintsarlse 1அகதி முகாம்களில் உள்ளவர்கள் பற்றி கூறுவதானால் நான் இலங்கை சென்ற காலத்திலேயே இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுவிட்டார்கள். யாழ்ப்பாணத்துக் குடாநாட்டை நோக்கி அனுப்பப்பட்டவர்களில் பலருக்கு யாழ்ப்பாணம் புதியதொரு பிரதேசமாகவே இருக்கிறது. தமது தலைமுறையினர் அப்பகுதியில் பிறந்தவர்கள் என்ற காரணம் அறியப்பட்டதாலேயே யாழ்ப்பாணம் நோக்கி அவர்கள் அனுப்பப்பட்டுள்ளார்கள். மீதி இருக்கக் கூடியவர்களில் பெரும்பாலானவர்கள் மலையக மக்களாகும். அவர்களால் மலையகத்துக்கு திரும்பமுடியால் உள்ளது. அவர்கள் வாழ்ந்த வன்னிப்பிராந்தியத்தில் கண்ணி வெடிகள் அகற்ற தாமதிப்பதால் அம்மக்கள் முகாம்களில் முடங்கிப் போயுள்ளனர்.

saintsarlse2வன்னியில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பலரிடம் என்னால் உரையாடக்கூடியதாக இருந்தது. அவர்கள் பட்ட துன்பங்கள், துயரங்களை விபரிப்பதானால் ஒரு பெரிய புத்தகமே எழுதலாம். ஆனாலும் அவர்களிடம் மறுவாழ்விற்கான அத்தியாவசியமான பணம், பொருட்கள் என்பன கணிசமாக கிடைத்து வருகின்றதையும் காணக்கூடியதாக இருந்தது. சர்வதேச நிறுவனங்களும், அரசும், மற்றும் சமூக அக்கறையாளர்களாலும் மேற்படி உதவிகள் கிடைத்து வருகிறது. வன்னி தவிர வடபகுதியில் சொந்தமான வாழ்விடங்கள் இல்லாததன் காரணத்தால் பலர் தமது உறவனர்களுடனும். அரசினால் உருவாக்கப்பட்ட தற்காலிக கூடாரங்களிலும் வாழ்கின்றனர். அரச நிறுவனங்களின் பணியாளர்கள் வன்னிக்கு விரைவாக சென்று தமது பணிகளை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொளள்ப்பட்டுள்ளனர். ஆனால் சாதாரண மக்களோ மீண்டும் வன்னியில் யுத்தம் ஏற்பட்டுவிடுமோ என்னும் அச்சம் காரணமாக அங்கு செல்வதற்கு அவர்கள் தயங்குவதையும் என்னால் உணரக்கூடியதாக இருந்தது.

saintsarlse 3வன்னி அகதி மக்களுக்காக எமது தலித் சமூக மேம்பாட்டு முண்ணனியின் ஆதரவாளர்களிடமிருந்து பெறப்பட்ட சிறதொகையை நான் கொண்டு சென்றேன். அவ்வுதவியை வன்னி அகதி மக்களுக்கு என்னால் பயன்படுத்த முடியவில்லை. யாழ்நகரிலுள்ள ‘திருநகர்’ எனும் ஊரிலுள்ள சென் சாள்ஸ் எனும் பாடசாலையில் உள்ள மாணவர்களுக்கான சில அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்காக அத்தொகையை நான் பயன் படுத்தவேண்டி ஏற்பட்டது. காரணம் அப்பாடசாலையில் மிக வறுமைப்பட்ட தலித் மாணவர்கள் கல்வி கற்பதோடு, அக்கல்லூரியில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதையும் என்னால் நேரில் காணக்கூடியதாகவும் இருந்தது. அங்கு மதிய உணவு வழங்கப்படும்போது ஒரு சிறுமி தனக்கு கிடைத்த இரண்டு கவள உணவையும் தான் சாப்பிடாது பத்திரப்படுத்தி தனது பையுக்குள் வைப்பதைப்பார்த்து நான் கேட்டேன் ஏன் நீங்கள் சாப்பிடவில்லையா என்று. அதற்கு அந்தச் சிறுமி அம்மா வேலையால் வந்து சமைக்க நேரம் செல்லும் அது தான் நான் தங்கச்சிக்கு கொஞ்சம் கொண்டு போறேன் எனக் கூறியது. அப்படி மிக வறுமையிலுள்ளவர்களே அப்பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார்கள்.

