ஆலமரம் அரசமரம்
ஆள ஒற்றைத் தேசம் வரும்.
நாலு மரம் நட்டுவைச்சா
நாளை ஒரு தோப்பு வரும்.
கோலமிட முற்றம் வரும்
கொண்ட சுற்றம் வாழ வரும்.
வாழை வைத்த தோப்புக்குள்ளே
வம்சமெல்லாம் உச்சம் வரும்.
சிகிரியாவின் சித்திரங்கள்
செந்தமிழில் பேச வரும்.
சீனன்குடா அலையசைந்தால்
சிங்களத்தின் ஓசை வரும்.
மட்டுநகர் வாவிக்குள்ளே
மீன்களுக்குப் பாட்டு வரும்.
மகாவலியில் நீர் நிறைந்தால்
திருமலையைக் கேட்டு வரும்.
கறை மறந்து பிறை நிலவு
யாழ் நரம்பை மீட்ட வரும்
கண்டியிலே மாளிகையில்
நாகதீபம் ஏற்ற வரும்.
நிரம்பாத குளம் நிரம்பி
நீண்ட நாள் இடர் உடையும்.
வரம்பெல்லாம் உருக்கிவிட்டு
வன்னியிலே பொன் விளையும்.
நமது நாடு இலங்கை.
நாம் தமிழ் பேசும் மனிதர்கள்.
புதிய அறிவியல் ஆய்வுகள்
எமது உரிமை.
இசை எமது ஆயுதம்.
யுத்தம் மட்டுமே எதிரி.
-வம்சிகன்.-
0 commentaires :
Post a Comment