P1020866கற்சுறா: நீங்கள் முன்நாள் தலித்போராளிகள் யாரையாவது சந்தித்தீர்களா? அவர்கள் யார்? இருப்பின் அவர்களது யுத்தகால அனுபவங்களும், சமூகம் சார்ந்த மனநிலையும் எவ்வாறுள்ளது?

தேவதாசன்: ஆம் தலித் போராளிகள் பலரை சந்தித்தேன். அவர்களில் படைப்பாளி தெணியான், மற்றும் இராஜேந்திரன், அன்ரனி மாஸ்டர் போன்ற முன்னோடிகளையும் சந்தித்தேன். அவர்களை சந்திப்பதும், அவர்களுடன் உரையாடுவதும் எனது பயணத்தின் முக்கிய நோக்கமாகவும் இருந்தது. சாதிய விடுதலைப் போராட்டத்தில் எதிர்கொண்ட பல அனுபவங்களை அவர்களுடனான உரையாடல் மூலமாக அறிந்துகொண்டேன்.

தமிழீழ விடுதலைப் போராட்டமானது ஆயுதப்போராட்டமாக மாறிய பின் போராளிக்குழுக்களின், குறிப்பாக விடுதலைப் புலிகள் சாதிய விடுதலை இயக்கங்களை தடை செய்த பின்னர் பல சாதிய விடுதலைப் போராளிகள் வாய் மூடி மௌனமாக்கப்பட்டதாகவும், அவர்களில் பலர் கிழக்கு மாகாணம், கொழும்பு போன்ற பகுதிகளில் மறைந்திருந்ததாகவும் தெரிவித்தனர். தமக்கான தலைமை ஒன்று இல்லையே என்பதும், தாம் தொடர்ந்தும் அனாதைகளாக ஆக்கப்பட்டிருக்கின்றோம் என்ற ஆதங்கமும் அவர்களிடத்தில் மேலோங்கியிருப்பதை காணக்கூடியதாக இருந்தது. மேலும் சிறுபான்மைத் தமிழர் மகாசபை, தீண்டாமை வெகுஜன இயக்கம் போன்ற அமைப்புகளின் அவசியம் இன்றும் உணரப்படுகின்றது.

P1020850.JPGகற்சுறா: யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் ஊடகங்களை நீங்கள் அணுகும் வாய்ப்பிருந்ததா? யுத்தத்திற்கும் புலிகள் அழிவிற்கும் பிற்பாடு அங்குள்ள பத்திரிகைகளின் அடிப்படை சார்பு நிலை எவ்வாறு பிரதிபலிக்கிறது?

தேவதாசன்: யாழ்ப்பாணத்திலுள்ள ஊடகங்கள் என்பது உயர் சாதியினரின் அபிலாசைகளை பிரதிபலிக்கும் நிறுவனமாகவே இயங்கி வருகிறது. அதற்கு பல உதாரணங்களைக் கூறலாம். கடந்த 13-12-2009 இல் இருந்து சிறுபான்மைத் தமிழர் மகாசபை தனது சமூகப் பணிகளை மேற்கொள்ள இருக்கின்றது என்பதான அறிக்கை ஒன்றை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் சகல பத்திரிகைகளுக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தும் அது பற்றிய செய்தியை அவர்கள் இதுவரை வெளியிடவில்லை. தெங்குப் பனம்பொருள் உற்பத்தி விற்பனைக் கூட்டுறவுச் சங்கம் கடந்த 12-12-2009 இல் மாபெரும் எழுச்சி மாநாடொன்றை நடாத்தியது. அம்மாநாட்டில் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு தமது தேவைகளையும், உணர்வுகளையும் வெளிப்படுத்தினர். இம்மாநாட்டிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆளுநர், பல்கலைக்கழக துணைவேந்தர் என பல ஆய்வாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்விடயத்திற்கு எந்தப்பத்திரிகைகளும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

அன்று புலிகளின் தேசியத்திற்கு புகழ் பாடியவர்கள் இன்று சேர்.பொன். இராமநாதனதும், ஆறுமுநாவலரதும் சைவத்தையும், தமிழையும் போற்றிப் புகழ்பாடி தமது பத்திரிகைகளின் பக்கங்களை நிரப்பி வருகின்றார்கள். சார்பு நிலை என்பது பற்றி கேட்டீர்கள் நான் முன்னர் குறிப்பிட்டது போல் யாழ் மேலாதிக்கத்தின் மன நிலையிலிருந்துதான் பத்திரிகைகள் செயல்படுகின்றது. வெளிப்படையாகவே சொல்வதென்றால் அனைத்துப் பத்திரிகைகளும் சாதி காப்பாற்றும் பத்திரிகைகளாகவே உள்ளது.

P1020852.JPGகற்சுறா: « இத்தனை ஆண்டுகால போராட்டத்தின் விளைவாக தமிழர்களை அவர்களுடைய எதிரிகளிடம் கையளிப்பதில்தான் முடிந்திருக்கிறது. கோட்டையிலும், பலாலியிலும், ஆனையிறவிலும் நின்ற இராணுவத்தை எங்கள் வீட்டு முற்றத்திலும் கோடியிலும் கொண்டு வந்து நிறுத்திவிட்டு அவர்கள் போய்விட்டார்கள்…கடிநாயாக இருந்தாலும் அவர்கள் (புலிகள்) காவல் நாயாக இருந்தவர்கள் » என்பதாக தொடர்ச்சியான தமிழ்-சிங்கள இனவாதத்தை வலுப்படுத்திப் பேணும் வகையிலும், தமிழ்த் தேசிய மனநிலை கொண்டதுமான கட்டுரை ஒன்றை (நிலாந்தன் என்பவர் எழுதியது) பல புகலிடப் புலி எதிர்ப்பாளர்கள் தமது தோள்களில் காவித்திரிகின்றனர் (இணையங்களில் மீழ் பிரசுரிப்பு) உங்கள் யாழ் பயண அனுபவத்தில் அங்குள்ள மக்கள் தாங்கள் தோற்று விட்டதாகவும். தமிழ்த் தேசிய விடுதலையின் அவசியம் கருதுபவர்களாகவும்; இருக்கிறார்களா?

P1020855.JPGதேவதாசன்: சிரிக்கிறதா…அழுகிறதா…தெரியவில்லை. புலிகள் கடி நாயாகவும், காவல் நாயகவும் இருந்ததென்பதென்னவோ உண்மைதான். அது எந்தவகையிலென்றால் வடக்கு கிழக்குக்கு வெளியில் இருந்த தமிழர்களுக்குத்தான் புலிகள் கடி நாயாகவும், காவல் நாயாகவும் இருந்துள்ளார்கள். கொழும்பில் இருக்கக்கூடிய சிலர் கருதினார்கள் புலிகள் இருப்பதினால் தான் கொழும்பில் தமிழர்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல் நடத்தவில்லை என்றும். புலிகள் இல்லை என்றால் தாங்கள் சிங்கள அரசாலும் சிங்கள காடையர்களாலம் அழிக்கப்பட்டிருப்போம் என்றும்.

அத்தோடு புகலிடப் பெரும்பான்மை தமிழ்த் தேசிய பற்றாளர்களின் வளமான-பாதுகாப்பான இருப்புக்கும் வசதிகளுக்கும் புலிகள் கடி நாயகவும், காவல் நாயாகவும் இருந்திருக்கிறார்கள். ஆனால் வடக்குக்-கிழக்கு வாழ் மக்களைப் பொறுத்தவரை அரசபடைகளையும் , புலிகளையும் ‘கடி நாயாக’ மட்டுமே பார்த்தார்கள். அங்கு வாழ் மக்களிடம் தாம் தோற்று விட்டதாகவோ, தமிழ் தேசிய விடுதலை என்பது அவசியம் என்ற கருத்தோ நிலவுவதைக் காணமுடியாதுள்ளது. மாறாக தாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்ற கருத்தே அவர்களிடம் மேலோங்கி நிற்கிறது.

P1020857.JPGகற்சுறா: மகிந்த அரசு மீதான விமர்சனங்களையும், தமிழ் மக்களின் அரசியல் தீர்வு, சுயநிர்ணயம் என்றெல்லாம் பேசப்படுவதையும் நீங்கள் எப்படி எதிர்கொள்கின்றீர்கள்?

தேவதாசன்: முதலில் ஒருவிடயத்தில் நாம் கவனமாக செயல்படவேண்டும். அதாவது எதிர்காலத்தில் எந்தவகையிலும் இனவாத உணர்வுகள் பரவாத வகையில் எமது செயல்பாடுகள் அமையவேண்டும். எந்தத் தலைவர்களையும, எந்தக் கருத்தியலையும் நாம் தொடர்ச்சியாக கொண்டாடிக் கொண்டிருக்கமுடியாது. எமது சமூகம் பல்வேறு குறைபாடுகளைக் கொண்ட சமூகமாக இருக்கிறது. குறிப்பாக எம்மத்தியில் நிலவும் சாதிய ஒடுக்கு முறைகளின் அடிப்படைக்காரணிகளை கண்டறிவதில் எமது கல்விமான்களில் கூட பல குறைபாடுகள் நிலவுகின்றது. அதையெல்லாம் நாம் தொடர்ச்சியாக பேசி உரையாடவேண்டியிருக்கிறது. பல வருடகாலத்தையும், பல்லாயிரக்கணக்கான உயிர்களையும், உடைமைகளையும் இழந்து புலிகள் எமது சமூகத்தை என்ன நிலையில் விட்டுச் சென்றுள்ளார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். பல்வேறு சமூக-சிந்தனை வளர்ச்சிக்கு தடையாக இருந்தது புலிகள். அந்த நிலை இன்று மாறியுள்ளது. இந்த மாற்றத்திற்கான காரணம் மகிந்த ராஜபக்ச என்பதுதானே உண்மை.

இலங்கையில் வாழும் மற்ற இனங்கள் சிங்கள மக்கள் உட்பட, எல்லாவித நிறைவுடனும் வாழ்கின்றார்கள் என்று கூறிவிட முடியாது. கடந்த காலங்களில் தமிழ் அரசியல் தலைமைகளானது தமிழ் பேசும் மக்களின் அனைத்துப்பிரிவினரின் நலன்களின் அடிப்படையில் தமது அரசியலை முன்னெடுத்தவர்களல்ல. தமது மேட்டுக்குடி நலன்கள் சார்ந்த அரசியலையே அவர்கள் முன்னெடுத்தவர்கள். அவர்களின் அதே அரசியல் நிலைப்பாட்டில் தீவிரம் போதாது என்ற குறைபாட்டின் அடிப்படையில்தான் பிற்பாடு இளைஞர்கள் அவர்களது அரசியலை ஆயுங்களுடன் இணைத்து மேற்கொண்டார்கள். முன்னைய தலைமைகள் மேற்கொண்ட அரசியல் சிந்தனைப் போக்கை இளைஞர்கள் கண்டறிய முற்படவில்லை.

P1020842.JPGஇருப்பினும் இடையில் பல்வேறு இயக்கங்கள் சர்வதேச முற்போக்கு இடதுசாரி கருத்தியலைப் பயின்று இலங்கையிலுள்ள அனைத்து ஒடுக்கப்படும் இனங்களின் விடுதலையைக் கருத்தில் கொண்டும் தமது செயல்பாடுகளை மேற்கொண்டார்கள். ஆனால் துரதிஸ்டவசமாக புலிகளின் அராஜக நடவடிக்கைகளால் அவர்கள் அப்பணிகளை தொடர்ந்து பேணமுடியாத சூழல் நிலவியது.

இறுதியில் புலிகள் அழியும் வரை குறந்தபட்சம் பல்வேறு கருத்துக்களையும் பேசுவதற்கான ஒரு ஜனநாயகச் சூழல் எமது பிரதேசங்களில் ஏற்படவேண்டும் என்பதே அடிப்படைத் தேவையாக இருந்தது. இந்த இடைப்பட்ட காலங்களில்தான் நாம் எமது அரசியல் சமூக வராலுறுகளை சீர்தூக்கிப் பார்க்க முற்பட்டோம். எமது இதுவரை கால அரசில் வரலாற்றுச்சாதனை என்ன என்பதை நாம் நிதானத்துடன் சிந்தித்துப் பார்க்கவேண்டும். எமது இதுவரை கால அரசியல் சாதனை என்பது தமிழ் மக்களை இனவாதக் கருத்தியலுக்குள் பேணிப் பாதுகாத்துக் கொண்டதேயாகும்.

இவ்வாறான போக்கு வருங்காலங்களில் தவிர்க்கப்படவேண்டும். எனவே மகிந்த அரசு, தமிழ் மக்கள் பிரச்சனை என்கின்றபோது தமிழ் என்கின்ற அடையாளத்தை நாம் முற்றாக தவிர்க்க எண்ணுகின்றோம். கிழக்கைப்போல் வடக்கிலும் மாகாண அதிகாரங்கள் பெறப்படவேண்டும். கிழக்கில் மாகாண அரசு நிறுவப்பட்டபோதும் அதிகாரங்கள் முழுமையாக அமுல்படுத்தப்படாமல் மகிந்த அரசு தட்டிக்கழித்து வருவதையும் நாம் காண்கின்றோம். எனவே மாகாணங்களுக்கான நிறைவான அதிகாரங்களை நாம் பெற்றுக்கொள்ள போராடுவதும். அதேபோல் இலங்கையில் வாழும் அனைத்துச் சிறுபான்மை இனங்களும் கௌரவமாக நடத்தப்பட வேண்டும். குறிப்பாக மலையக மக்களுக்கு நாம் இளைத்த கொடுமைகளுக்கு பிராயச்சித்தம் தேடியாகவேண்டும். இவ்வாறாகத்தான் எமது அரசிற்கு எதிரான போராட்டங்கள் அமையும். இதனூடாக தழ்பேசும் மக்களின் பிரச்சனைகளுக்கும் தீர்வுகளைக் கண்டடையமுடியும் என நம்புகின்றோம்.

P1020823.JPGகற்சுறா: இலங்கையில் புலிகள் அழிக்கப்பட்ட பிற்பாடு பல்வேறு புலி எதிர்ப்பாளர்கள் இலங்கை சென்று வரும் வாய்ப்புகள் நிலவுகிறது. அந்த வகையில் இந்தியாவிலிருந்தும், ஐரோப்பிய நாடுகளிடமிருந்தும் பல புலி எதிர்ப்பாளர்கள், ஜனநாயகத்தை வலியுறுத்திப் பேசி வருபவர்கள் இலங்கை சென்று வந்துள்ளனர். இருப்பினும் அவர்கள் மிகவும் ஆவேசம் கொள்கின்றனர். புலிகள் எவ்வாறான ஜனநாயக மறுப்பைக் கடைப்பிடித்து வந்தார்களோ அதற்கு நிகரான ஒடுக்குமுறைகளை இலங்கை அரசு தனது இராணுவத்தின் மூலமாக மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் ஒரு புகலிட ஜனநாயகப் பற்றாளர் பி.பி.சி ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார் இவ்வாறு. « .”You need to wait at least three hours to board the plane. And all the buses only leave once a day, so that security officials could check the buses at once and relax for the rest of the day,” Mr Kumar says.”The biggest mistake of the Tamil Tigers was not to allow any other Tamil voice to operate in their territory.”But the irony is that the government is now behaving in the same way as the Tamil Tigers, and I could not see any attempt at reconciliation or to create a vibrant democratic society in Jaffna,” he said ».‘’தம்மை இரணுவம் விமானம் ஏற மூன்று மணிநேரம் காக்கவைத்துவிட்டது. புலிகளின் மிகப்பெரிய தவறு மாற்றுக்குரல்களுக்கு அவர்கள் விதித்த தடை உத்தரவாகும். ராஜபக்ச அரசாங்கமும் அதே பாணியில் தான் நடந்து கொள்கிறது. யாழ்ப்பாணத்தில் ஒரு ஜனநாயக சமூகம் தோன்ற முடியாதவாறு அரசாங்கம் நடந்து கொள்கின்றது.’’ இவ்வாறு மேற்படி பேட்டிகளும் கொடுத்துவருகிறார்கள். அதுபற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

தேவதாசன்: இலங்கையில் என்ன உலகத்தில் எங்கையுமே நாம் எதிர் பார்க்கும், உண்மை சொல்லப் போனால் நாம் கனவு காணும் நிறைவான, திருப்திகரமான ‘ஜனநாயகம்’ ஒன்று கிடைக்கப் போறதில்லை. ஆனால் இலங்கையில் இன்று பேசுவதற்கும், எழுதுவதற்கும் பயம் இன்றி நடமாடுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. இந்த சூழலை நாம் பயன்படுத்தி வளர்த்தெடுக்கவேண்டும்.

P1020753விமான நிலையத்தில் மூன்று மணித்தியாலம் தாமதிப்பதென்பது ஜனநாயக மறுப்பாக ஏற்றுக் கொள்ள முடியாது. அது இன்று ஒரு நிர்வாகப் பிரச்சனையாக உள்ளது. அது இலங்கைக்கானது மட்டுமல்ல. விமான நிலையத்தில் தாமதிப்பதென்பது இன்று உலகப் பிரச்சனையாக உள்ளது. அதற்கு நான் பெரிதாக விளக்கம் தரத்தேவையில்லை. ஐரோப்பாவில் உள்ள ஜனநாயகத்தையும், முப்பது வருடங்களாக யுத்தம் நடந்த இலங்கையில் இருக்கும் ஜனநாயகத்தையும் பிரித்தறிதலில் தான் சிக்கல் வருகிறது. ஆனாலும் சகலரும் தாம் தாம் விரும்பிய அரசியலை மேற்கொள்வதற்கான கதவு திறக்கப்பட்டுள்ளது. புலிகளின் யுத்தத்தையும், கொலைகளையும் அரசியலையம் நியாயப்படுத்தி வாக்காளத்து வாங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று யாழ்ப்பாணத்தில் கூட்டங்கள் நடத்துகின்றது. தமது வழமையான அரசியலைச் செய்கின்றது. இது வந்து ஒரு ஆரோக்கியமான சூழலாகத்தான் நான் பார்க்கின்றேன். எமக்கு தமிழ்த் தேசிக் கூட்டணியோடு கோபமும், வெறுப்பும், அவர்களது அரசியலோட உடன்பாடும் இல்லாது போனாலும் கூட அவர்கள் இன்று சுதந்திரமாக அரசியல் செய்வதென்பது ஒரு ஜனநாயக அம்சமாகத் தான் நான் கருதுகின்றேன்.

P1020752.JPGகற்சுறா: ஈழத்துத் தமிழ் சமூகம் கடந்த 30 வருடமாக கொடிய யுத்தத்திற்குள் வாழ நிர்ப்பந்திக்கப்ட்டது. 60களில் எழுந்த சமூகவிடுதலை சாதிய விடுதலை போராட்டங்களெல்லாம் 80களில் எழுந்த தேசியவிடுதலை போராட்டத்திற்குள் முடங்கியது வரலாறு. இன்று இத்தனை அழிவுகளுக்குப்பின்னால் ஈழத்தில் சாதிய சிந்தனை எப்படியிருக்கிறது. ஆரம்பகாலங்களில் இருந்ததுபோல் இருக்கிறதா? அல்லது வீரியம் குன்றியிருக்கிறதா?

தேவதாசன்: முதலில் நாம் எமது சமூக விடுதலை குறித்துப் பேசுவதானால் அது அரசியல் பொருளாதார அடிப்படையில் இருந்து நோக்குவதற்கு முன்பாக எமது சமூகம் ஒரு சாதிய சமூகம் எனும் புரிதலில் இருந்து நோக்கவேண்டும். எமக்கிடையிலான பிளவுகளும், உறவுகளும் சாதிய உணர்வுகளால் பேணப்பட்டு வருகிறது. நாம் சிங்கள அரசுடன் போராடி எமக்கு அரசியல் விடுதலையையோ, பொருளாதார விடுதலையையோ நாம் பெற்றுவிடுது இலகுவாக இருக்கும். ஆனால் நாம் மேற்கொண்ட சமூக விடுதலைக்கான முயற்சிகள் 70 பிற்பகுதியுடன் தடுக்கப்பட்டுள்ளது. எமது சமூகமே சாதிய சமூகமாக இயங்கும் நிலையில் சாதிய சிந்தனையில் வீரியம் குன்றியிருக்கின்றதா? கூடியிருக்கின்றதா எனும் கேள்விக்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்.

கற்சுறா: ஈழத்தில் வடக்குக் கிழக்கு பிரிந்தபின் கிழக்கு மாகாணம் தனித்த நிர்வாகத்தின் கீழ் செயற்பட்டுவருகிறது. வடக்கிலும் புதிய நிர்வாகம் செயற்படத்தொடங்கி அபிவிருத்திகள் பலதரப்பாலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் கிளிநொச்சி முல்லை போன்ற வன்னி மாவட்டங்களது எதிர்காலம் யார் கையில்? கொடியயுத்தம் அழித்த தடையத்திலிருந்து அந்த மக்களை மீட்க யார் கைகொடுப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? அந்த மக்களை இன்னுமொருதரம் தமது அரசியலுக்காக யாரும் பயன்படுத்த முனைவார்களா? ஈழத்து தள நிலவரம் நீங்கள் பார்த்தளவில் எப்படியிருக்கிறது?

தேவதாசன்: யாழ் மேலாதிக்கத்தின் விளைவாகவும், புறக்கணிப்புகளாலுமே கிழக்கு மக்கள் தமக்கான அரசியலை தாமே நிர்வகிப்பதற்கு முன்வந்தார்கள். கிழக்கு நிர்வாகம் அவர்கள் கைக்கு போய்விட்டது. அதேபோல் வன்னி மாவட்டமும் பின்தள்ளப்பட்டு புறக்கணிக்கப்படுமானால் வன்னி மக்கள் எதிர்காலம் அவர்கள் கைக்குத் தான் போக வேண்டும்.அதற்கு பிரிந்து போவதென்பது அர்த்தமல்ல. அங்குள்ள மக்கள் தமது அரசியலை முன்னெடுக்க வேண்டும். வன்னி மக்கள் நந்திக் கடல் ஏரியில் தத்தளித்தபோது கைகொடுத்து மீட்டதும் அரசுதான். இன்றும் அவர்களுக்கான நிவாரண உதவிகளை செய்து கைகொடுப்பதும் அரசுதான். யாருடைய அரசியலுக்கும் பயன்படாது இருக்க வன்னி மக்கள் தான் எதிர்காலத்தில் விழிப்புடன் செயல்பட வேண்டும். ஈழத்து தள நிலவரம் என்பது தற்போது பல்வேறு தளங்களிலும் ஜனநாயகப் பணிகள் புரிவதற்கு சாதகமாகவே உள்ளது.

www.thuuu.net

0 commentaires :

Post a Comment